சென்னைக்கு ரூ 5000 கோடி சிறப்பு நிதி கொடுத்தோமே.. என்ன ஆச்சு? கணக்கு கேட்கும் நிர்மலா சீதாராமன்
சென்னை: சென்னைக்கு ரூ 5000 கோடியை சிறப்பு நிதியாக வழங்கினோமே அது என்ன ஆனது என தமிழக அரசுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை பல்லாவரத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், சென்னை ரூ 5000 கோடியை சிறப்பு நிதியாக வழங்கியுள்ளோம். மிக்ஜாம் புயலால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதும் தமிழகத்திற்கு ரூ 900 கோடியை ஒதுக்கினோம். இந்த இரு நிதிகளையும் தமிழக அரசு என்ன செய்தது.

ஏற்கெனவே வழங்கிய நிதிக்கு தமிழக அரசு கணக்கு சொல்ல வேண்டும். ரூ 5000 கோடியை முறையாக பயன்படுத்தியிருந்தாலே மிக்ஜாம் புயலால் சென்னை பாதிக்கப்பட்டிருக்காது. ரூ 5000 கோடியில் 90 சதவீதம் செலவழித்து மழை நீர் வடிகால் பணிகளை செய்ததாக அரசு கூறியிருந்தது. ஆனால் அப்படி செலவு செய்தும் பாதிப்பு ஏற்பட்டது எப்படி.
90 சதவீதம்: நிதி என்னாச்சு என கேட்டால் 90 சதவீதம் பணிகள் முடியவில்லை என்கிறார்கள். இத்தனை நிதியையும் வாங்கிக் கொண்டு மோடி அரசிடம் இருந்து நிவாரண நிதி வரவே இல்லை என்கிறார்கள். உண்மையை பேசலாமே! நிவாரண நிதியெல்லாம் உயர்மட்ட ஆலோசனை முடிந்த பிறகு வரும் என தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில் ஒரு நாட்டின் பாதுகாப்பு விஷயத்தையும் இறையாண்மை விஷயத்தையும் தேர்தலுக்காகதான் பேச வேண்டும் என்பதில்லை. எப்போது வேண்டுமானாலும் பேசலாமே. அது நமது உரிமைதானே. இந்த உரிமையால்தான் இப்போது பேசப்படுகிறது. கச்சத்தீவு விவகாரத்தில் 50 ஆண்டுகளாக உண்மைக்குப் புறம்பான பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. கச்சத்தீவு என்பது நம் மீனவர்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகும்.
பொருளாதார மண்டலம்: இது நமது பொருளாதார மண்டலத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் கச்சத்தீவு விவகாரத்தை எப்படி பேசாமல் இருப்பது? பேசக் கூடாது என எப்படி சொல்கிறீர்கள்? கச்சத்தீவு தாரைவார்த்தபோது திமுக, காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்திருந்தன. இப்போதும் அவர்கள் கூட்டணியில்தான் இருக்கின்றன.
காங்கிரஸ் கட்சி ஒரு தேசிய கட்சி, மத்தியில் அவர்கள் ஆட்சியில்தான் இப்படி ஒரு சம்பவம் நடந்தது. அப்படியிருக்கும் போது காங்கிரஸ் அதுகுறித்து விளக்கம் கொடுக்காமல் எங்களை பேசக் கூடாது என சொல்கிறது. முன்னாள் பிரதமர் நேரு கச்சத்தீவை ஒரு தொல்லை என்றே விவரித்துள்ளார். அது போல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியோ கச்சத்தீவை சிறிய பாறை என்றார்.
முண்னாள் முதல்வர் கருணாநிதி: 1974 ஆம் ஆண்டு வெளியுறவுத் துறை செயலாளர் விரிவாக எடுத்து கூறியும் அப்போதைய முதல்வர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் பொய் பிரச்சாரம் மட்டும் செய்கிறார்கள். இதை மக்கள் புரிந்து கொள்வதற்காகத்தான் உண்மை தகவலை ஆர்டிஐயிடம் இருந்து பெற்று வெளியிட்டோம். தேர்தலுக்காக இல்லை, தேர்தல் இல்லாவிட்டாலும் சொல்ல வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. தமிழக மக்களுக்கு கச்சத்தீவு குறித்த உண்மை தெரிய வேண்டும்.
தமிழக மக்களுக்கு விரோதமான செயல்களையே காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது செய்துள்ளது. அப்போதெல்லாம் கூட்டணி கட்சியான திமுக அமைதியாகவே இருந்தது., ஜல்லிக்கட்டு விவகாரத்திலும் தடை விதித்த போது காங்கிரஸுடன் திமுக கூட்டணியில் இருந்தது. கூட்டணி கட்சி ஆட்சியில் இருந்த போதெல்லாம் விட்டுவிட்டு தற்போது பிரதமர் மோடிக்கு திமுக 21 முறை கடிதம் எழுதுகிறது.
10 ஆண்டுகள்: இந்த விவகாரத்தில் 10 ஆண்டுகளாக மத்திய அரசு என்ன செய்தது என கேட்கிறார்கள். உச்சநீதிமன்றத்தில் கச்சத்தீவு தொடர்பாக இரு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தால்தானே இதை பற்றி பேச முடியும். யாரை தேர்தலில் போட்டியிட வைக்க வேண்டும் என்பதை எங்கள் கட்சி தீர்மானிக்கும். எங்கள் கட்சி எப்போது தீர்மானிக்கிறதோ அப்போது நான் தேர்தலில் போட்டியிடுவேன். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications