விஜய் பிரதமர் வேட்பாளாரா? தவெக அமைச்சர்களை அட்டாக் செய்த மாணிக்கம் தாகூருக்கு நிர்மல் குமார் ரீப்ளை
சென்னை: விஜய் பிரதமர் வேட்பாளர் என்பது தொடர்பாக தவெக அமைச்சர்கள் வெளியிடும் கருத்துகள் ரசிகர் மன்ற மனநிலையிலேயே உள்ளன என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறிய நிலையில் இதற்கு அமைச்சர் நிர்மல் குமார் பதில் அளித்துள்ளார். மேலும், தவெகவில் எம்பிக்கள் இருந்தால்தான் இந்தியா கூட்டணியில் சேர்த்துக்கொள்வோம் என்று மாணிக்கம் தாகூர் கூறிய கருத்து குறித்தும் நிர்மல் குமார் பதிலளித்தார்.
தமிழக மின் துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். நிர்மல் குமார் கூறியதாவது:-

எங்கள் தலைவர் குறித்து பேசவில்லை
"ஒரு சில பேர் கொடுத்த பேட்டியின் அடிப்படையில்தான் மாணிக்கம் தாகூர் சொல்லியிருக்கிறார். எங்கள் தலைவர் (விஜய்) குறித்து பேசவில்லை. ஒரு சில அமைச்சர்கள் பேசியது பற்றித்தான் மாணிக்கம் தாகூர் பதிலளித்தார். எங்கள் தலைவர் குறித்து பேசவில்லை" என்றார்.
எம்.எல்.ஏக்களுக்கு கார் தேவையில்லை என்று எதிர்க்கட்சிகள் பேசியது குறித்து பதிலளித்த நிர்மல் குமார், "அவர்கள் எல்லாம் 30 கோடி, 40 கோடி செலவு செய்து எம்.எல்.ஏ ஆகியிருக்கிறார்கள். ஓட்டுக்கு ஆயிரம், இரண்டாயிரம் கொடுத்து வந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு 10 கார்கள் இருக்கும், பல ஆயிரம் கோடிகள் இருக்கும். எத்தனை கார் இருந்து என்ன பிரயோஜனம்.
எம்.எல்.ஏவுக்கு கார் இருக்கக் கூடாதா?
ஊருக்குள் காலே எடுத்து வைக்கவில்லை. மக்களை சந்திக்க அடிப்படை தேவைகளை மக்கள் பிரதிநிதிகளுக்கு செய்து கொடுக்க வேண்டும். கட்சிக்காக செய்யவில்லை. தாசில்தார், ஆர்ஐக்கு கார் இருக்கு.. எம்.எல்.ஏவுக்கு கார் இருக்ககூடாதா? மக்களை பார்த்து அவர்களின் குறைகளை கேட்டு வந்து செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் கார் உள்ளது.
சட்டசபையில் மானிய கோரிக்கை போய்க்கொண்டு இருக்கிறது. மானியக்கோரிக்கையில் என்ன பேசவேண்டுமோ அதுதான் பேசிக்கொண்டு இருக்கிறோம். தேவையில்லாமல் திமுகவினர் வார்த்தைகளை பேசும் போது அதற்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில்தான் நாங்கள் உள்ளோம். ஊழல், பார்ட்டி பண்ட் என்றால் கோபம் வருகிறது. பார்ட்டி பண்ட் இல்லாமலா? இத்தனை வருடம் அரசாங்கம் இருந்தது..
ஏன் கோபம் வருகிறது?
எங்கேயாவது ஒரு இடத்திற்கு போய்.. ஏன் ஒரு டிரைவிங் லைசன்ஸ் கூட பார்ட்டி பண்ட் கொடுக்காமல் வாங்கியிருக்கிறீர்களா? பிறப்பு முதல் இறப்பு வரை அரசு துறையில் பணம் இல்லமால் ஒரு கையெழுத்து ஆகியிருக்கிறதா? இன்னைக்கு எப்படி இருக்கு.. தற்போது அதெல்லாம் மாறியுள்ளது. தமிழ்நாடு முழுக்க டாஸ்மாக்கில் ரூ.10 வாங்கினால் அது யாருக்கு உரிய ஃபண்ட்? இதெல்லாம் பார்ட்டி பண்ட் என்ற பெயரில் கொள்ளையடிக்கப்பட்ட பணம்.
பார்ட்டி பண்ட் என்றால் அவர்களுக்கு கோபம் வருகிறது. ஆதாரம் இல்லாமல் வழக்கு தொடுக்க முடியாது. தவறு இருந்தால் கண்டிப்பாக வழக்கு தொடுக்க முடியும். திமுகவினரை பழிவாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஊழல் இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை' என்றார்.
மாணிக்கம் தாகூர் பேசியது என்ன?
தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்பி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- தவெக அமைச்சர்கள், பிரதமர் வேட்பாளர் தொடர்பாக வெளியிடும் கருத்துகள் ரசிகர் மன்ற மனநிலையிலேயே உள்ளன. சட்டசபை தேர்தலில் தவெக வெற்றி பெற்றதும் விஜய் முதல்வர் ஆவதற்கு முதலில் ஆதரவு கொடுத்தது காங்கிரஸ் கட்சி தான். இது தவெகவின் இன்றைய தலைவர்கள் அனைவருக்கும் தெரியும். முதல்வர் விஜய் குறைவாக தான் பேசுவார். ஆனால் பேச வேண்டிய நேரத்தில் இது குறித்து பேசுவார் என்று நினைக்கிறேன்.
தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை என்பதே தமிழக காங்கிரஸ் நிலைப்பாடு. ராகுல் காந்தி பிரதமர் ஆனதும் நீட் தேர்வு உடனடியாக ரத்து செய்யப்படும். தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தங்களுக்கு சாதகமாக தொகுதிகளை மாற்றியமைக்க பாஜக திட்டமிட்டு வருகிறது. மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது. மேகதாதுவில் ஒரு செங்கலை கூட வைக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று கூறினார்.


Click it and Unblock the Notifications
