பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம்.. திமுக எதிர்ப்பதற்கு பின்னால் உள்ள 3 விஷயங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைப்பதற்கான இடத்தை தமிழக அரசு இறுதி செய்துள்ளது. 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் தலைமைச்செயலகமும், சட்டசபைக்கு 15 மாடி முதன்மை கட்டிடம் கட்டப்பட உள்ளது. சாந்தோம் நெடுஞ்சாலையில் இருந்து அணுகும் வகையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய இடத்தின் வழிகாட்டி மதிப்பு சதுர அடிக்கு ரூ.22 ஆயிரம் என்ற வகையில் ரூ.2 ஆயிரத்து 47 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இங்கு தலைமை செயலகம் அமைத்தால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என திமுக விமர்சித்துள்ளது.

தமிழக அரசின் தலைமைச் செயலகமும், சட்டசபையும் கோட்டையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வருகிறது. அங்கு இட நெருக்கடி அதிகமாக இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச்செயலகம் அடங்கிய புதிய கட்டிட வளாகத்தை சென்னையில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1,200 கோடியில் உருவாக்கப்படும் என்று முதல்வர் விஜய் அண்மையில் அறிவித்தார்.

New Secretariat at Pattinapakkam Three reasons behind the DMK s opposition

இதையடுத்து சட்டமன்றம் மற்றும் தலைமைச்செயலகம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக களம் இறங்கினார்கள். இதில் பட்டினப்பாக்கம், கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம் மற்றும் நந்தம்பாக்கம் பின்டெக் நகரத்துக்கு எதிரே உள்ள இடம் என 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டது.இறுதியாக பட்டினப்பாக்கத்தில் கடற்கரையை ஒட்டியுள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான இடம் தேர்வாகி இருக்கிறது

இதற்காக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியமும், சென்னை மாநகராட்சியும் கடந்த சனிக்கிழமையன்று தனது 21.37 ஏக்கர் நிலத்தை பயன்படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கும் ஒப்புதலை பொதுப்பணித்துறைக்கு வழங்கி உள்ளன. இந்த இடம் 0.55 ஏக்கர், 0.15 ஏக்கர் மற்றும் 20.67 ஏக்கர் நிலங்களை தனித்தனியாக கொண்ட 3 சர்வே எண்களை கொண்டதாகும்.

குடியிருப்புகள் என்ன

இந்த இடம் வீடுகள் கட்டுவதற்காக கடந்த 1958-ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்ட நிலையில், . 1963-ம் ஆண்டில் இருந்து 1968-ம் ஆண்டு வரை, 1,112 அரசு ஊழியர் குடியிருப்புகள், 96 தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் கட்டப்பட்டது. அதேபோல் 1986-ம் ஆண்டு 60 குடியிருப்புகளும், 1998-ம் ஆண்டு 112 குடியிருப்புகளும் கட்டப்பட்டன. ஒட்டுமொத்தமாக 1,380 குடியிருப்புகள் இருக்கின்றன. இதல் 1,284 குடியிருப்புகள் சிதிலமடைந்து காலியாக உள்ளன. அந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டது. அங்கு யாருமே இல்லை. இதேபோல் சிதிலமடைந்து உள்ள தனது 96 குடியிருப்புகளையும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியமும் இடிக்க முடிவு செய்துள்ளது.

தலைமை செயலகம்

இந்த நிலம் 'சர்வே எண் 7588/2 மற்றும் 4592/79 ஆகியவற்றின் கீழ் உள்ள நிலம்.இதனை பயன்படுத்த ஆட்சேபனை இல்லை என்று தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சென்னை கலெக்டருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருந்தது. இதையடுத்து அண்மையில் அரசாணையும் வெளியிடப்பட்டது. இங்கு 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் தலைமைச்செயலகமும், சட்டசபைக்கு 15 மாடி முதன்மை கட்டிடம் கட்டப்பட உள்ளது. சாந்தோம் நெடுஞ்சாலையில் இருந்து அணுகும் வகையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய இடத்தின் வழிகாட்டி மதிப்பு சதுர அடிக்கு ரூ.22 ஆயிரம் என்ற வகையில் ரூ.2 ஆயிரத்து 47 கோடி என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. நிலப்பகுதிகள் மொத்தம் 25 ஏக்கர் ஆக உள்ளது. மேலும் வருவாய்த் துறையின் கீழ் உள்ள சில நிலங்களையும் சேர்த்தால் தலைமைச்செயலகம் மற்றும் சட்டசபை கட்ட உள்ள இடம் 26.5 ஏக்கராக இருக்க போகிறது.

