நிர்மலா சீதாராமனிடம் ராகுல் கேட்ட 2 கேள்வி.. அமித்ஷா வீட்டில் டாடா குழும நிர்வாகிகளுக்கு விருந்தா?
சென்னை: டாடா குழுமத்தில் நடக்கும் பிரச்சனை இப்போது அரசியல் மோதலாக மாறியுள்ளது. சந்திரசேகரனின் பதவிக்கால நீட்டிப்பு, நோயல் டாடாவின் எதிர்ப்பு எனத் தொடங்கிய விவகாரத்தில் ராகுல் காந்தியும் நிர்மலா சீதாராமனும் நேரடியாக மோதியுள்ளனர்... இதில் அமித் ஷாவின் இல்லத்தில் நடந்த சந்திப்பு குறித்து ராகுல் எழுப்பிய கேள்விகளும் கவனம் பெற்றுள்ளன..!!!
டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என். சந்திரசேகரன் உள்ளார். அவரது பதவிக்காலத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க டாடா சன்ஸ் வாரியக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், டாடா அறக்கட்டளையின் தலைவர் நோயல் டாடா இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

சந்திரசேகரனின் மறுநியமன நடைமுறை
சந்திரசேகரனின் மறுநியமன நடைமுறையில் விதிமீறல்கள் இருப்பதாக நோயல் டாடா கேள்வி எழுப்பியுள்ளார். இதற்காகத் தேர்வுக் குழு அமைக்கப்படவில்லை என்றும், அந்தக் குழுவின் பரிந்துரை வாரியத்தின் முன் வைக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமல்ல, கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் மறுநியமனம் தெளிவாக இடம்பெறவில்லை, வாக்கெடுப்பு நடைமுறைகளிலும் சிக்கல்கள் உள்ளன.. இதுதொடர்பான கூட்டத்தின் ஒலி, ஒளிப் பதிவுகள் மற்றும் இறுதி முடிவுகள் அடங்கிய ஆவணங்கள் தேவை என்றெல்லாம் அவர் கேட்டுள்ளார்.
இந்நிலையில், டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடுவது தொடர்பாகவும் கருத்து வேறுபாடு நிலவுகிறது. டாடா சன்ஸ் நிர்வாகம் சந்திரசேகரன் தொடர்ந்து தலைவராக நீடிக்க வேண்டும் என்றும், நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டும் என்றும் விரும்புகிறது. ஆனால், நோயல் டாடா இந்த இரண்டையும் விரும்பவில்லை என்று இந்த விவகாரம் தொடர்பான செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி சொன்னது என்ன?
இந்த விவகாரம் தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், "டாடா குழுமம் குற்றவியல் முறையில் அழிக்கப்படுகிறது. இது குறித்து எந்த வணிகத் தலைவரும் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. இன்னும் எவ்வளவு காலம் இப்படியே அமைதியாக இருப்பீர்கள்? அவர்கள் உங்களை முழுமையாக கையகப்படுத்தும் வரை காத்திருப்பீர்களா?
இந்திய வணிக உலகம் என்பது பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் விளையாட்டுப் பொருள் கிடையாது.. உங்களிடம் துணிச்சல் இல்லை. ஆனால், எங்களிடம் இருக்கிறது. இந்த அநீதிக்கு நாங்கள் நீதியைபெற்றுத் தருவோம்" என்று ராகுல் காந்தி பதிவிட்டிருந்தார்.
நிர்மலா சீதாராமன் பதிலடி
ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனடியாக பதிலளித்தார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் "எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி, எல்லா விவகாரங்களையுமே அரசியலாக்காதீங்க.. சாதாரண வணிகம் மற்றும் சட்ட ரீதியான விவகாரங்களை கிரிமினல் குற்றம் என மிக சாதாரணமாக முத்திரை குத்துவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
இந்திய தொழில்துறையின் வெற்றிகளையும், நமது தொழில்முனைவோரையும் தொடர்ந்து நீங்கள் இழிவுபடுத்தி வருகிறீர்கள். இப்போது நமது தொழிலதிபர்களையும் தூண்டிவிட்டு, அவர்களையும் உங்களுடன் சேர்த்துக்கொண்டு நம்பிக்கையின்மையையும் நச்சுத்தன்மையையும் பரப்ப முயல்கிறீர்களா?
