வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை : வானிலை அறிவிப்பு
வடக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடலில் சனிக்கிழமையன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: வங்கக்கடலில் சனிக்கிழமையன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 5 நாட்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் பெய்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் நீலகிரி மாவட்டம் தேவலாவில் 16 செமீ மழை பதிவாகியுள்ளது. பந்தலூர், கூடலூரில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது. சேலம், ஹரிசான் எஸ்டேட் பகுதியில் 2 செமீ மழையும் சின்னக்கல்லார், வால்பாறை, பெரியாறு, அவலாஞ்சி,மேல்பவானியில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.
சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று முதல் வருகிற 13ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு
13ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

மீனவர்களுக்கு அறிவிப்பு
இன்று முதல் வருகின்ற 11ஆம் தேதி வரை தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகள் , அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 12ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில், பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் வருகிற 13ஆம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும் என்பதால் மேற்கூறிய பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுட்டெரிக்கும் வெயில்
பருவமழை ஒரு சில மாவட்டங்களில் தீவிரமடைந்தாலும் வெயிலும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் சுட்டெரித்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 38.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மதுரையில் 37.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. நெல்லையில் 36 டிகிரி செல்சியஸ் வெப்பமும், சென்னையில் 35 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகியுள்ளது.

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம்
கடந்த சில நாட்களாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வரும் நிலையில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவாவதன் காரணமாக சனிக்கிழமை முதல் மழை தீவிரமடையும் என்று எதிர்பார்க்கலாம். வடக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடலில் சனிக்கிழமையன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 5 நாட்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவைக்குற்றாலம் செல்ல தடை
இதனிடையே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் கோவை குற்றாலத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், இன்று முதல் 4 நாட்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் காரணமாக கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா தலம் கடந்த 4 மாதங்களாக மூடப்பட்டிருந்தது. கொரோனா தொற்று சற்று குறைய தொடங்கியது அடுத்து, கடந்த 4 நாட்களுக்கு முன்பு மீண்டும் திறக்கப்பட்டது. இதனால், கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கோவை குற்றாலம் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.












Click it and Unblock the Notifications