சுற்றுச்சூழல் அனுமதி

இங்கு மூன்று பெரிய சவால்கள் தமிழக அரசுக்கு இருக்க போகிறது. முதல் சவால் சுற்றுச்சூழல் அனுமதி, இரண்டாவது சவால் பட்டினம்பாக்கம் மீனவர்கள், 3வது சவால், குறுகிய சாலைகள் உள்ள பகுதி, இதுபற்றி விரிவாக பார்ப்போம். முதல் சவாலை விரிவாக பார்ப்போம். பட்டினப்பாக்கம் பகுதி கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தில் CRZ-II (ஏற்கனவே நகரமயமாக்கப்பட்ட கடலோரப் பகுதி) கீழ் இருக்கிறது. எனினும் CRZ-II விதிகளின்படி, குறிப்பிட்ட தொலைவு எல்லைக்கு அப்பாற்பட்ட நிலங்களில் கட்டுமானங்கள் மேற்கொள்ள அனுமதி கிடைப்பது எளிது தான். ஆனால் கேட்டகிரி ஏ வகையைச் சேர்ந்த அரசு மற்றும் பிரம்மாண்ட உள்கட்டமைப்பு திட்டமாக இருப்பதால், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் ஒப்புதல் பெறுவது கட்டாயம். 20 லட்சம் சதுர அடி பரப்பளவிலான இவ்வளவு பெரிய திட்டத்திற்குப் விரிவான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டியது அவசியம் ஆகும். அதேபோல் அடையாறு ஆற்றுப் படுகை மற்றும் சென்னை கடற்கரையை ஒட்டி அமைவதால், கடல் அரிப்பு, வெள்ளப் பெருக்கு அபாயங்கள் மற்றும் கடலோரச் சூழலியல் ( பாதிக்கப்படாமல் இருக்கிறதா என்று ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் ஆகும். இதனை ஆய்வு செய்தே அனுமதி அளிப்பார்கள்.

அடுத்தாக மீனவர்கள் பிரச்சனை

மீனவர்கள் இங்கு அதிகமாக குடியிருந்து வருகிறார்கள். பட்டினப்பாக்கம், நொச்சிக்குப்பம் மீனவர்கள் இங்கு தலைமுறை தலைமுறையாகக் கடலையும் கடற்கரையையும் நம்பி வாழ்கிறார்கள். தலைமை செயலகம் அமைத்தால், கண்டிப்பாக கடற்கரையில் படகுகளைப் நிறுத்தி வைக்கும் இடம் சுருஞ்கும், வலைகளை உலர்த்தும் இடங்கள் மற்றும் மீன்களை விற்கும் பகுதிகளும் சுருங்கும். அதேபோல் தலைமைச்செயலகம் மற்றும் சட்டமன்றம் போன்றவை மிகயுயர் பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்கப்படும் என்பதால் மீனவர்கள் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் தங்குதடையின்றி கடலுக்குச் செல்வதற்கு கட்டுப்பாடுகள் அதிகமாகும். அதேபோல் மெரினா லைட் ஹவுஸ் முதல் பட்டினம்பாக்கம் வரை பெரிய சாலை விரிவாக மாற்றப்படும். அவர்கள் யாருமே அங்கு ஆக்கிரிமித்து கடை வைக்கவே முடியாது. பெட்டிக்கடை முதல் பல்வேறு கடைகள் வைக்க வாய்ப்பே இல்லை..

3வது சவால் குறுகிய சாலை

தலைமை செயலகம் அமைய உள்ள பட்டினம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள சாந்தோம் நெடுஞ்சாலை மற்றும் உட்புறச் சாலைகள் ஏற்கெனவே அதிக வாகனப் போக்குவரத்தால் நெரிசலுடன் இருக்கின்றன. இந்த சாலையில் தான் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், உயரதிகாரிகள், அமைச்சர்கள், நீதிபதிகள் மற்றும் பொதுமக்கள் கடந்து சென்று வருகிறார்கள். தலைமை செயலகமும் வந்தால், சாலையில் நெரிசல் அதிகமாகும். அதேபோல் பல ஆயிரம் வாகனங்கள் வந்து செல்வதும் சவாலானதாக இருக்கும் என்கிறார்கள். அதற்காக சாலையை முற்றிலும் அகலப்படுத்த வேண்டியதிருக்கும். இந்த சவால்கள் ஒருபுறம் எனில் திமுகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

திமுக எம்பி வில்சன் வெளியிட்ட பதிவில் கூறுகையில், " சென்னை பட்டினப்பாக்கம் பிளாட்களில் இருந்து அரசு ஊழியர்களைத் தமிழ்நாட்டு வீட்டுவசதி வாரியம் வெளியேற்றியபோது, பல அடுக்கு மாடி குடியிருப்பு வளாகங்களைக் கட்டி, அவை கட்டி முடிக்கப்பட்டதும் அவர்களை மீண்டும் இந்தப் பிளாட்களில் குடியமர்த்துவோம் என்று வாரியமும் அரசும் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் முன் உறுதியளித்தன. அதைத் தொடர்ந்து, கட்டுமானம் முடிந்ததும் உயர்நீதிமன்ற ஊழியர்களுக்கும் ஒதுக்கீட்டில் ஒரு பங்கு வழங்கப்படும் என்றும் உயர்நீதிமன்றத்திற்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது.

இது சென்னை உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை மீறுவது ஆகாதா? ஒதுக்கப்பட்ட இடம் CRZ-II மண்டலத்திற்குள் வருவதைக் கருத்தில் கொண்டால், FSI 1.97-க்கு குறைவாகவே இருக்கக்கூடும். 20 லட்சம் சதுர அடியைப் பரப்பளவைக் கொண்ட, 1200 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு பிரம்மாண்ட திட்டத்தை, போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி மீனவர்களின் பகுதிகளை ஆக்கிரமிக்கும் வகையில் குறுகிய சாலைகளில் அமைக்க முடியுமா? முதல்வர் விஜய்யின் இல்லத்திற்கு அருகில் இருக்கிறது என்பதற்காகவே இந்த இடம் தேர்வு செய்யப்படுகிறதா, இது பல மீனவர்களை இடப்பெயர்வு செய்ய வைத்து, பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை ஆபத்தில் தள்ளாதா? என திமுக எம்பி வில்சன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+