20 லட்சம் சதுர அடியில்.. பட்டினப்பாக்கத்தில் அமையும் புதிய தலைமைச் செயலகம்.. தமிழக அரசு அரசாணை!
சென்னை: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 20 லட்சம் சதுர அடியில் புதிய தலைமைச் செயலக கட்டடம் திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாணையில் கூறப்பட்டுள்ள நிலையில், திட்டத்தை செயல்படுத்தும் வகையில் 3 தனித்தனி குழுக்கள் அமைக்கவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் சட்டசபையில் 110 விதியின் கீழ் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். 20 லட்சம் சதுர அடியில் ரூ.1,200 கோடி மதிப்பில் புதிய தலைமைச் செயலகம் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் புதிய தலைமைச் செயலகம் எங்கு அமையும் என்ற விவாதம் நடைபெற்று வந்தது.

அந்த வகையில் நந்தம்பாக்கம், பட்டினப்பாக்கம், கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானம் உள்ளிட்ட இடங்களில் அமையலாம் என்று பேச்சுகள் எழுந்தன. இந்த நிலையில் புதிய தலைமைச் செயலகம் தொடர்பாக தமிழக அரசு தரப்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலகம் பட்டினப்பாக்கத்தில் அமைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
20 லட்சம் சதுர அடியில் மொத்தமாக 22 ஏக்கரில் புதிய தலஜ்மைச் செயலகம் அமைக்கப்பட உள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் வருவாய்த்துறைக்கு சொந்தமான இடமாகும். இதற்கான முதற்கட்ட அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கட்டட கலை நிபுணர்கள் கொண்ட ஆலோசனைக் குழு, கட்டட வடிவமைப்பு, வரைபடம் தயாரிக்க குழுக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல் விரிவான திட்ட அறிக்கையை பொதுப்பணித்துறை தயாரிக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். கடற்கரைக்கு அருகிலே இந்த தலைமைச் செயலகம் அமைக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே கடல் பார்த்தவாறு நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் அலுவலகம் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
தற்போது கடலுக்கு அருகில் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைய இருப்பது விவாதமாகி இருக்கிறது. இதனால் ஜோசியர் குறிப்பின் அடிப்படையில் விஜய்யின் ஜாதகத்திற்கு ஏற்றவாறு தலைமைச் செயலகம் அமைக்கப்படுகிறதா என்ற விவாதங்கள் எழுந்துள்ளன. மேலும், அரசாணை வெளியிடப்பட்டுள்ள சூழலில், விரைவில் தலைமைச் செயலகம் தொடர்பான பணிகள் வேகமெடுக்கும் என்று பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
