நீட் தேர்வு.. தமிழ்நாடு அரசு குழு அமைத்தது வரம்பு மீறல்.. சென்னை ஹைகோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு!
சென்னை: நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய தமிழ்நாடு அரசு குழு அமைத்தது அதிகார வரம்பு மீறல் என்று மத்திய அரசு சென்னை ஹைகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்காக தமிழ்நாடு அரசு தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக முன்னாள் நீதிபதி ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வின் சாதக, பாதகங்களை ஆராய்ந்து இந்த குழுதான் அறிக்கை அளிக்க உள்ளது. இந்த குழு கொடுக்கும் அறிக்கையின்படி தீர்மானம் நிறைவேற்றி, அதற்கு குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் வாங்கி, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறலாம் என்று தமிழ்நாடு அரசு திட்டமிட்டு இருந்தது.
ஆனால் இந்த குழுவிற்கு எதிராக தமிழ்நாடு பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. பாஜக கரு. நாகராஜன் சார்பாக ராஜன் குழுவிற்கு எதிரான வழக்கு தொடுத்தார்.

வழக்கு ,
இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் இந்த நீட் ஆராய்ச்சி குழுவிற்கு சென்னை ஹைகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. நீட் தேர்வு குறித்து ஆராய்ச்சி செய்ய எப்படி குழு அமைக்கலாம். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது எப்படி குழு அமைக்கலாம். இதற்கு உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கேட்கப்பட்டதா என்று சென்னை ஹைகோர்ட் சரமாரி கேள்விகளை எழுப்பியது. அதோடு தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் இதில் பதில் அளிக்க வேண்டும் என்றும் கூறியது.

தமிழ்நாடு அரசு
இதில் தமிழ்நாடு அரசு அளித்த பதிலில், நீட் தேர்வு குறித்து ஆராய குழு அமைத்தது தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவு. தமிழ்நாடு அரசு இப்படி குழு அமைப்பது வரம்பு மீறல் கிடையாது. நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆராய மட்டுமே குழு அமைத்து இருக்கிறோம். அதற்கு முன்பே இதற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இது மாநில அரசின் கொள்கை முடிவு.

தலையிட முடியாது
மாநில அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது, என்று தமிழ்நாடு அரசு பதில் அளித்து இருந்தது. இந்த நிலையில், பாஜக கரு. நாகராஜன் தொடுத்த வழக்கில் மத்திய அரசு சென்னை ஹைகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசு இதில் அளித்த பதிலில், நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய தமிழ்நாடு அரசு குழு அமைத்தது அதிகார வரம்பு மீறல்.

தேசிய தேர்வு
தமிழ்நாடு அரசு நீட் தேர்வு குறித்து ஆராய குழு அமைக்க முடியாது.நீட் தேர்வு பொது நலனை கருத்தில் கொண்டு அமலுக்கு வந்துள்ளது . உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக தமிழ்நாடு அரசு செயல்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் ஏற்கனவே இந்த தேர்வுக்கு ஆதரவாக தீர்ப்பளித்து உள்ளது.

பதில் மனு
இது தேசிய அளவில் நடக்க கூடிய தேர்வு. அதனால் நீட் தேர்வு குறித்து ஆராய தேசிய மருத்துவ ஆணையத்திற்கு மட்டுமே உரிமை உள்ளது. மாநில தேர்வுகள், மாநில விவகாரங்கள் குறித்து ஆராய மட்டுமே மாநில அரசுக்கு அதிகம் உள்ளது என்று மத்திய அரசு தனது பதில் மனுவில் குறிப்பிட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications