எடப்பாடி வைத்த குற்றச்சாட்டு.. கொதித்தெழுந்த முதல்வர்.. அந்த திராணி உங்களுக்கு இல்லை.. சரமாரி பதில்
சென்னை: அதிமுக ஆட்சியில் மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்தது, அப்போதே நீட் விலக்குக்காக நிபந்தனை விதித்திருக்கலாம், ஆனால் அதிமுகவுக்கு அந்த திராணி இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவை தாக்கல் செய்யப்பட்டது. நீட் விலக்கு கோரும் சட்ட முன்வடிவு எப்போது தாக்கல் செய்யப்படும் என்று கடும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் இன்று முதல்வர் சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார். இந்த நிலையில் இந்த மசோதா தாக்கல் செய்யும் முன் அவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
அவர் தனது உரையில், நீட் ரத்து என்பது திமுகவின் தேர்தல் வாக்குறுதி. ஆனால் அதை திமுக நிறைவேற்றவில்லை. திமுக அறிக்கையால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இதனால் தேர்வை எதிர்கொள்ள முடியாததால் மாணவர் தனுஷ் தற்கொலை செய்துகொண்டார். மாணவர் தனுஷ் தற்கொலைக்கு திமுக அரசுதான் பொறுப்பு. ஆனால் மாணவரின் மரணம் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கிறார்கள், என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டசபையில் பேசினார்.

ஸ்டாலின் பேச்சு
இதையடுத்து அவையில் நீட் விலக்கு கோரும் சட்ட முன்வடிவை தாக்கல் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கொதிப்பாகபேசினார், எடப்பாடி பழனிசாமிக்கு கொதிப்புடன் பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின் தனது பேச்சில், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது கூட நீட் தேர்வு நடக்கவில்லை. நீட் தேர்வை உள்ளே கொண்டு வந்தது நீங்கள்தான். யாருடைய ஆட்சியில் நீட் தேர்வு நடந்தது என்று தெரியும். எதிர்கட்சி தலைவர் முதல்வராக இருந்த போது தான் நீட் தேர்வு நடந்தது. உங்கள் ஆட்சியில்தான் 13 மாணவ மாணவிகள் பலியானார்கள். அனிதாவின் மரணம் உங்கள் ஆட்சியின் கீழ்தான் நிகழ்ந்தது என்பதை மறக்க வேண்டாம்.

அனிதா
தொடக்கத்திலிருந்தே திமுக நீட் தேர்வை எதிர்த்து வருகிறது. இந்த நீட் தேர்வுக்கும் நாங்கள் முற்றுப்புள்ளி வைப்போம். இந்த தேர்வே அநீதியான தேர்வு. நுழைவுத்தேர்வுகளுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்த அரசுதான் திமுக அரசு. 12ம் வகுப்பு தேர்வு அடிப்படையில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். சமூக நீதியை உறுதி செய்யவும் சமத்துவம் மற்றும் சமவாய்ப்பை நிலை நிறுத்தவும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

உறுதி
திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதை நிறைவேற்றும் வகையில் இந்த முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று இந்த அவையில் நான் முன்மொழிகிறேன். நீட் தேர்வு சமத்துவமின்மையை வளர்க்கிறது. ஏழைகளின் உரிமைகள் இதில் மறுக்கப்படுகிறது. சிறப்பு பயிற்சி பெறக்கூடிய சமூகத்தின், பொருளாதார மற்றும் அதிக சலுகை பெற்ற வகுப்பினரை ஆதரிக்கிறது.

சமத்துவம்
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு மத்திய அரசு உங்களிடம் ஆதரவு கேட்ட போது, நீங்கள் மத்திய அரசிடம் நீட் குறித்து பேசி இருக்கலாம்.. அப்போது நீட் தேர்வுக்கு அதிமுக விலக்கு கேட்கவில்லை. மத்திய அரசுக்கு ஆதரவாகவே நீங்கள் செயல்பட்டு வந்துள்ளீர்கள். மாணவர் தனுஷின் தற்கொலைக்கு அதிமுக அரசுதான் காரணம் . அதிமுக ஆட்சியில் மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்தீர்கள். நீட் விலக்குக்காக நிபந்தனை விதித்திருக்கலாம், அந்த திராணி அதிமுகவுக்கு இல்லை. ஆனால் திமுக அரசு நீட் தேர்வில் இருந்து கண்டிப்பாக விலக்கு பெறும்.

திராணி இல்லை
பாகுபாடு காட்டுவதில் இருந்து மாணவர்களை பாதுகாக்க தமிழ்நாடு அரசு உறுதி பூண்டு உள்ளது. இதனால்தான் நீட் விலக்கு சட்டத்தை இயற்ற அரசு முடிவு செய்துள்ளது. நீட் தேர்வு காரணமாக சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறார்கள். நீட் தேர்வால் மருத்துவக் கல்வி மேம்படாது. மாணவர்களின் உயிரைக் கொல்லும் உயிர்கொல்லியாக மாறியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் அவர்களின் நம்பிக்கையும் கனவுகளும் தவிடு பொடியாகி உள்ளது. அவர்களின் கல்வி கனவை சிதைத்த நீட் தேர்வை இனியும் நடக்க விட கூடாது, என்று முதல்வர் ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications