கைக்கு வரும் சம்பளம் குறைகிறதா? புதிய தொழிலாளர் சட்டம் அமலுக்கு வந்தது.. என்னென்ன மாறும்?
சென்னை: நாடு முழுவதிலும் இன்று முதல் புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. நாட்டில் தற்போது உள்ள 29 தொழிலாளர் சட்டங்களை ஒன்றிணைத்து, நான்கு எளிமைப்படுத்தப்பட்ட சட்டங்களாக மாற்றப்பட்டுள்ளது. 40 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு கட்டாய ஆண்டு மருத்துவப் பரிசோதனைகள், அனைத்துத் துறைகளுக்கும் சட்டரீதியான குறைந்தபட்ச ஊதியம் போன்ற நலன்களும் இதில் அடங்கும்.
நம் நாட்டில் ஏற்கனவே அமலில் இருக்கும் தொழிலாளர் சட்டங்கள் சுதந்திரம் பெறுவதற்கு முன்பு அல்லது சுதந்திரம் பெற்ற ஆரம்ப கால கட்டங்களில் இயற்றப்பட்டவையாக உள்ளன. அதாவது 1930 முதல் 1950 ஆண்டு வரையிலான கால கட்டங்களில் இயற்றப்பட்ட தொழிலாளர் சட்டங்களே தற்போது நடைமுறையில் இருக்கின்றன.

புதிய தொழிலாளர் சட்டம்
தற்போதைய காலத்திற்கு ஏற்பவும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. ஏனெனில், அப்போது இருந்த தொழிலாளர் விதிகளுக்கும் தற்போதுள்ள சூழல்களுக்கும் பல மடங்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது. அப்போது இருந்த நாட்டின் பொருளாதார சூழல், உலகளாவிய சூழல், கொள்கைகள் தற்போது பெருமளவு மாறிவிட்டன.
எனவே தொழிலாளர் நல சட்டங்களை காலத்திற்கு ஏற்ப மாற்றும் முடிவாக புதிய தொழிலாளர் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த புதிய தொழிலாளர் சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
4 சட்டங்களாக மாற்றம்
நாட்டில் தற்போது உள்ள 29 தொழிலாளர் சட்டங்களை ஒன்றிணைத்து, நான்கு எளிமைப்படுத்தப்பட்ட சட்டங்களாக மாற்றியுள்ளது. இதன் மூலம் தொழில்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஒரே மாதிரியான ஒழுங்குமுறையை உருவாக்குவது நோக்கமாக உள்ளது. இந்த மாற்றங்கள் குழப்பத்தை குறைத்து, விதிமுறையைப் பின்பற்றுதலை மேம்படுத்தி, பணியிட விதிகளை நவீனமாக்கும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டுள்ளன.
கிக் மற்றும் பிளாட்ஃபார்ம் தொழிலாளர்கள் போன்ற அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு விரிவுபடுத்தப்படவுள்ளது. இது அவர்களது பொருளாதார மற்றும் சமூகப் பாதுகாப்பை கணிசமாக மேம்படுத்தும்.
வருங்கால வைப்பு நிதி
40 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு கட்டாய ஆண்டு மருத்துவப் பரிசோதனைகள், அனைத்துத் துறைகளுக்கும் சட்டரீதியான குறைந்தபட்ச ஊதியம், வேலையின்மைப் பயன்கள் போன்ற கூடுதல் நலன்களும் இதில் அடங்கும். இத்திட்டங்களுக்கு அரசு தனி சமூகப் பாதுகாப்பு நிதியை அமைக்கிறது. இது சுமார் 40 கோடி அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு விரிவான பாதுகாப்பு வழங்கும்.
தொழிலாளரின் மொத்த ஊதியத்தில், அதாவது நிறுவனத்தின் வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய நிதி பங்களிப்பு, விடுப்புக்கு ஈடாக பணம் பெறுவதற்கான பங்களிப்பு உள்ளிட்ட அனைத்தும் சேர்த்த மொத்த ஊதியத்தில் அல்லது மொத்த சிடிசியில் (CTC) 50 சதவீதத்தை அடிப்படை ஊதியமாக கணக்கிட வேண்டும் என்று புதிய விதியில் கூறப்பட்டுள்ளது.
பணிக்கொடை பெறலாம்
இதன் அடிப்படையில் நிறுவனங்கள் அடிப்படை சம்பளத்தை நிர்ணயித்தால், தொழிலாளர்களின் பிஎப் சேமிப்பு மற்றும் பிஎப்பில் நிறுவனத்தின் பங்களிப்பும் அதிகரிக்கும். இதனால், வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியம் அதிகமாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் விடுப்புக்கு ஈடாக பணமாக பெறும் தொகையும் அதிகமாகும். மேலும் ஓய்வு பெறும் போது பணிக்கொடைவும் அதிகமாக கிடைக்க வாய்ப்பு உள்ளது.
அதே வேளையில், இந்த சட்டத்தின் மூலம் ஊதியத்தின் ஒரு பகுதி சேமிப்புக்கு செல்லும். இதனால், மாதம் தோறும் ஊழியர்களின் கைக்கு கிடைக்கும் சம்பளம் குறைய வாய்ப்பு உள்ளது. புதிய சட்டத்தின் படி பணிக்கொடை பெறுவதற்கு 5 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டிய அவசியமில்லை. ஓராண்டு பணியாற்றினாலே பணிக்கொடை பெற முடியும்.












Click it and Unblock the Notifications