நாளை நீட் தேர்வு! முக்கிய மாற்றம் கொண்டு வந்த தேசிய தேர்வு முகமை! மாணவர்களுக்கு நோ டென்ஷன்!
சென்னை: மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் (NEET - UG) நாளை (மே 3) நாடு முழுவதும் நடைபெறுகிறது. இந்த ஆண்டு தேர்வில் மாணவர்கள் முழுக்கை சட்டை அணியலாம் என தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது.
எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான இந்த நுழைவுத் தேர்வு, இந்தியாவின் மிகப்பெரிய போட்டித் தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. முன்பெல்லாம் 12 ஆம் வகுப்பில் மாணவர்கள் எடுத்த கட் ஆஃப் மதிப்பெண்ணை வைத்து மருத்துவ சீட் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக நீட் எனும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு நாளை நடைபெறும் இந்த தேர்வு, நாடு முழுவதும் மொத்தம் 552 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாணவர்களின் எண்ணிக்கை: இந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் 22.79 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர்.
தமிழகத்தின் நிலை: தமிழகத்தில் இருந்து சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர். இதில் சென்னையில் மட்டும் 21,000-க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத உள்ளனர்.
புதிய ஆடைக்கட்டுப்பாடுகள் (Dress Code)
கடந்த காலங்களில் ஆடைக்கட்டுப்பாடுகள் மிகக் கடுமையாக இருந்த நிலையில், அவை விமர்சனங்களுக்குள்ளாக்கப்பட்டது.இந்த முறை சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
முழுக்கை சட்டைகள்: பொதுவாக நீட் தேர்வுக்கு அரைக்கை சட்டைகளே அனுமதிக்கப்படும். ஆனால், இந்த முறை முழுக்கை ஆடைகள் மற்றும் கம்பளி ஆடைகளை (Sweaters) அணிய என்.டி.ஏ. (NTA) அனுமதி அளித்துள்ளது.
மெல்லிய ஆடைகள்: மாணவர்கள் மெல்லிய ரக உடைகளை அணிந்து வர அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மதம் சார்ந்த உடைகள்: மத நம்பிக்கையின் அடிப்படையில் குறிப்பிட்ட ஆடைகளை (உதாரணமாக: ஹிஜாப், சீக்கியர்களின் கிருபாண் போன்றவை) அணியும் மாணவர்கள், கூடுதல் பரிசோதனைக்காகத் தேர்வு தொடங்குவதற்கு முன்கூட்டியே மையத்திற்கு வர வேண்டும்.
அனுமதிக்கப்படும் பொருட்கள்
காலணிகள்: எளிமையான காலணிகள் அல்லது செருப்புகள் மட்டுமே அனுமதிக்கப்படும். தடிமனான அடிப்பாகம் (Thick soles) கொண்ட காலணிகளுக்கு அனுமதியில்லை.
தண்ணீர் பாட்டில்கள்: வெளிப்படையாகத் தெரியக்கூடிய (Transparent) தண்ணீர் பாட்டில்களை மாணவர்கள் எடுத்துச் செல்லலாம்.
மனநல ஆலோசனை மற்றும் உதவி எண்கள்
தேர்வு குறித்த பயம் அல்லது பதற்றத்தைப் போக்கத் தமிழக அரசு மற்றும் என்.டி.ஏ. சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன:
1. தமிழக அரசின் 'நட்புடன் உங்களோடு' திட்டம்:
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கத் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை டெலி-கவுன்சிலிங் (Tele-counseling) வழங்குகிறது.
உதவி எண்கள்: 14416 அல்லது 104.
2. என்.டி.ஏ. (NTA) உதவி மையங்கள்:
தேர்வு தொடர்பான சந்தேகங்கள் அல்லது ஹால் டிக்கெட் சிக்கல்களுக்குத் தேசிய தேர்வு முகமையைத் தொடர்பு கொள்ளலாம்:
தொலைபேசி: 011-40759000 / 011-69227700
தேர்வர்களுக்கு ஒரு முக்கிய குறிப்பு:
அனைத்து மாணவர்களும் தேர்வு மையத்திற்கு அட்மிட் கார்டு (Admit Card), அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றைத் தவறாமல் எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அனைத்து ஆடைகளும், உபகரணங்களும் மையத்தின் நுழைவாயிலில் கட்டாயப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்பதால், காலதாமதத்தைத் தவிர்க்க ஒரு மணிநேரம் முன்னதாகவே செல்வது சிறந்தது.












Click it and Unblock the Notifications