சென்னை மெட்ரோ 2 மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு.. நிர்மலா சீதாராமன் சொன்ன கடைசி பாயிண்டை கவனித்தீர்களா?
சென்னை மெட்ரோ 2ம் கட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டிற்கு மத்திய அரசு முழுமையாக ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்புள்ள இந்த திட்டத்திற்கான 65 சதவீத பணத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டிருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று விளக்கம் அளித்தார். இந்நிலையில் இந்த நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் இறுதியாக நிர்மலா சீதாராமன் கூறிய கடைசி பாய்ண்ட் தற்போது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் மிகுந்த அமோக வரவேற்பை பெற்றுள்ளளது. சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும், திருவெற்றியூர் விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலும் செயல்பட்டு வருகிறது. இதில் தினம் தோறும் 3 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணிக்கிறார்கள். ஒரு மாதத்திற்கு சுமார் 80 லட்சம் முதல் 90 லட்சம் பேர் வரை இப்போது பயணிப்பதாக கூறப்படுகிறது. இத்தனைக்கும் சென்னையின் முக்கிய வழித்தடங்களை இணைக்கும் வகையில் இந்த வழித்தடம் இல்லை..

அப்படி இருந்தும் இவ்வளவு பேர் பயணிக்கிறார்கள். நிச்சயம் சென்னை முழுக்க உருவாக்கினால், மக்களிடையே பெரிய வரவேற்பு இருக்கும் என்பதை உணர்ந்த அரசு, உடனடியாக சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகளை மேற்கொண்டது. இதன்படி மாதவரம் முதல் சிறுச்சேரி, கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி, மாதவரம் முதல் சோழிங்கநல்லூா் வரை என மொத்தம் 118 கிலோ மீட்டர் தூரத்திற்கு செயல்படுத்தப்படுகிறது. பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அதற்கான திட்ட மதிப்பீடு ரூ.63 ஆயிரத்து 246 கோடி ஆகும்.
இந்த 2-ம் கட்ட மெட்ரோ ரெயிலுக்கான திட்டப்பணிகள் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், இந்த திட்டம் முழுக்க முழுக்க மாநில அரசு திட்டமாக இருந்தது. அதனால் மத்திய அரசின் நிதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 2021ல் முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், தமிழக பட்ஜெட்டில் கணிசமாக நிதி ஒதுக்கி மெட்ரோ ரயில் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார். இதன்படி பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் நிதி போதிய அளவில் கிடைக்காத காரணத்தால், பணிகள் மந்தமாகவே நடந்து வருகின்றன.
இதையடுத்து முதல்வர் ஸ்டாலின், சென்னை 2-வது மெட்ரோ ரயில் திட்டபணிகளுக்கு மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார். இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைகூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு எவ்வளவு தொகையை சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்திற்கு தரப்போகிறது என்பது தெரியவில்லை.. இதனிடையே சென்னை 2ம் கட்ட மெட்ரோவிற்கு ரூ.63 ஆயிரத்து 246 கோடியை மத்திய அரசே தருவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின.
இந்த தகவல்களை உண்மையில்லை என்று தமிழக அரசின் அதிகாரப்பூர்வ தகவல் சரிபார்ப்பகம் மறுப்பு தெரிவித்து பதிவு வெளியிட்டது. அந்த பதிவில், " சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிகளுக்கு மத்திய அரசு தரப்பில் ரூ.7 ஆயிரத்து 425 கோடியும், தமிழ்நாடு அரசு தரப்பில் ரூ.22 ஆயிரத்து 228 கோடியும், பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மூலம் மாநில அரசின் உத்தரவாதத்தில் கடனாக ரூ.33 ஆயிரத்து 593 கோடியும் பெறப்படும்" என்று கூறப்பபட்டிருந்தது. இதனிடையே தமிழக அரசின் அதிகாரப்பூர்வ தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்ட தகவல்கள் வேகமாக பரவிய நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்திற்கு செய்யப்படும் நிதி உதவித்தொகை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், "சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம் ரூ.63 ஆயிரத்து 246 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் 90 சதவீதம் அளவுக்கு தமிழ்நாடு அரசின் பொறுப்பு என்ற நிலையில், மாநிலத்துறையின் திட்டமாகவே செயல்பட்டு வந்தது. ஆனால் தற்போது இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்தது. அதன் காரணமாக இனி இந்த திட்டம் மத்திய துறை திட்டமாக செயல்படுத்தப்படும்.
