சிக்கலான பூந்தமல்லி-போரூர் ரூட்டிலா இப்படி? சென்னை மெட்ரோ சொன்ன குட்நியூஸ்
சென்னை: சென்னை மெட்ரோ ரயிலின் 2-ம் கட்ட திட்டத்தில் பூந்தமல்லி-போரூர் இடையேயான வழித்தடத்தில் இதுவரை 55 சதவீத பணிகள் நிறைவடைந்திருக்கிறது. பூந்தமல்லி, போரூர் வழித்தட மெட்ரோ பணிகள் 2025 ஆம் ஆண்டின் இறுதியில் முடிந்து, ரயில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த 2015ம் ஆண்டு முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவையை சென்னையில் தொடங்கியது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்ட சேவை விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை, திருமங்கலம் கோயம்பேடு, வடபழனியாக ஒரு தடமும், தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு, நந்தனம், பரங்கிமலை என இன்னொரு வழித்தடத்திலும் இருக்கிறது.

ஆலந்தூரில் இரண்டு மெட்ரோ பாதையும் இணைகிறது. இதேபோல் சென்டரல் ரயில் நிலையத்தில் இரண்டு பாதையும் இணைகிறது. மெட்ரோ ரயிலுக்கு மக்களிடையே தற்போது மிக அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்க தொடங்கிவிட்டார்கள். வரும் காலத்தில் பேருந்து சேவைக்கு மாற்றாக மெட்ரோ ரயில்கள் இருக்க போவது உறுதியாகி உள்ளது.
இதையடுத்து சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ பணிகள் 116.1 கி.மீ. நீளத்துக்கு மேலும் 3 வழித்தடங்களைக் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இதில் வழித்தடம் 3 (45 கி.மீ) மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரை அமைகிறது. இதில் 19 உயர்நிலைப் பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள், 28 சுரங்கப்பாதை ரயில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைகிறது
வழித்தடம் 4 இல் (26.1 கி.மீ) கலங்கரை விளக்கம் மெட்ரோ ரயில் நிலையம் முதல் பூந்தமல்லி பணிமனை வரை நடைபெறுகிறது. 18 உயர்நிலைப் பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள், 9 சுரங்கப்பாதை ரயில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமையப்போகிறது.
வழித்தடம் 5 (44.6 கி.மீ) மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரை பணிகள் நடைபெறுகிறது.இதில் 39 உயர்நிலைப் பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள், 6 சுரங்கப்பாதை ரயில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைகிறது.
இதில் வழித்தடம் 4 இல் (26.1 கி.மீ) கலங்கரை விளக்கம் மெட்ரோ ரயில் நிலையம் முதல் பூந்தமல்லி பணிமனை வரை பணிகள் மிக முக்கியமானது ஆகும்.சென்னையின் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள உள்பகுதிகள் ஆகும். கிட்டத்தட்ட சென்னையின் மையப்பகுதிகளை வழியாக செல்லும் இந்த வழித்தடம் ரெடியானால் சென்னையின் தோற்றமே மாறிவிடும். சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு இந்த 4வது வழித்தடமே முக்கிய காரணம் ஆகும்.
இந்த சூழலில் பூந்தமல்லி-போரூர் இடையேயான வழித்தடத்தில் இதுவரை 55 சதவீத பணிகள் நிறைவடைந்திருக்கிறது என்று மெட்ரோ அதிகாரிகள் கூறினர். சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் அதிகாரிகள் கூறும் போது, இந்த பாதையில் இதுவரை 316 தூண்களின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளது., மீதமுள்ள பணிகளை விரைவில் முடிக்க ஒப்பந்ததாரரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பாதி பணிகளை முடித்துவிட்டோம். 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் பயணிகள் சேவைக்கு இந்த பாதையை தயார் படுத்த விரும்புகிறோம். அதற்கான ஆய்வுகளை நடத்தி வருகிறோம். அடுத்த மாதத்திற்குள் பூந்தமல்லி வழித்தடப் பாதையில் ரயில் பாதை அமைக்கத் தொடங்குவார் . குறித்த காலக்கெடுவிற்குள் பணிகளை பூர்த்தி செய்தால் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இந்த பணி முடிவடையும் என அதிகாரிகள் கூறினர்.
இதனிடையே 116 கிமீ நீளமுள்ள சென்னை மெட்ரோ ரயிலின் 2-வது கட்டத் திட்டத்தின் மொத்தச் செலவு ₹61,843 கோடி ஆகும். பூந்தமல்லி மற்றும் போரூர் இடையேயான இந்த 7.94 கிமீ தூரத்துக்கு ₹1,147 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டு பணிகளும் நடந்து வருகிறது. தற்போது உள்ள சூழலில் கட்டுமான பணிகள் முடியவே இன்னும் ஓராண்டு ஆகுமாம். அதன்பிறகு தண்டவாளம் அமைப்பது, கம்ப்யூட்டர் சிக்னல் வழங்குவது போன்ற பணிகள் செய்யவும் குறைந்தது ஓராண்டுகள் ஆகும் என்கிறார்கள். அதற்கு தொழிலாளர்கள் அதிகப்படுத்த வேண்டியது அவசியம் என்கிறார்கள். அப்போது தான் சென்னையின் மையப்பகுதியில் உளிள போக்குவரத்து நெரிசல் சிறிது குறையும் என மெட்ரோ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications