இப்போ புலம்பி என்ன பிரயோஜனம்? SIR போராட்டத்தின் போது எங்க போனீங்க? விஜய் ரசிகர்களுக்கு சரமாரி கேள்வி
சென்னை: விஜய்க்கும் அவரது கட்சிக்கும் வாக்களிக்க முயன்ற பலர், வாக்காளர் லிஸ்டில் பெயர் இல்லை என்று வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியிருக்கின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகின்றன. இந்நிலையில் அவர்களுக்கு பலரும் சரமாரியாக கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
குறிப்பாக, SIRக்கு எதிராக தமிழ்நாடு போராடிக்கொண்டிருந்த போது.. ஜன நாயகன் திரைப்பட ஆடியோ ரிலீசுக்காக வெயிட் பண்ணிட்டிருந்துட்டு, இப்போது வந்து ஓட்டு போட முடியலனு சொன்னா என்ன அர்த்தம்? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பிளைட் புடிச்சு வந்தும் ஓட்டு போடல
"15 மணி நேரம்.. 3 பிளைட் மாறி விஜய்க்காக ஓட்டு போட வந்திருக்கிறோம்" என்று வீடியோ வெளியிட்டவர்கள் எல்லாம், வாக்காளர் லிஸ்ட்டில் பெயர் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பியிருக்கின்றனர். SIR படிவம் நிரப்பி கொடுத்தும் பெயர் இல்லை என்று அதிருப்தி தெரிவித்து வீடியோ வெளியிட்டிருக்கின்றனர்.
SIR போராட்டம்
தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை (SIR) தமிழ்நாடு கடுமையாக எதிர்த்திருந்தது. திமுக கூட்டணியில் இருந்த அத்தனை கட்சிகளும், இதற்கு எதிராக சண்டை செய்தன. SIR நடவடிக்கையை நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை.. ஆனால், தேர்தல் நெருக்கத்தில் இதை செய்ய வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.
தமிழ்நாடு நடத்திய போராட்டம்
நவம்பர் 11 அன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் பிரம்மாண்டமான போராட்டங்களை நடத்தின. சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின மக்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கச் சதி நடப்பதாகக் கூறி தேர்தல் ஆணையத்தை கண்டித்திருந்தன.
திமுக, காங்கிரஸ், விசிக, இடதுசாரிக் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இதில் பங்கேற்றனர். சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் போராட்டங்கள் நடந்தன.
விஜய்யும் அவரது ரசிகர்களும்
மறுபுறம் தவெக தொண்டர்கள், விஜய் ரசிகர்கள், ஜன நாயகன் திரைப்படத்தின் முதல் பாடலான 'தளபதி கச்சேரி' ரிலீஸை கொண்டாடிக்கொண்டிருந்தனர். 'தளபதி கச்சேரி' பாடலுக்கு ரீல்ஸ் செய்து வெளியிட்டுக்கொண்டிருந்தனர். நவ.8ம் தேதி இந்த பாடல் வெளியாகியிருந்தது.
தவெகவையும் குறை சொல்ல முடியாது. ஏனெனில், நவம்பர் 16 அன்று தமிழக வெற்றி கழகம் தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. ஆனால் இதில் விஜய் பங்கேற்கவில்லை. எனவே ஆர்ப்பாட்டங்கள் டல்லடித்தன.
சொதப்பிய விஜய்
ஒருவேளை திமுக உடன் இணைந்தோ, அல்லது விஜய் நேரடியாக இந்த போராட்டங்களில் பங்கெடுத்து, விஷயத்தை தீவிரமாக கொண்டு சென்றிருந்தால் இது குறித்து தவெகவினருக்கு போதிய அளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும். இது மாநிலம் முழுவதுமான போராட்டமாக வெடித்திருக்கும். இன்று ஓட்டு போட முடியவில்லையே என்று புலம்பியிருக்க வேண்டியதில்லை என அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications