நீட் தேர்வு.. மாணவர்களுக்கு “ரிலாக்ஸ்” - கட் ஆஃப் மதிப்பெண்கள் குறைப்பு
சென்னை: நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் நீட் தேர்வுகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு இருக்கின்றன.
மருத்துவப் படிப்புகளுக்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில், மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக நீட் என்ற நுழைவுத்தேர்வை அறிமுகம் செய்தது.
இதற்கு தொடக்கத்திலிருந்தே தமிழக அரசியல் கட்சிகளும் மாணவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் இதனால் அனிதா தொடங்கி பல மாணவர்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.

நீட் தேர்வு விலக்கு மசோதா
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்குகோரி சட்டப்பேரவையில் 2 முறை தீர்மானங்களை நிறைவேற்றியும் ஆளுநர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப கால தாமதம் செய்ததால் இந்த ஆண்டும் தமிழ்நாடு மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்கவில்லை. இதனால் மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தனர்.

நீட் தேர்வு
இந்த நிலையில், இந்த ஆண்டு தேர்வு நேரம் 3 மணி நேரம் 20 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டது. பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜூலை 17 ஆம் தேதி நடைபெற்றது. மே 6 ஆம் தேதியுடன் தேர்வுக்காக விண்ணப்பம் நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் 1.32 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். அப்போது கேரளா போன்ற சில மாநிலங்களில் மாணவிகளின் உள்ளாடையை தேர்வு அதிகாரிகள் கழற்ற சொன்னதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்வு முடிவுகள்
சிபிஎஸ்இ முடிவுகள் வராமல் இருந்த காரணத்தால் நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் அந்த முடிவுகள் வெளியானதை அடுத்து நேற்று பிற்பகல் 12 மணியளவில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின. neet.nta.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும் என தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது.

கட் ஆஃப் மதிப்பெண்
இதில் தமிழ்நாட்டில் தேர்வெழுதிய 1,32,167 லட்சம் மாணவர்களில் 67,787 பேர் தேர்ச்சியடைந்து இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கட் ஆஃப் மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு பொதுப்பிரிவுக்கான குறைந்தபட்ச கட் ஆஃப் மதிப்பெண் 138 ஆக இருந்த நிலையில் இந்த ஆண்டு 117 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினருக்கான கட் ஆப் 108 மதிப்பெண்ணில் இருந்து 107 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications