தங்கம் விலையில் ஏற்பட்ட வரலாறு காணாத மாற்றங்கள்.. 2024ல் நடந்த விஷயங்களை கவனித்தீர்களா?
சென்னை:2024ம் ஆண்டு தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வளவு தூரம் விலை உயரப்போகிறது என்றாலும் யாராலும் கணிக்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது. அதேநேரம் தங்கம் விலையில் மிகப்பெரிய ஏற்ற இறக்கங்களும் இந்த ஆண்டு நடந்துள்ளது. பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த மிகப்பெரிய அறிவிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, டிரம்ப் வெற்றி ஆகியவை ஏற்படுத்திய தாக்கம் பற்றி பார்ப்போம்.
இந்தியாவில் தங்கம் ஒவ்வொரு வீட்டின் கலாச்சாரமாகவும், சேமிப்பிற்காகவும், குழந்தைகளின் பாதுகாப்பு பெட்டகமாகவும், பெற்றோர்களின் சீதனமாகவும் இருக்கிறது. பெண் குழந்தை வளர வளர வீட்டில், குழந்தைகளின் வளர்ச்சியை போல் தங்கத்தின் அளவையும் அதிகரித்துக் கொண்டே செல்வார்கள்.. பெண்களை திருமணம் செய்யும் போது, உடன் தரும் முக்கியமான பொருள் தங்கம்..

தங்கத்தை ஆபரண பொருட்களாக மட்டும் பார்க்காமல் அதை வாங்கி சேமித்தவர்கள் வாழ்வு இன்று பிரகாசமாக இருக்கிறது.. சென்னையில் 1980களில் இடம் வாங்கி போட்டவர்கள், 1990களில் இடம் வாங்கியவர்கள், ஏன் 2000களில் இடம் வாங்கியவர்கள் வரை கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள். அதுபோல் தங்கம் வாங்கி குவித்த பலர் இன்று மிகப்பெரிய கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள்.
தங்கம் விலை கடந்த 2006ம் ஆண்டு வாக்கில் ஒரு பவுன் 6000 ரூபாய் என்கிற அளவில் இருந்தது. இரண்டு பவுன் நகையை வெறும் 12000க்கு எடுத்த நியாபகம் உள்ளது. அதேபோல் 2012ல் 10000க்கும். 2019ம் ஆண்டு 22000 ரூபாய்க்கும் எடுத்த நியாபகம் உள்ளது. அடுத்ததாக லாக்டவுன் முடிவுக்கு பிறகு 35000 ரூபாய் என்கிற அளவில் தங்கம் விலை உயர்ந்தது. அப்படியே அடுத்த அடுத்த இரண்டு வருடத்தில்.. அதாவது கடந்த 2023ம் ஆண்டு டிசம்பரில் தங்கம் விலை 48 ஆயிரத்தை எட்டியது. வெறும் 5 ஆண்டுகளில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ.23 ஆயிரம் வரை அதிகரித்து இருந்தது. ஆனால் 2024 ஜனவரி முதல் மார்ச் வரை 3 மாதங்கள் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. ஆனால் மார்ச் மாதம் தொடங்கி ஜூலை மாதத்திற்குள் தங்கம் வலை தாறுமாறாக ஏறத்தொடங்கியது. 48 ஆயிரத்தில் இருந்து கிட்டத்தட்ட 54000 ரூபாய் வரை உயர தொடங்கியது.
இந்நிலையில் ஜூலை மாதம் மத்திய பட்ஜெட் அறிவிப்பில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைத்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதன் எதிரொலியாக பட்ஜெட் தாக்கல் செய்தே அன்றே ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.275-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 200-ம் குறைந்தது. தங்கம் விலை வரலாற்றில் இந்த அளவுக்கு குறைந்தது இதுவே முதல் முறையாகும். இதன் தொடர்ச்சியாக தங்கம் விலை இறங்கு முகத்திலேயே இருந்து. அடுத்த நாளே கிராமுக்கு ரூ.60-ம், பவுனுக்கு ரூ.480-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 490-க்கும், ஒரு சவரன் ரூ,51 ஆயிரத்து 920-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை ஜூலை மாத இறுதியில் வெறும் 2 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.335-ம், சவரனுக்கு ரூ,2 ஆயிரத்து 680-ம் குறைந்தது. ஒரு பவுன் தங்கம் மீண்டும் ரூ.52 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. ஜூலை 25 ஆம் தேதி அன்று 22 காரட் தங்கம் விலை கிராமிற்கு ரூ.60 குறைந்து ரூ.6430 க்கும் விற்பனையானது. இதேபோல் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.51,440 க்கும் விற்பனையானது. ஆனால் அதன்பிறகு அமெரிக்க பெடரல் வங்கி வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை குறைத்த அறிவிப்பு வெளியானதால், தங்கம் விலை மின்னல் வேகத்தில் மீண்டும் உயரத்தொடங்கியது.
அந்த வகையில் கடந்த செப்டம்பர் 21-ந் தேதி ஒரு பவுன் ரூ.55 ஆயிரத்து 680-க்கு விற்பனை ஆகி, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. அதன்பிற்கு செப்டம்பர் 24ம் தேதி ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்துக்கும், ஒரு பவுன் ரூ.56 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. அடுத்த நாளே , அதாவது செப்டம்பர் 25ம் தேதி அன்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 480 ரூபாய் உயர்ந்து ரூ. 56,480 ஆக விற்பனையானது.
இப்படி படிப்படியாக உயர்ந்த தங்கம் விலையில், இஸ்ரேல்- ஈரான் நாடுகளில் போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை சரிவு, அமெரிக்க அதிபர் தேர்தல் போன்ற காரணங்களால் பெரிய மாற்றம் கடந்த அக்டோபர் மாதத்தில் ஏற்பட்டது. கடந்த அக்டோபர் 31ம் தேதி அதிரடியாக உயர்ந்து ஒரு கிராம் 7,455க்கும், ஒரு பவுன் தங்கம் 59640க்கும் உயர்ந்தது. அதன்பிறகு சற்று குறைந்து 59000 என்கிற அளவிலேயே நீடித்த தங்கம் விலை, அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றியால் மீண்டும் சரிய தொடங்கியது.
நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற மறுநாளே சென்னையில் ஆபரண தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு 1320 ரூபாய் குறைந்தது இதன் காரணமாக ஒரு சவரன் தங்கம் 57600 ரூபாய்க்கு விற்பனையானது. அதன்பிறகு அதிரடியாக குறைய தொடங்கிய தங்கம் விலை நவம்பர் 11ம் தேதி பவுனுக்கு ரூ.880 குறைந்து ரூ.55,480ஆக விற்பனையாகியது. இந்நிலையில் தங்கம் விலை டிசம்பரில் மீண்டும் ஏறத்தொடங்கியது. டிசம்பரில் 24ம் தேதியான இன்றைய நிலவரப்படி, 22 கேரட் தங்கம் ஒரு கிராம் 7,090 ரூபாய்க்கும், ஒரு சவரன் 56,720 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கடந்த இரண்டு வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications