பெங்களூருவை பதற வைத்த குண்டுவெடிப்பு.. சிக்கியவரை சென்னைக்கே தூக்கி வந்த NIA.!
சென்னை: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கில் கைதான நபரை சென்னைக்கு அழைத்து வந்து என்ஐஏ அதிகாரிகள், திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜ் மற்றும் பழைய கட்டடம் ஒன்றிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
பெங்களூருவில் கடந்த சில மாதங்களுக்கு முன் பெங்களூருவின் மிக புகழ்பெற்ற ராமேஸ்வரம் கபே உணவகத்தில் பரபரப்பான விற்பனை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென வெடிகுண்டு வெடித்து சிதறியது.

இந்த சம்பவத்தில் அங்கிருந்த வாடிக்கையாளர்கள் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி இந்தியா முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெண்கள் உட்பட 10 பேர் குண்டுவெடிப்பில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
பெங்களூரு குண்டுவெடிப்பு: இதை அடுத்து இந்த வழக்கானது பெங்களூரு காவல்துறையிடம் இருந்து தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட குண்டுவெடிப்பில் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர். அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளோடு, குண்டை வைத்து சென்றவரின் புகைப்படங்களும் வெளியாகின. குற்றவாளிகள் தொடர்ந்து மறைவாக இருந்த நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் அடுத்தடுத்து சிலர் கைது செய்யப்பட்டனர்.
குற்றவாளிகள் கைது: இதனைத் தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய அதிகாரிகள் குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கலாம் எனவும் கிரிப்டோ கரன்சி அல்லது ஹவாலா மூலம் இவர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் தான் பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் குண்டு வைத்த நபரையும் திட்டம் தீட்டி கொடுத்தவரையும் கொல்கத்தாவில் வைத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 42 நாட்களுக்கு பிறகு கைது செய்தனர்.
குண்டுவெடிப்பு திட்டம்: அதன்படி கர்நாடகாவின் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியைச் சேர்ந்த முசபீர் உசேன் - அப்துல் மதீன் தாகா ஆகியோர் மூளையாக செயல்பட்டதாக கூறப்பட்டது. முசாபீர் உசேன் குண்டு வைத்ததாகவும், அப்துல் மதீன் திட்டம் தீட்டிக் கொடுத்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இருவரும் IS பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகவும் NIA அறிவித்தது. தொடர்ந்து போலி ஆதார் அட்டை உள்ளிட்டவற்றின் மூலம் கிரிப்டோகரன்சி கணக்குகளை உருவாக்கி அதன் மூலம் குண்டுவெடிப்பு நடத்த இருவரும் திட்டம் தீட்டியதாக விசாரணையில் தெரியவந்தது.
சென்னையில் விசாரணை: இந்நிலையில் கைதாவதற்கு முன்னதாக சென்னையில் ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இருவரும் மாறி மாறி தஞ்சம் புகுந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் நீண்ட தேடுதல் வேட்டைக்குப்பின் கொல்கத்தா அருகே இருவரும் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவனை சென்னைஅழைத்து வந்து விசாரித்துள்ளனர் என்.ஐ.ஏ. அதிகாரிகள். அதாவது அப்துல் மதின் தாஹா என்பவரை சென்னை திருவல்லிக்கேணிக்கு அழைத்து வந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜ் மற்றும் பழைய கட்டிடம் ஒன்றிற்கு அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications