பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!
சென்னை: அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாஜக 27 தொகுதிகளில் போட்டியிடும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். டிடிவி தினகரனின் அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பாமகவுக்கு என்.டி.ஏ கூட்டணியில் 18 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ள சூழலில், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்தச் சூழலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவின் இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று சென்னைக்கு வருகை தந்தார். சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்களோடு வந்தார் பியூஷ் கோயல். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் வருகை தந்தனர்.
இதையடுத்து, என்.டி.ஏ கூட்டணியில் ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. பாஜகவுக்கு - 27 தொகுதிகள், அமமுகவுக்கு -11 தொகுதிகள், பாமகவுக்கு -18 தொகுதிகள், ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகளும், பாஜகவுக்கு 20 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன.












Click it and Unblock the Notifications