பிரதமர் மோடி அன்றே செய்த காரியம்! நேபாளத்தில் நடப்பது ஒருபோதும் இந்தியாவில் நடக்காது! அண்ணாமலை நறுக்
சென்னை: பிரதமர் மோடியை சர்வாதிகாரி என விமர்சிப்போருக்குக் காலம் பதில் சொல்லும் எனக் கூறிய அண்ணாமலை, சிங்கப்பூரின் முதல் பிரதமரைக் கூட அந்தக் காலகட்டத்தில் இப்படித் தான் சொன்னார்கள் எனக் கூறினார். மேலும், நேபாளத்தில் நடப்பது போன்ற வன்முறை ஒருபோதும் இந்தியாவில் நடக்காது என குறிப்பிட்ட அவர், அதற்கான காரணத்தையும் விளக்கினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு நமோ கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை சார்பில் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் அரங்கத்தில் மாபெரும் இந்தியக் கனவு 2047 என்ற அறிவுசார் கருத்தரங்கம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

அண்ணாமலை
அந்த நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, "பிரதமர் மோடியின் 75வது பிறந்த நாளை நாடே கொண்டாடுகிறது. ஆனால், அவர் மத்தியப் பிரதேசத்தில் தனது வழக்கமான பணிகளைச் செய்து வருகிறார். பிறந்த நாளாக இருந்தாலும் எந்தவொரு நாளாக இருந்தாலும் மக்களுக்குச் சேவை செய்யும் நாள் தான் என நினைத்து பணியாற்றக்கூடியவர் தான் நமது பிரதமர் மோடி.!
பிரதமர் பிறந்தநாளில் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரம் போடும் நிகழ்ச்சியை நடத்தினால் கூட உடனே டெல்லி தலைமையில் இருந்து போன் வரும்.. மோதிரம் போடும் நிகழ்ச்சியைக் கொண்டாடினாலும் கூட வெளியே தெரியாமல் விளம்பரம் இல்லாமல் செய்யுங்கள் என்றே சொல்வார்கள். அப்படித் தான் நாங்கள் பிரதமரின் பிறந்தநாளைக் கொண்டாடும்.
நேபாள வன்முறை
இப்போது நாம் பார்க்கலாம், நேபாளம் மற்றும் வங்கதேசம் ஆகிய அண்டை நாடுகளில் மிகப் பெரிய போராட்டங்கள் நடந்து வருகிறது. அந்த நாடுகளே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், அதுபோன்ற சம்பவங்கள் இந்தியாவில் ஒருபோதும் நடக்காது. ஏனென்றால் பிரதமர் மோடி தொலைநோக்குச் சிந்தனையுடன் 10 ஆண்டுகளுக்கு முன்பே தொண்டு நிறுவனங்களுக்கு வரும் நிதியை முறைப்படுத்தச் சட்டம் கொண்டு வந்துவிட்டார். இதனால் நமது நாட்டில் வெளிநாட்டுச் சதி ஏதும் நடக்காது.. இதை எதிர்க்கட்சிகளுக்குச் சொல்கிறேன்!
சர்வாதிகாரி இல்லை
அடுத்த 25 ஆண்டுகளுக்கு பாஜக ஆளும் கட்சியாக இருக்கும். அதற்குத் தேவையான கட்சிப் பணிகளில் பாஜக கவனம் செலுத்துகிறது.. இன்று சிலர் பிரதமர் மோடியைச் சர்வாதிகாரி எனச் சொல்வதை நாம் கேட்கலாம். ஆனால், இன்றிலிருந்து 50 ஆண்டுகள் கடந்த பிறகே அவரது சாதனைகள் மக்களுக்குப் புரியும். இப்படித் தான் சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூயை கூட 1970, 19780 காலக் காலகட்டத்தில் சர்வாதிகாரி என்று கூறினார்கள். ஆனால் இன்று அவரை உலகமே பாராட்டுகிறது. நமது மோடியும் கிட்டத்தட்ட அவரை போலத் தான்!
ஐக்கிய அமீரக நாட்டில் அபுதாபியில் இந்து கோயிலைக் கட்டினார்கள். தீவிரமான இசுலாமிய நாடான ஐக்கிய அமீரகத்தில் இதுபோல இந்து மத கோவில் கட்டப்படுவதற்குக் காரணமாக இருந்தவர் மோடி தான். சிலர் பிரதமர் மோடியை இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் எனக் கூட சித்தரிக்கிறார்கள். ஆனால், அதில் உண்மை இல்லை என்பது எல்லாருக்கும் தெரியும்.
மனிதநேயம் மிக்க தலைவர்
நமது பிரதமரைப் போல ஒரு மனிதநேயம் மிக்க தலைவரை உங்களால் பார்க்கவே முடியாது. நாம் அனைவரும் அவரது கைகளில் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறோம். மேலும், பிரதமர் மோடி இன்று உலக தலைவராக இருக்கிறார். இதன் காரணமாகவே வரி விதித்தாலும் கூட அமெரிக்க அதிபர் டிரம்ப் நேரடியாகப் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். உலக தலைவர்களே அமெரிக்காவை எதிர்த்து தயங்கும் போதிலும், அவரை அசைத்துப் பார்த்தவர் மோடிதான்" என்றார்.












Click it and Unblock the Notifications