நெல்லை - திருச்செந்தூர் ரயில் 7 நாட்களுக்கு முழுமையாக ரத்து.. தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக நெல்லை - திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. வரும் 22 ஆம் தேதி, 23, 24, 25, 28, 29, 30 ஆகிய 7 நாட்களும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. இதே போன்று மேலும் சில ரயில் சேவைகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே பயணிகள் இதற்கு ஏற்ப பயண திட்டங்களை மாற்றியமைத்து கொள்ள அறிவுறுத்தப்படுகின்றன.
ரயில் போக்குவரத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. முக்கிய வழித்தடங்களில் இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட்டு ரயிலின் வேகத்தை அதிகரிக்கவும் ரயில்வே நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதே போன்று முக்கிய ரயில் சேவைகள் பாதிக்கப்படாதவாறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

7 நாட்கள் முழுமையாக ரத்து
அந்த வகையில் தென் மாவட்ட பகுதிகளில் ரயில் தண்டவாளம், சிக்னல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக சில ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டும், சில ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டும் உள்ளன. குறிப்பாக திருச்செந்தூர் செல்லும் பயணிகளுக்கு அதிர்ச்சி தரும் வகையில் நெல்லை - திருச்செந்தூர் இடையே இயக்கப்பட்டம் பயணிகள் ரயில் சேவை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தினந்தோறும் திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு காலை 10.10 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில் (56004) மற்றும் நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு தினமும் மாலை 4.30 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில் (56003) ஆகிய இரண்டு ரயில்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகின்றன. அதாவது வரும் 22 ஆம் தேதி, 23, 24, 25, 28, 29, 30 ஆகிய 7 நாட்களும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
நாகர்கோவில் - கச்சகுடா விரைவு ரயில்
இதே போன்று பராமரிப்பு பணிகள் காரணமாக, பாலக்காடு - திருச்சி விரைவு ரயில் (16844) வரும் 8 ஆம் தேதி தேதி பாலக்காடு - புகழூர் இடையே மட்டும் இயக்கப்படும். பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த பிறகு மீண்டும் புகழூர் - திருச்சி இடையே முன்பதிவற்ற ரயிலாக இயக்கப்படும்.
நாகர்கோவில் - கச்சகுடா வாராந்திர விரைவு ரயில் (16354) இன்று ஒரு நாள் மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்கள் வழியாக செல்வதை தவிர்த்து விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும்.
காரைக்கால் - எர்ணாகுளம் விரைவு ரயில் (16187) வரும் 8 ஆம் தேதி அன்று 10 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். வரும் 10 ஆம் தேதி சுமார் 80 நிமிடங்கள் வரை தேவைப்படும் இடங்களில் தாமதமாக நின்று செல்லும்.
திருச்சி - மயிலாடுதுறை மெமு ரயில்
இதே போன்று திருச்சி - மயிலாடுதுறை மெமு ரயில் (16834) வரும் 5 மற்றும் 8 ஆம் தேதிகளில் ஆலக்குடியில் 30 நிமிடங்கள் தாமதமாக நின்று செல்லும். சென்னை எழும்பூர் - குருவாயூர் விரைவு ரயிலானது (16127) வரும் 7 ஆம் தேதி, 20 நிமிடங்களும், 5 மற்றும் 8 ஆம் தேதிகளில் 50 நிமிடங்களும் தேவைப்படும் இடங்களில் தாமதமாக நின்று செல்லும். எனவே பயணிகள் தங்களின் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளளப்படுகிறார்கள். என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
