மிக மரியாதையாக! கண்ணியமாக நடத்தினார்கள்.. என்ஐஏ விசாரணைக்கு ஆஜரான பின் சாட்டை துரைமுருகன் பிரஸ்மீட்
சென்னை: 12 மணி நேர என்ஐஏ விசாரணைக்கு பிறகு பேட்டியளித்த சாட்டை துரைமுருகன், "எங்களை தீவிரவாதிகள் போல.. பயங்கரவாதிகள் போல சில அரசியல்வாதிகள் சித்தரிக்க முயற்சி செய்கிறார்கள். கடந்த ஒரு வாரமாக வந்த செய்திக்கும்.. இந்த விசாரணைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்ஐஏ மிக மிக மரியாதையாக நடத்தினார்கள்" என்று கூறினார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்க ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளிள் ஈடுபட்டதாக இலங்கை தமிழர்கள், தமிழ்நாட்டு தமிழர்கள் சிலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நபர்களுடன் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு தொடர்பிருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பிப்ரவரி 2-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர்.

நாம் தமிழர் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக், இசை மதிவாணன், விஷ்ணு, முருகன் உள்ளிட்ட பலரது வீடுகளில் இந்த சோதனை நடைபெற்றது. இந்த சோதனைகளில் செல்போன்கள், லேப்டாப்கள், புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து சந்தேகப் பட்டியலில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை விசாரணைக்கு ஆஜராக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர்.
இதன் அடிப்படையில் நாம் தமிழர் நிர்வாகிகள் சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் இன்று என்.ஐ.ஏ. விசாரணைக்கு ஆஜராகினர். 12 மணி நேர விசாரணை நடந்தது. விசாரணைக்கு ஆஜரான பிறகு சாட்டை துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சேலம் ஓமலூரில் உள்ள வழக்கின் காரணமாக 2 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் சிறைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இந்த வழக்கு என்ஐஏக்குசென்றிருக்கிறது.
இதன் அடிப்படையில் எங்களது வீடுகளில் சோதனை நடத்தினார்கள். அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களோடு நாங்கள் தொடர்பில் இருக்கிறோமா என்பதை தெரிந்துகொள்ள எங்களிடம் சந்தேகத்தின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்பட்டது. இது வந்து குற்றவாளிகள் சம்மன் இல்லை. விட்னஸ் சம்மன். அவர்கள் எங்களுக்கு தெரிந்து இருக்கிறதா? என்ற விசாரணை தான். அவர்கள் கேட்ட கேள்விக்கு நாங்கள் பதில் அளித்து இருக்கிறோம்.
நாங்கள் ஒரு ஜனநாயக அரசியலில் தேர்தல் அரசியலில் மக்களாட்சியை ஏற்றுக்கொண்டு இருக்கிறோம். எந்தவிதமான ஆயுத போராட்டத்தையும் நாங்கள் வந்து தமிழ்நாட்டில் சாத்தியப்படுத்துவதற்கோ இல்லை ஆயுத போராட்டத்திற்கோ இல்லை. நாங்கள் இந்த அரசியலில் வென்று சட்டத்தின் வழியாக ஜனநாயகத்தின் வழியாக ஆட்சியின் மூலமாக மாற்றங்களை கொண்டுவர முடியும். சாதி மத பேதமற்ற, ஊழலற்ற தீண்டாமை இல்லாத ஒரு நாட்டை படைக்க வேண்டும்.
ஒரு இயற்கை முறையில் வாழ்க்கை வாழ்வதற்கான தற்சாற்பு பொருளாதார கொள்கையின் அடிப்படையில் ஆட்சியை நடத்த முடியும் என்று நம்பி அரசியலில் நிற்கிறோம். எங்களை தீவிரவாதிகள் போல.. பயங்கரவாதிகள் போல சில அரசியல்வாதிகள் சித்தரிக்க முயற்சி செய்கிறார்கள். கடந்த ஒரு வாரமாக வந்த செய்திக்கும்.. இந்த விசாரணைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 160 அடிப்படையில் சாட்சியாக வைத்து எங்களை விசாரித்தனர்.