முதலீடுகள், லைசென்ஸ் கோட்டா
பல வருடங்களாக காங்கிரஸ் ஆட்சியிலிருந்த லைசென்ஸ்-கோட்டா முறையால், தொழில் தொடங்குவோரின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது... இதனால் கோடிக்கணக்கான மக்கள் வறுமையில் தள்ளப்பட்டனர்.. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம், இந்திய தொழில்துறையை வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சக்தியாகவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை இயக்கும் இயந்திரமாகவும் மதிக்கிறது.
நமது கொள்கைகள் தொழில்களை எளிதாக நடத்தவும், தொழில்துறையை ஆதரிக்கவும், முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையிலுமே வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதை விடுத்து, நமது தொழில்துறையை ஆதரிப்பதிலும், விவசாயிகளை வலுப்படுத்துவதிலும், நமது இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதிலும் அரசியல் கட்சிகள், தலைவர்கள், அரசுகள் மற்றும் அமைப்புகள் என அனைவருக்கும் சம பங்கு உள்ளது.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய்
எனவே, உங்களின் குறுகிய அரசியல் லாபங்களுக்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதை விட்டுவிட்டு, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது மிகவும் அவசியம்... இந்திய அரசியலமைப்பு சட்டம் தனது குடிமக்கள் அனைவருக்கும் நீதியை உறுதி செய்கிறது.
மேலும் அதை நிலைநிறுத்தும் பொறுப்பு நமது மாண்புமிகு நீதிமன்றங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீங்களும், உங்கள் கட்சியும், உங்கள் கட்சியை சேர்ந்த பிரதமர்களும் நீதித்துறையை எப்படியெல்லாம் தரம் தாழ்த்தினீர்கள் என்பதற்கு வரலாறே சாட்சி. அதனால் ராகுல் ஜி, இல்லாத பூதத்தை தேடிக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள்! அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய் ஆகத் தான் தெரியும் என சொல்லிக் கொள்கிறேன். இதனை தவிருங்கள்" என்று பதிவிட்டிருந்தார்.
ராகுல் கேட்ட 2 கேள்விகள்
நிர்மலா சீதாராமனின் பதிலுக்கு பிறகு, ராகுல் காந்தி மீண்டும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு 2 கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.. "அன்புள்ள திருமதி. சீதாராமன் அவர்களுக்கு,
1. டாடா அறக்கட்டளை மற்றும் டாடா சன்ஸ் நிர்வாகிகளை அமித் ஷாவின் இல்லத்திற்கு அழைத்து விருந்தளிக்க வேண்டிய அளவிற்கு அப்படி என்ன "சட்ட மற்றும் வணிக ரீதியான விவகாரம்" இருந்தது?
2. உங்கள் முதன்மைக் கூட்டாளி எப்போது களத்தில் இறங்கப்போகிறார்? டாடாவின் எந்தெந்த பங்குகளை அவர் கைப்பற்றப் போகிறார்?
இறுதியாக, உங்களின் 3-4 கூட்டாளிகளை தவிர, இந்தியாவின் அனைத்து தொழிலதிபர்களும் ஏற்கனவே உங்கள் அனைவரையும் வெறுக்கத் தொடங்கிவிட்டார்கள். அவர்களைத் தூண்டிவிட யாருடைய அவசியமும் தேவையில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரனின் பதவிக்கால நீட்டிப்பு, நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிடுவது தொடர்பான கருத்து வேறுபாடுகள் ஆகியவற்றைத் தொடர்ந்து, இந்த விவகாரம் அரசியல் மோதலாகவும் மாறியுள்ளது பெரும் கவனத்தை பெற்று வருகிறது...!!!




Click it and Unblock the Notifications
