கட்டிடத்தை பதிவு செய்ய புதிய நடைமுறை.. வழிகாட்டுதல்களை வெளியிட்டார் பதிவுத்துறை தலைவர்!
சென்னை: மனையுடன் கட்டிடம் இருந்தால் அதற்கான உயர் மதிப்பை ஏற்பதற்கான உறுதிமொழிக் கடிதம் சமர்ப்பித்து களப்பணி இல்லாமல் பத்திரத்தை திரும்ப பெறுவதற்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து பதிவுத்துறை தலைவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கிரையம் உள்ளிட்ட உரிமை மாற்று ஆவணங்களில் மனையுடன், கட்டிடமும் சேர்த்து பதிவு செய்யும்போது, மனையில் உள்ள கட்டிடம் குறித்த விவரங்கள் குறிப்பிட்டு, அதன் மதிப்பு கணக்கிட்டு ஆவணத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

ஆனால், படிவத்தில் முழுமையான விவரங்கள் இல்லாமல் பதிவுக்கு தாக்கல் செய்யப்படுவதும், இதனால் களப் பணியின்போது கட்டிட மதிப்பில் இழப்பு ஏற்படுவதும் கண்டறியப்படுகிறது.
இதையடுத்து, 'திருத்திய படிவத்தில் கட்டிட விவரங்கள் ஆவணத்துடன் இணைக்கப்பட வேண்டும். அதை சார்பதிவாளர்கள் உறுதி செய்ய வேண்டும்' என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, களப்பணி தொடர்பாக ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் முற்றிலும் மாற்றப்பட்டு, களப்பணியை எளிமைப்படுத்தி ஒருங்கிணைந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, கட்டிடத்தின் கட்டுமானப் பரப்பு 2,500 சதுரஅடி மற்றும் கட்டிட மதிப்பு ரூ.1 கோடிக்கு குறைவாகவும், அதேபோல, கட்டுமானப் பரப்பு 2,500 சதுரஅடிக்கு அதிகமாகவும், கட்டிட மதிப்பு ரூ.1 கோடிக்கு குறைவாகவும் இருக்கும் பட்சத்தில், சுயசான்று அளிக்கப்பட்ட கட்டிட மதிப்பு அல்லது பொதுப்பணித் துறை தளவிலை விவரப் பட்டியல் அடிப்படையில் கணக்கிடப்படும் சதுரஅடி மதிப்பு ஆகியவற்றில் எது அதிகமோ அதற்கான முத்திரைத் தீர்வை, பதிவுக் கட்டணம் செலுத்துவதாக ஆவணதாரரின் உறுதிமொழி சேர்க்கப்பட வேண்டும்.
அவ்வாறு உறுதிமொழி அளிக்கப்பட்டால், உயர் மதிப்புக்கான பதிவுக் கட்டணம், முத்திரைத் தீர்வை வசூலித்து களப்பணி இல்லாமல் ஆவணத்தை திரும்ப வழங்கலாம். அதேபோல, கட்டிட மதிப்பு ரூ.1 கோடிக்கு மேல் ரூ.5 கோடிக்கு கீழ் இருந்தால், அங்கீகரிக்கப்பட்ட கட்டிட மதிப்பாளர் அறிக்கை இணைக்கப்பட வேண்டும்.
கட்டிட மதிப்பாளர் வழங்கும் மதிப்பு அல்லது பொதுப்பணித் துறை தளவிலை விவரப் பட்டியல் அடிப்படையில் கணக்கிடப்படும் சதுரஅடி மதிப்பு ஆகியவற்றில் எது அதிகமோ அதற்கான முத்திரைத் தீர்வை, பதிவுக் கட்டணம் செலுத்துவதற்கான உறுதி மொழி பெறப்பட்டு, களப்பணி இல்லாமல் ஆவணத்தை திரும்ப வழங்கலாம்.
ஆவண சொத்தில் உள்ள கட்டிடத்தின் மதிப்பு ரூ.5 கோடிக்கு மேல் இருந்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்டிட மதிப்பாளரின் மதிப்பு அறிக்கை, பொதுப்பணித் துறை தளவிலை பட்டியல் அடிப்படையிலான மதிப்பு ஆகியவற்றில் எது அதிகமோ அதற்கான முத்திரைத் தீர்வை, பதிவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு, களப்பணி இல்லாமல் ஆவணத்தை திரும்ப வழங்கலாம்.
ஒருவேளை, ஆவணதாரர் உறுதிமொழி அளிக்காத பட்சத்தில், உதவி செயற்பொறியாளர் களப்பணிக்கு ஆவணம் அனுப்பப்பட்டு, மதிப்பீட்டு அறிக்கை அடிப்படையில் முத்திரைத் தீர்வை, பதிவுக் கட்டணம் வசூலித்து ஆவணத்தை திரும்ப வழங்கலாம்.
அடுக்குமாடி குடியிருப்புகள்
அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுமானப் பரப்பு 2,500 சதுர அடிக்கு குறைவாக இருந்தால் சுயசான்று கட்டிட மதிப்பு, பொதுப்பணித் துறை தளவிலை விவரப் பட்டியல் அடிப்படையில் மதிப்பில் எது அதிகமோ அதை வசூலித்து களப்பணி இல்லாமல் ஆவணத்தை திரும்ப தரலாம்.
கட்டிடப் பரப்பு 2,500 சதுரஅடிக்கு மேல் இருந்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்டிட மதிப்பாளர் அறிக்கை அல்லது பொதுப்பணித் துறை தளவிலை விவரப் பட்டியல் இவற்றில் எது அதிகமோ அந்த தொகை வசூலிக்கப்பட்டு, களப்பணியின்றி ஆவணம் திரும்ப தரப்படலாம்.
முடிவுறாத கட்டிடமாக இருந்தால், உதவி செயற்பொறியாளர் களஆய்வு நடைமுறை மாற்றப்பட்டு, சுயசான்று கட்டிட மதிப்பு அல்லது அரசு வெளியிட்டுள்ள கட்டிட மதிப்பு இவற்றில் எது அதிகமோ அதற்கான முத்திரைத் தீர்வை, பதிவுக் கட்டணம் வசூலித்து களப்பணியின்றி ஆவணத்தை திரும்ப வழங்கலாம்.
ஒருவேளை, ஆவணதாரர்கள் கட்டிட மதிப்பின் அதிக பட்சத்தை ஏற்க மறுத்தால், கட்டிட மதிப்பு ரூ.5 கோடிக்கு கீழ் இருந்தால் சார் பதிவாளருக்கும், ரூ.5 கோடிக்கு மேல் இருந்தால் உதவி செயற்பொறியாளருக்கும் கட்டிடத்தின் மதிப்பை நிர்ணயிக்க ஆவணம் அனுப்பப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
