கோவை பாலக்காடு மக்கள் ரிலாக்ஸ்.. மரப்பாலம் விரிவாக்கம் பணியில் செம அப்டேட்
கோவை: இந்தியாவில் வேகமாக முன்னேறி வரும் இரண்டாம் கட்ட நகரங்களில் கோவை உள்ளது. கல்வி, தொழில்துறை, மருத்துவம், ஐடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கோவை வளர்ச்சியடைந்து வருகிறது. போக்குவரத்து நெரிசல் தான் பெரிய பிரச்சனையாக உள்ளது. தமிழகம் - கேரளா ஆகிய 2 மாநிலங்களை இணைக்கும் மரப்பாலம் சுரங்கப்பாதையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அதன் விரிவாக்கம் பணியில் தொய்வு ஏற்பட்டது. தற்போது அந்த பணிகள் மீண்டும் தொடங்கி முக்கிய அப்டேட் ஒன்றும் வெளியாகியுள்ளது.
கோவை மாவட்டம், கேரள மாநிலம் பாலக்காடு நெடுஞ்சாலை மரப்பாலம் பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து கேரளா செல்லும் வாகனங்களும், கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களும் அந்த வழியாக தான் வரும். ரயில்வே பாலம் மிகவும் குறுகலாக இருப்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் சுமார் 2 கி.மீ தொலைவுக்கு வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வருகின்றன.

மரப்பாலம் சுரங்கப்பாதை விரிவாக்கம்
இதனால் ரயில்வே சுரங்கப்பாதையை அகலப்படுத்த வேண்டும் என்பது கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். திமுக ஆட்சியில் கடந்த வருடம் மாநில நெடுஞ்சாலைத்துறை சுரங்கப்பாதையை, 4 வழியாக அகலப்படுத்தும் பணியை தொடங்கினார்கள். ரயில்வே துறையிடன் இணைந்து இந்த பணிகள் செய்யப்பட்டன. தோராயமாக பணிகளை விறுவிறுப்பாக செய்தாலும் சுமார் 2 வருடங்களில் தான் நிறைவடையும்.
இந்த பணிகள் காரணமாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சிக்கு வந்ததும் இந்த பணிகள் நிறுத்தப்பட்டன. அதிமுக ஆட்சியில் டெண்டர் கோரப்பட்டதால் அதிக மதிப்பீடு செய்யப்பட்டிருக்கும் என்று பணி நிறுத்தப்பட்டது. இது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பணிகளை விரைந்து முடித்தால் தான் அந்த வழித்தடத்தில் பயணிகள் இருவரும் பயனடைவார்கள் என்பதால் பணிகளை மீண்டும் தொடங்கி விரைந்து முடிக்க கோரிக்கை எழுந்தது.
மீண்டும் விறுவிறுப்பு
இந்நிலையில் டெண்டர் விபரங்களை ஆய்வு செய்த தமிழக அரசு, பணிகளை மீண்டும் தொடங்க உத்தரவிட்டுள்ளது. நிலம் கையெடுப்பு தொடர்பாக நெடுஞ்சாலைத் துறையின், நிலம் எடுப்பு பிரிவு அதிகாரிகள் கள ஆய்வு செய்த வருகிறார்கள். வருவாய்த்துறையுடன் இணைந்து நிலம் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து இந்தப் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மரப்பாலம் சுரங்கப்பாதை விரிவாக்கம் பணி மீண்டும் தொடங்கியிருப்பது மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், "ஓட்டு வீடுகள், கான்கிரீட் வீடுகள், ஷெட்டுகள், தென்னை, வேப்ப மரங்கள், சுற்றுச்சுவர்கள், திறந்தவெளி கிணறு, ஆழ்துளை கிணறு, தண்ணீர் தொட்டி, கழிவு நீர் தொட்டி, காலியிடங்கள், வண்டி தடம் ஆகியவை அந்த வழித்தடத்தில் உள்ளன. அந்தந்த உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் விநியோகித்துள்ளோம். இதுகுறித்து பொது அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
நிலம் கையெடுப்பு
நில உரிமையாளர்களுக்கு ஏதாவது ஆட்சேபனை இருந்தால், 30 நாட்களுக்குள் எழுத்துபூர்வமாக தெரிவிக்க வேண்டும். இதுதொடர்பாக வருகிற ஜூலை 15 ஆம் தேதி காலை 11.30 மணிக்கு, கோவை தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் இயங்கி வரும், மாநில நெடுஞ்சாலைத்துறை நிலம் எடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணை நடத்தப்படும். அதில் நில உரிமையாளர்கள் ஆவணங்களுடன் பங்கேற்று கருத்துகளை தெரிவிக்கலாம்" என்றனர்.












Click it and Unblock the Notifications