அதி நவீன வசதிகள்.. கோயம்பேட்டை விட அருமையான வண்டலூர் புதிய பேருந்து நிலையம்.. தீவிரமாக பணிகள்
சென்னை: வண்டலூர் அருகே ரூ.309 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தற்போது கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. வீக் என்ட் காலகட்டங்களில், நீண்ட தூரத்திற்கு பஸ்கள் நிற்கும். எளிதில் வெளியே செல்வதோ, உள்ளே வருவதோ முடியாது.
இந்த நிலையில்தான், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் புது புறநகர் பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

ரூ.309 கோடி
இந்த பேருந்து நிலையம் சுமார் 88.52 ஏக்கர் நிலப்பரப்பில் அமைகிறது. செலவீனம், ரூ. 309 கோடி. பஸ் நிலையத்தில் 7.4 ஏக்கரில் 13 பிளாட்பார்ம்கள் உள்ளன. மாநகர பேருந்துகள் நிறுத்தப்படும் வகையில் அமைக்கப்படவுள்ளது. 13 பிளாட்பார்ம்கள் இருப்பதால், 82 மாநகர பேருந்துகள் ஒரே நேரத்தில் வந்து செல்லும் வகையில் வசதி உள்ளது.

வாகன வசதி
1100 கார்கள், 2798 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதி அங்கு உள்ளன. தென்மாவட்டங்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக 2,700 அரசு விரைவு பேருந்துகள் மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்பட உள்ளன. தினமும், 75 ஆயிரம் பயணிகள் இங்கு வந்து செல்ல முடியும். நகரும் படிக்கட்டுகளும் இங்கு உள்ளன.

அடிப்படை வசதிகள்
தாய்மார்கள் பாலூட்டும் அறை, முதலுதவி மையம், மெடிக்கல்கள், டிரைவர்கள்-கண்டக்டர்களுக்கான ஓய்வு அறை, பயணிகள் காத்திருப்பு அறை, குடிநீர், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் இங்கே உள்ளன.

வரைபடம்
ஆட்டோ, கால் டாக்சி வாகனங்கள் நிறுத்த தனியாக இடவசதி செய்யப்பட்டுள்ளது. வண்டலூரில் அமைய உள்ள புதிய பஸ் நிலையத்தின் வரைப்படம் வெளியாகியுள்ளது. அதில் வண்டலூர் புதிய பஸ் நிலையம், கோயம்பேடு பஸ் நிலையத்தைவிட நவீனமாக உள்ளது, இந்த வரைபடத்தின் மூலம் தெளிவாகிறது.












Click it and Unblock the Notifications