மேட்டர் சீரியஸ்.. எதிர்க்கட்சி கூட்டத்தின் அதே நாள்! டெல்லியில் நாளை 38 கட்சிகளை கூட்டும் பாஜக
சென்னை: அடுத்த ஆண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்க எதிர்க்கட்சிகள் பெங்களூருவில் 2 வது கூட்டத்தை கூட்டி இருக்கும் நிலையில் அதற்கு போட்டியாக அதே நாளில் பாஜகவும் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை கூட்டுவது, எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கான முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது. எப்படி?
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 9 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்று மீண்டும் மோடி அரசு மீண்டும் ஆட்சியில் உள்ளது. அதன் பதவிகாலம் இன்னும் ஓராண்டில் நிறைவடைய இருக்கிறது.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 2024 லோக் சபா தேர்தலுக்கான கூட்டணி அமைக்கும் இப்போதே இறங்கிவிட்டன. பாஜகவை வீழ்த்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இல்லாத தேசிய கட்சிகள், அனைத்து மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து ஓரணியில் போட்டியிட முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
ஏற்கனவே காங்கிரஸுடன் மாநிலங்களில் கூட்டணியில் உள்ள திமுக, இடதுசாரிகள், சிவசேனா, மதசார்பற்ற ஜனதா தளம், தேசிய மாநாட்டு கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணியில் இல்லாத மாநிலங்களில் ஆட்சியிலும், எதிர்க்கட்சிகளாகவும் உள்ள திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளை சேர்த்து கூட்டணி அமைக்க திட்டமிட்டப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து பிரம்மாண்ட கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மூத்த தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின், பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதேபோல், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திரிணாமூல் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அர்விந்த் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா தலைவர் ஹேமந்த் சோரன், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், சிவசேனா (உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே, உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
அந்த கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் ஓரணியில் போட்டியிடுவதற்கும் முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று கர்நாடக தலைநகர் பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் கூட்டப்பட்டு உள்ளது. இதில் கடந்த முறை கலந்துகொண்ட கட்சிகள் மட்டுமின்றி மேலும் சில கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இன்று கூடிய கூட்டத்தில் தொகுதி பங்கீடு, கூட்டணிக்கு பெயர் வைப்பது என பல்வேறு விவரங்கள் விவாதிக்கப்பட்டு உள்ளன.
பாட்னாவில் நடைபெற்ற கூட்டத்தை கண்டுகொள்ளாததைபோல் காட்டிக்கொண்ட பாஜக பெங்களூரு கூட்டத்தை சீரியசாக எடுத்துக்கொள்வதைபோல் தெரிகிறது அதன் அடுத்தடுத்த நகர்வுகள். குறிப்பாக நாளை எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறும் அதே நாளில் டெல்லியில் தங்கள் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை கூட்டுவதே இதற்கு ஒரு உதாரணம்.
குறிப்பாக தங்கள் கூட்டணியிலேயே அதிக கட்சிகள் உள்ளதைபோல் காட்டுவதற்காக சிறிய சிறிய கட்சிகளையும் அழைத்து 38 கட்சிகள் நாளை பங்கேற்க உள்ளதாக பாஜக கணக்கு காட்டுகிறது. தமிழ்நாட்டில் அதிமுக, பாமகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதில் பாமக பாஜக கூட்டணியில்தான் உள்ளதா என்ற சந்தேகம் பலருக்கும் எழும் அளவுக்கு பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications