ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு எடப்பாடி மிரட்டல்.. இந்த லாஜிக் கூட தெரியாதா? நெட்டிசன்ஸ் கேள்வி
சென்னை: ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக நெட்டிசன்கள் பலரும் அவருக்கு கடுமையான விமர்சனங்கள் வைத்து வருகின்றனர். மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக முன்னாள் நிர்வாகியும், நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியரான மருது அழகுராஜ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
அதிமுக தொண்டர்களை அச்சுறுத்தும் வகையில் ஆள் இல்லாத ஆம்புலன்ஸ் அனுப்புகின்றனர். தொடர்ந்து அதிமுக கூட்டங்களில் ஆளில்லாத ஆம்புலன்ஸை அனுப்பி இடையூறு செய்கிறார்கள் அடுத்த கூட்டத்தில் இது போன்று வந்தால் ஆம்புலன்ஸ் ஓட்டி வருபவரை நாங்கள் நோயாளி ஆக்கி அதே ஆம்புலன்சில் அனுப்பிவிடுவோம் என எடப்பாடி பழனிசாமி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம், அணைக்கட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மக்களை சந்தித்துப் பேசினார். இதையடுத்து அணைக்கட்டு பேருந்து நிலையம் அருகே குழுமியிருந்த மக்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருந்தார் அப்போது அவர், ''இந்த அணைக்கட்டு தொகுதி அதிமுகவின் கோட்டை. நான் தொடர்ந்து பல கூட்டங்களில் கவனித்து வருகிறேன். கூட்டத்துக்கு நடுவில் வேண்டுமென்றே ஆள் இல்லாத ஆம்புலன்ஸை அனுப்பி இடையூறு செய்யும் கேவலமான செயலை இந்த அரசாங்கம் செய்துவருகிறது.
எடப்பாடி பழனிசாமி ஆம்புலன்ஸ் கொலைமிரட்டல்
எத்தனை ஆம்புலன்ஸ் விட்டாலும் எதுவும் செய்யமுடியாது.தில்லு திராணி இருந்தால் அரசியல் ரீதியாக எதிர்க்க வேண்டும். மக்கள் கூட்டத்துக்கு இடையில் இப்படி வந்தால் மக்களுக்கு ஏதாவது ஆபத்து வந்தால் என்ன செய்வது. ஆம்புலன்ஸ்ல நோயாளி யாருமே இல்லாமல், வெறுமனே போகிறது. இதை 30 கூட்டத்தில் பார்த்துவிட்டேன். எதிர்க்கட்சியின் கூட்டம் நடக்கிறது என்றால் காவல்துறை பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இது குறித்து நாளை காவல் துறையிடம் புகார் கொடுப்போம். மக்களுக்கு தீமை செய்யும் ஆட்சியாகத்தான் இருக்குது திமுக ஆட்சி. அதிமுக ஆட்சியின் திட்டங்களை எல்லாம் நிறுத்தியதுதான் திமுக சாதனை, என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருந்தார்.

ஆம்புலன்ஸ் - எடப்பாடி மறந்த லாஜிக்
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக முன்னாள் நிர்வாகியும், நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியரான மருது அழகுராஜ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அதில், எடப்பாடி விடுத்த
கொலை மிரட்டல் பாதிக்கப்பட்ட ஒருவரது அழைப்பின் பேரில் உதவி கோரியவரை அழைத்து வரச் செல்லும் போது ஆம்புலன்ஸில் டிரைவர் மட்டும் தான் செல்வார் .. அப்படியெனில் அந்த ஆம்புலன்ஸ் டிரைவரை எடப்பாடி நோயாளியாக்கி விடுவாரா... இது ஆம்னிபஸ் கூரை மீது நின்று கொண்டு ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு எடப்பாடி விடுத்த அப்பட்டமான கொலை மிரட்டல் அல்லவா.. தமிழக அரசு எடப்பாடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டு்ம், என்றுள்ளார்.
இது தொடர்பாக நெட்டிசன்கள் பலரும் அவருக்கு கடுமையான விமர்சனங்கள் வைத்து வருகின்றனர்.
, இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர் செய்த போஸ்டில், ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தவர், ஒரு பெரிய கட்சியினுடைய பொதுச் செயலாளர், மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர் என காலம் இவருக்கு எத்தனையோ சிறப்புகளை கொடுத்திருந்தாலும், அதற்குரிய பண்புகள் இவருக்கு இன்னும் வாய்க்கவில்லை.

உயிருக்கு போராடும் நிலையில் இருப்பவர்களை அழைக்க ஆம்புலன்ஸ் சைரன் ஓசையிட்டு வேகமாகத் தான் செல்ல வேண்டும். மருத்துவத்தில் ஒவ்வொரு நொடி தாமதமும், பாதிக்கப்பட்டவர்களின் உயிரின் ஆபத்தை அதிகரிக்கும். ஆளில்லாத ஆம்புலன்ஸை ஓட்டிக் கொண்டு வந்தால், வருபவரே பேஷண்டாக செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று மிரட்டுவதெல்லாம் ஒரு எதிர்க்கட்சித் தலைவருக்கு அழகா?, என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
இன்னொரு நெட்டிசன் எழுப்பிய கேள்வியில், எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருக்கிறார் ஆம்புலன்ஸ் ஒன்று வருகிறது.. எடப்பாடி சொல்கிறார் நான் பேசும் கூட்டத்தில் உள்ளே ஆள் இன்றி அடுத்த முறை ஆம்புலன்ஸ் வந்தால் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்தான் நோயாளியாகிப் போவார் என்று பகிரங்கமாக மிரட்டுகிறார்
இவர் எவ்வளவு ஆபத்தானவர் என்று பாருங்கள்... ஆம்புலன்ஸ் ஒரு நோயாளியை அழைத்து வரவோ அல்லது ஏதேனும் விபத்தில் சிக்கியவரை அழைத்து வரவோ செல்லும் போது அதற்குள் எப்படி நோயாளி இருப்பார்... அழைக்கச் செல்லும் போதே நோயாளி ஆம்புலன்சுக்குள் இருக்க வேண்டும் இல்லையென்றால் , ஆம்புலன்ஸ் ஓட்டுனரை தாக்குவோம் என்று பேசுகிறார்... இந்த பேச்சைக் கேட்டு யாரேனும் ஆம்புலன்ஸ் ஓட்டுனரை தாக்கியோ அல்லது ஆம்புலன்சுக்கு வழி விடாமலோ போனால் என்ன ஆவது ? இவருக்கெல்லாம் வாக்களித்தால் தமிழ்நாடு என்ன ஆகும், என்று கேள்வி எழுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications