"இது வெறும் ட்ரெய்லர் தான்.. 2 நாட்களில் பல சம்பவங்கள் காத்திருக்கு!"டிஆர்பி ராஜா சொன்ன பரபர மேட்டர்
சென்னை: தலைநகர் சென்னையில் தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் நிலையில், இது தொடர்பாக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று சென்னையில் நடக்கிறது. நந்தம்பாக்கம் பகுதியில் உள்ள வர்த்தக மையத்தில் இந்த முதலீட்டாளர் மாநாடு நடைபெறும் நிலையில், இதை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இந்த புதிய முதலீட்டாளர் மாநாட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது. நேற்றைய தினம் தான் வின் ஃபாஸ்ட் என்ற மின்சார வாகன நிறுவனம் தென்தமிழகத்தில் முதலீடுகளைச் செய்யவுள்ளதாக அறிவித்தது.
பூஸ்ட்: இதற்கிடையே உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து அமைச்சர் டிஆர்பி ராஜா சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார். இது குறித்து அவர், "சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இதை முதலீடு கொண்டாட்டம் என்றே சொல்லலாம். தமிழ்நாடு இதுவரை கண்டிராத முதலீட்டாளர் மாநாடாக இது இருக்கும்.
பரவலாக்கப்பட்ட வளர்ச்சி: பரவலாக்கப்பட்ட வளர்ச்சி என்பது தான் முதல்வரின் மிகப் பெரிய நோக்கமாக இருக்கிறது. இந்த பரவலாக்கப்பட்ட வளர்ச்சிக்கு இது மிகப் பெரிய பூஸ்ட்டாக அமையும். எல்லா தென் தமிழகம், வடதமிழகம், டெல்டா மாவட்டங்களுக்கும், மேற்கு மாவட்டங்கள் என அனைத்து பகுதிகளுக்கும் முதலீடுகள் வரும்.
டிரைலர் தான்: அதன் சின்ன டீசர் டிரைலர் போன்ற அறிவிப்பைத் தான் பார்த்தோம். தென்தமிழகத்தில் 16 ஆயிரம் கோடி முதலீட்டில் மின்சார வாகன தொழிற்சாலையை உருவாக்குது குறித்து அறிவித்துள்ளனர். இதன் மூலம் 3000 பேருக்கு வேலை கிடைக்கும். இந்த வின் ஃபாஸ்ட் சர்வதேச சந்தையில் டெஸ்லாவுக்கு போட்டியாக இருக்கக் கூடியது. முதல்வர் முதல் பாலிலேயே சிக்ஸர் அடித்துள்ளதையே இந்த முதலீடு காட்டுகிறது.
இந்த முதலீட்டாளர் மாநாடு என்பது பல்வேறு விதங்களில் புதுமைகளைக் கொண்டிருக்கும். எப்போது முதலீட்டாளர் மாநாடுகளில் எத்தனை லட்சம் கோடி வந்துள்ளது என்று சொல்வார்கள். அதுவே வழக்கமாக இருக்கும். ஆனால், இந்த முதலீட்டாளர்கள் மாநாடு அப்படி இருக்காது.
வேலைவாய்ப்புகள்: தமிழகத்தில் அனைத்து பகுதிகளில் உள்ள மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு அவர்கள் திறனுக்கு ஏற்ப வேலைவாய்ப்பு தருவதே இதன் நோக்கம். இதன் மூலம் எத்தனை வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது என்பதே இந்த மாநாட்டின் முக்கியமான நோக்கம். முதல்வரின் விருப்பமும் இதுதான்.. அனைவருக்கும் நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்க போகுது.
அனைவரும் எத்தனை லட்சம் கோடி முதலீடு வரும் என்று அந்த நம்பர் குறித்தே பேசுகிறார்கள். ஆனால், அதைத் தாண்டி வேலைவாய்ப்புகள் தான் முக்கியம். பரவலாக்கப்பட்ட வளர்ச்சி கிடைப்பதே உறுதி செய்யவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
எல்லாருக்கும் எல்லாம்: எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம். எனவே, அனைத்து இடங்களிலும் தரமான வேலைகள் கிடைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். இதன் காரணமாகவே இத்தனை லட்சம் கோடி முதலீடுகளும் புதிய வேலைவாய்ப்புகளும் கிடைக்கிறது.
இந்த மாநாட்டில் பெரிய பெரிய ஆளுமைகளும் இதில் கலந்து கொண்டு பேசவுள்ளனர். உலகின் பல்வேறு தலைசிறந்த ஆளுமைகள் இங்கு வந்து பேசும் போது, அதை நமது இளைஞர்கள், மாணவர்கள் கேட்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் நமது மாணவர்களுக்கு நல் வாய்ப்பு கிடைக்கும். அவர்களுடன் உரையாற்றும் போது நமது மாணவர்களுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும்" என்றார்.












Click it and Unblock the Notifications