பிரதமர் மோடி பங்கேற்ற என்டிஏ பொதுக்கூட்டம் மேடையில் மிஸ்ஸான பாரிவேந்தர்.. ஏன் இல்லை தெரியுமா?
சென்னை: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற என்டிஏ பொதுக்கூட்டம் மேடையில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் இடம்பெறாதது பேசுபொருளாகி இருக்கிறது. பாரிவேந்தர் என்டிஏ மேடையில் ஏற்றப்படாதது ஏன் என்ற கேள்விக்கு விடை கிடைத்திருக்கிறது. இதனை விரிவாக பார்க்கலாம்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், என்டிஏ கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, டிடிவி தினகரன், ஜிகே வாசன், ஜான் பாண்டியன், ஏசி சண்முகம், பூவை ஜெகன்மூர்த்தி, திருமாறன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

ஆனால் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் அந்த பொதுக்கூட்டம் மேடையில் இல்லை. அதற்கு முந்தைய நாள் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் பாரிவேந்தர் சந்திப்பு நடத்தி இருந்தார். அந்த சந்திப்புக்கு பின் பாரிவேந்தர் பேசுகையில், என்டிஏ கூட்டத்தை பொறுத்தவரை எனக்கு ஒரு குடும்பம் மாதிரிதான்.
எங்களுக்கு எத்தனை தொகுதி கொடுத்தாலும் பொருட்டல்ல. இந்த முறை தனிச் சின்னத்தில் மட்டுமே போட்டியிடுவோம். எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கக் கூடிய இலவச அறிவிப்புகளில் எனக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்தார். அதேபோல் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் நிச்சயம் பங்கேற்போம் என்றும் கூறி இருந்தார்.
ஆனால் பொதுக்கூட்ட மேடையில் பாரிவேந்தர் மட்டும் இல்லை. இதுகுறித்து பாரிவேந்தர் பேசுகையில், ஏறத்தாழ ஒரு 5 நிமிடம் தான் தாமதம். என்னை வெளியே நிறுத்திவிட்டார்கள். 800 மீட்டர் மட்டுமே மாநாட்டு பந்தலுக்கான தூரம். தேவையில்லாத ஒரு அடக்குமுறையால் நாங்கள் வெளியே நிறுத்தப்பட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், என்டிஏ கூட்டணியில் 6 தொகுதிகள் வரை கேட்கலாம் என்று இருக்கிறோம். அதனை நிச்சயம் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி மாநாட்டு பந்தலுக்கு வந்த அதே நேரத்தில் பாரிவேந்தரும் மாநாட்டு திடலை நெருங்கி இருக்கிறார். இதனால் பிரதமர் மோடியின் பாதுகாப்பு கருதி போலீசார் பாரிவேந்தரை அனுமதி மறுத்திருக்கின்றனர்.
மேலும் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு பாரிவேந்தர் குறித்த நேரத்திற்கு வராமல் தாமதமாக வந்திருப்பதும் பேசுபொருளாகி இருக்கிறது. இதனால் அதிமுக மற்றும் பாஜக தொண்டர்களே பாரிவேந்தரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications