உதயநிதி ஸ்டாலினுக்காக களமிறங்கும் புதிய குழு... முழு பாய்ச்சலுக்கு தயாராகும் திமுக...!
சென்னை: திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்காக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தலைமையில் புதிய குழு ஒன்று களமிறங்க உள்ளது.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தேர்தல் பிரச்சார உரை, வரலாற்றுத் தரவுகள், ஆலோசனைகள் உள்ளிட்ட விவகாரங்களை இந்த குழு கவனித்துக்கொள்ளும் எனத் தெரிகிறது.
மேலும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் நமக்கு நாமே நிகழ்ச்சி மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டதை போல் இந்த முறை உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்ய திட்டம் தயாராகி வருகிறது.

உதயநிதி ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சுனில் அன் கோ பணியாற்றியதை போல் அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு மூத்த பத்திரிகையாளர் தலைமையிலான ஒரு டீம் களமிறங்க உள்ளது. உதயநிதி ஸ்டாலினின் இமேஜை உயர்த்தும் வகையில் அந்த குழு வியூகம் வகுத்துக் கொடுக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், செய்தியாளர் சந்திப்பு, பிரச்சார உரை, நிகழ்ச்சி உரை, என அனைத்து விவகாரங்களையும் புதிய டீம் பொறுப்பேற்றுக்கொள்ள உள்ளது.

மூத்த பத்திரிகையாளர்
பிரபல வார இதழ் ஒன்றில் மிக முக்கியப் பொறுப்பில் பணியாற்றிய அந்த பத்திரிகையாளர் பொழுதுபோக்கு தொலைக்காட்சி ஒன்றின் தலைமை பொறுப்பிலும் பணியாற்றியிருக்கிறார். இவர் தலைமையில் செயல்படும் அந்த டீம் உதயநிதி ஸ்டாலினுக்கான பணிகளை மட்டும் கவனித்துக் கொள்ள உள்ளது. மற்றபடி திமுக நிகழ்வுகளிலோ, மு.க.ஸ்டாலின் விவகாரத்திலோ இந்த குழு தலையிடாது.

கருணாநிதி பேச்சு
மறைந்த கருணாநிதிக்கு முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜமாணிக்கமும், சண்முகநாதனும் பக்கபலமாக இருந்தது போல் மூத்த பத்திரிகையாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு பக்கபலமாக நின்று வரலாற்று தரவுகளை அளிப்பதோடு பேச்சின் நெளிவு சுளிவுகளையும் பார்த்துகொள்ள உள்ளார். இதுமட்டுமல்லாமல் உதயநிதி ஸ்டாலின் இமேஜை வெகுஜன மக்கள் மத்தியில் உயர்த்துவதற்கான வியூகத்தையும் கவனித்துக் கொள்ள இருக்கிறார்.

முழு பாய்ச்சல்
வரும் சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரை திமுகவுக்கு வாழ்வா சாவா என்பதை போன்றது. சற்று அசந்தால் கூட விவகாரம் வில்லங்கமாகிவிடும் என்பதால் இப்போதே முழுப் பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறது திமுக தலைமை. அதன் ஒரு பகுதியாக தான் இது போன்ற அறிவுஜீவிகள் குழுவும் பணியமர்த்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications