புதிய ரேஷன் கார்டு.. கேஸ் சிலிண்டர் ரசீது இனி கட்டாயம் இல்லை.. இந்த ஆவணங்களில் ஒன்று போதும்
சென்னை: தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்பவர்களுக்கு முக்கியமான நிம்மதி தரும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.. இனிமேல் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது கேஸ் சிலிண்டர் இணைப்புக்கான ரசீதை கட்டாயமாக இணைக்க வேண்டியதில்லை என்று உணவுப்பொருள் வழங்கல் துறை தெளிவுபடுத்தியுள்ளது. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்...!!
ரேஷன் கார்டு என்பது குடும்ப அட்டையாக மட்டுமல்லாமல், அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பெறுவதற்கும் முக்கியமான ஆவணமாக உள்ளது. மகளிர் உரிமைத்தொகை, பொங்கல் பரிசுத் தொகை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல திட்டங்களுக்கும் ரேஷன் கார்டு தேவைப்படுகிறது.

புதிய ரேஷன் கார்டு
இலவச அரிசி மற்றும் மானிய விலையில் உணவுப் பொருட்களைப் பெறுவதற்கும் இது பயன்படுகிறது. முகவரிக்கான அடையாள ஆவணமாகவும் ரேஷன் கார்டு பயன்படுத்தப்படுகிறது.
அதனால், புதிதாக திருமணமானவர்கள், வேறு ஊரில் இருந்து குடிபெயர்ந்து வந்தவர்கள் உள்ளிட்ட புதிய குடும்பங்கள் ரேஷன் கார்டு இல்லாவிட்டால் விண்ணப்பித்து வைத்துக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, புதிதாக ரேஷன் கார்டு கேட்டு ஏராளமானோர் மாவட்ட அளவில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்து வருகிறார்கள்.. மேலும் சிலர், நேரடியாக ஆன்லைன் மூலமாகவும், TNPDS ஆப் மூலமாகவும் விண்ணப்பித்து வருகிறார்கள்.
கேஸ் சிலிண்டர் ரசீது
இப்படிப்பட்ட சூழலில், புதிய ரேஷன் கார்டு விண்ணப்பத்துடன் கேஸ் சிலிண்டர் இணைப்புக்கான ரசீதை கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்று சில பகுதிகளில் உள்ள வட்ட வழங்கல் அலுவலர்கள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தது.. இதனால் பலருக்கும் சிக்கல் ஏற்பட்டது.
காரணம், நிறைய குடும்பங்கள் புதிய ரேஷன் கார்டு கிடைத்த பிறகுதான் கேஸ் சிலிண்டர் இணைப்பை பெறும் நிலையில் உள்ளனர். அப்படியிருக்கும்போது, ரேஷன் கார்டு பெறுவதற்கான விண்ணப்பத்திலேயே கேஸ் ரசீது கேட்கப்பட்டதால், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியாமல் பலரும் தவிப்புக்கு ஆளானார்கள்.. எனவே இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் அரசிடம் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, உணவுப்பொருள் வழங்கல் துறை துணை கமிஷனர் ராகினி ரவிச்சந்திரன் அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது கேஸ் சிலிண்டர் ரசீது கட்டாயம் இல்லை , அதனை இணைக்க வேண்டும் என்று துறை சார்பில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஆவணங்கள் என்னென்ன தேவை
அப்படியானால் விண்ணப்பிக்கும்போது என்ன ஆவணங்கள் தேவை? குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதார் அட்டைகளையும் கட்டாயம் பதிவேற்ற வேண்டும்.
அத்துடன் முகவரிக்கான ஆவணமாக சொத்து வரி ரசீது, வாடகை ஒப்பந்த பத்திரம், மின் கட்டண ரசீது அல்லது கேஸ் சிலிண்டர் ரசீது போன்றவற்றில் ஏதாவது ஒன்றை இணைக்கலாம். அதாவது, கேஸ் ரசீது இல்லாதவர்கள் அதற்காக கவலைப்பட தேவையில்லை. அவர்களிடம் இருக்கும் மற்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட முகவரிச் சான்றுகளில் ஒன்றை சமர்ப்பித்தால் போதும்.
அதேபோல, புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த உடனே அது கிடைக்காது. விண்ணப்பித்த பிறகு 60 நாட்களுக்கு பிறகே ரேஷன் கார்டு கிடைக்கும் என்று துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