மிக மரியாதையாக.. மின கண்ணியமாக என்ஐஏ அதிகாரிகள் எங்களை நடத்தினார்கள். நாங்கள் எங்களுக்கு தெரிந்த தகவல்களை சொல்லியிருக்கிறோம். எங்களை பற்றிய தகவல்கள் தான் முழுமையாக கேட்கப்பட்டது. யூடியூப் வீடியோ பற்றி தான் கேட்டனர். நாங்கள் யாரும் தலைமறைவு வாழ்க்கை நடத்தவில்லை. எல்லாமே வெளிப்படத்தன்மையாக இருக்கிறது. எந்தவிதமான டாக்குமெண்டுகளும் நாங்கள் கொண்டுபோகவில்லை. அவர்களும் கேட்கவில்லை.
எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் வருவோம் என்று சொல்லியிருக்கிறோம். தேவைப்பட்டால் அழைக்கிறோம் என்று கூறினர். நீங்கள் எங்க வீட்டில் இருந்து நிறைய ஆவணங்கள் எடுத்திருப்பதாக சொல்கிறீர்கள். ஆனால் அவர்கள் என் வீட்டில் இருந்து 2 புத்தகம் மட்டுமே எடுத்து இருக்கிறார்கள். இந்த புத்தகங்களை நான் புத்தக கண்காட்சியில் தான் வாங்கியது தான். இந்த 2 புத்தகங்களுமே பொது வழியில் இருக்க கூடிய புத்தகம் தான். தடை செய்யப்பட்டது கிடையாது.
இந்த 2 புத்தகங்களுமே தமிழகத்தில் லட்சக்கணக்கானோரின் வீடுகளில் இருக்கிறது. இந்த புத்தகத்தை எடுத்து சென்றதற்கும் வழக்கிற்கும் எந்த சம்பந்தமும் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியை உடைத்து நீங்க தான் தலைவராக வேண்டும் என்று நினைப்பதாக தகவல் பரவுவதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சாட்டை துரைமுருகன் கூறியதாவது:-
"இது முற்றிலும் வதந்தி தான். தமிழ்நாடு முழுமைக்கும் இருக்கும் 8 கோடி தொண்டர்களுக்கும் சீமானை தலைவராய் கொண்டுபோய் சேர்ப்பதே எங்கள் போன்ற கொள்கை பரப்பு செயலாளர்கள் வேலையே தவிர கட்சியை உடைப்பது எங்கள் வேலை அல்ல. இது ஒன்றும் திமுக, அதிமுக போல கட்சியை உடைத்துக்கொண்டு போவதற்கு அல்ல. இது எங்களது குடும்பம். எங்கள் குடும்பத்தை எப்படி உடைப்போம். இது எல்லாம் வதந்தி.
என்ஐஏ விசாரணைக்கு வந்தததினால், எப்படி ராமஜெயம் கொலை வழக்கில் ஒரு 1500 பேரை விசாரித்தார்களோ.. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கலைஞரை விசாரித்தார்களோ அது போல இந்த வழக்கில் எங்களை விசாரிக்கின்றனர். இன்னும் ஒரு 500 பேரை அவர்கள் விசாரிக்கலாம். எங்கள் மூலமாக எதாவது ஒரு தகவல் அவர்களுக்கு கிடைக்குமா என்பதற்காக விசாரிக்கின்றனர் அவ்வளவு தான்.
மற்றபடி சாதாரண ஒரு விசாரணை தான். இது ஒரு சாட்சி விசாரணை தான்" என்றார். தொடர்ந்து, பயமுறுத்தினார்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சாட்டை துரைமுருகன், "மிக மிக மரியாதையாக நடத்தினார்கள். தமிழ்நாடு காவல்துறையை விட மரியாதையாக நடத்தினார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications