வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. சென்னையில் சம்பவம் இருக்கு! மழை வெளுக்கும்
சென்னை: வட மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்ய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்தடுத்த நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாகவும் இதனால் சென்னை உள்பட வட தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்க வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை போதிய அளவுக்கு பெய்யவில்லை. இயல்பைவிட குறைவாகவே மழைப்பொழிவு பதிவாகி இருக்கிறது. எனினும் வெப்பம் அதிக அளவுக்கு இல்லாதவாறு அவ்வப்போது மழை பெய்து குளிர்வித்து வருகிறது. சென்னையிலும் கடந்த 10 நாட்களாகவே விட்டு விட்டு லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது
இந்நிலையில் வட மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாகவும், இதனால் சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
வட இந்திய பகுதியில் உருவாகி இருக்கும் புதிய வானிலை மாற்றம் காரணமாக வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று காலை 5.30 மணியளவில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 முதல் 48 மணி நேரத்தில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
சென்னையில் கனமழை வெளுக்கும்
இதன் காரணமாகக் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மேகமூட்டம் அதிகரித்து, காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்க வாய்ப்பு உள்ளது.
இதே போன்று, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடியில் ஒரு சில இடங்களில் கனமழை கொட்டும். நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் சாரல் மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வங்கக்கடலில் பலத்த காற்று வீசக்கூடும். தென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், சில சமயங்களில் 60 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். ஆழ்கடல் பகுதியில் கடல் அலைகளின் சீற்றம் அதிகமாக இருக்கும். எனவே அடுத்த சில நாட்களுக்குக் குறிப்பிட்டுள்ள கடற்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
இனி மழை அதிகரிக்கும்
இது தொடர்பாக மண்டல புயல் எச்சரிக்கை மைய இயக்குனர் வி.ஆர். துரை கூறுகையில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு, வடமேற்கு திசையில் வடக்கு ஒடிசாவை நோக்கி நகரும். இதனால் வட கடலோர தமிழகத்தில் காற்று ஒன்றிணைந்து வெப்பச்சலனம் ஏற்படும். இது மழைக்கு சாதகமான சூழலை உருவாக்கும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடையும் போது மழை மேலும் அதிகரிக்கும்" என்றார்.


Click it and Unblock the Notifications