கடந்த 2017-ம் ஆண்டு சென்னை மெட்ரோ ரயில் கொள்கையின்படி நிலத்தின் விலை மற்றும் சில பொருட்களைத் தவிர்த்து, திட்டச் செலவில் 10 சதவீதம் நிதியளிப்பதே மத்திய அரசின் பங்காக இருந்து வந்தது. மேலும் இருதரப்பு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து மாநில அரசு ரூ.32 ஆயிரத்து 548 கோடி கடனாக நிதி பெறுவதற்கு மத்திய அரசு நேரடியாக உதவி செய்திருக்கிறது. இதில் இதுவரை சுமார் ரூ.6 ஆயிரத்து 100 கோடி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதன் மூலம் மதிப்பீட்டுச் செலவில் ஏறத்தாழ 65 சதவீதத்தை இப்போது மத்திய அரசு வழங்கும். அதன்படி அதில் இந்த நிதி உதவியில் ரூ.33 ஆயிரத்து 593 கோடி முழு கடன் மற்றும் சமபங்கு மற்றும் சார்நிலைக் கடனான ரூ.7 ஆயிரத்து 425 கோடியும் அடங்கும். மீதமுள்ள 35 சதவீத மதிப்பீட்டுச் செலவுக்கு மாநில அரசு நிதி உதவி செய்யும்.
எனவே, பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் கடன்கள், மத்திய அரசின் கடனாக கருதப்பட்டு, மத்திய அரசின் பட்ஜெட்டில் இருந்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு நேரடியாக வழங்கப்படும். மத்திய அரசால் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படுவதற்கு முன், திட்டத்திற்கான கடன் நிதி கிடைக்கச் செய்வது அல்லது ஏற்பாடு செய்வது மாநில அரசின் செயல்பாடாக இருந்தது. ஆனால் இப்போது மத்திய அரசின் ஒப்புதலால் இதர வளர்ச்சிப்பணிகளுக்கு ரூ.33 ஆயிரத்து 593 கோடி அளவுக்கு நிதி அளிக்க மாநில அரசின் பட்ஜெட் நிதி ஆதாரம் விடுவிக்கப்பட்டிருக்கிறது.
மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைத் தொடர்ந்து, கடன், திட்ட ஒப்பந்தங்கள் மற்றும் அது தொடர்பான ஆவணங்கள் மீது மறு பேச்சுவார்த்தை நடத்த, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை, ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, புதிய வளர்ச்சி வங்கி ஆகிய இருதரப்பு மற்றும் பன்னாட்டு முகமைகளை மத்திய நிதி அமைச்சகம் இனி அணுகும்.
இதேபோல, இந்த கடன்கள் மாநில அரசுக்கானது அல்லாமல் மத்திய அரசுக்கானதாகவே கருதப்படும். முன்பு சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து கடன் தொகை மாநில அரசுக்கும், மாநில அரசின் பட்ஜெட்டில் இருந்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கும் செல்லும். ஆனால் தற்போதைய இந்த வழிமுறைகளுக்கு மாறாக, இனி சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து மத்திய அரசுக்கும், மத்திய அரசின் பட்ஜெட்டில் இருந்து நேரடியாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கும் செல்லும் வழிமுறையாக மாற்றி அமைக்கப்படும்.
சென்னை மெட்ரோ ரயில் மூலம் திட்ட செயலாக்க முகமையாக மாநில அரசு இருந்து வந்தது. இனிமேல்சென்னை மெட்ரோ ரயில் மூலம் திட்ட செயலாக்க முகமையாக மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் செயல்பட போகிறது. கடன், திட்ட ஒப்பந்தங்கள் மற்றும் அது தொடர்பான ஆவணங்ளில் இந்த மாற்றங்களுக்கான நடைமுறை தொடங்கப்பட்டிருக்கிறது. மாநில அரசின் ஒத்துழைப்புடன் இது விரைந்து முடிக்கப்படும்.
கடனை திருப்பிச் செலுத்தும் பொறுப்பு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தைச் சார்ந்தது. திருப்பிச் செலுத்துதல், பொதுவாக குறைந்தபட்சம் 5 ஆண்டு காலத்திற்குப்பின், அதாவது ஏறத்தாழ திட்டம் முடிந்தபின் தொடங்கும். கடனைத் திருப்பிச் செலுத்தும் நிலையில் சென்னை மெட்ரோ ரயில் இல்லாத பட்சத்தில், அந்த ஆண்டுகளில் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு ஏதுவாக அந்த நிறுவனத்திற்கு நிதி உதவி வழங்குவது மாநில அரசின் கடமையாகும்." இவ்வாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட இந்த அறிவிப்பின் கடைசி பாயிண்ட் படி, கடனை திருப்பி செலுத்தும் பொறுப்பு சென்னை மெட்ரோ நிறுவனத்திற்கு தான் உள்ளது என்றாலும், ஒருவேளை கடனைத் திருப்பிச் செலுத்தும் நிலையில் சென்னை மெட்ரோ ரயில் இல்லாத பட்சத்தில், அந்த கடனை மாநில அரசு தான் கட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் இது எப்படி மத்திய அரசின் திட்டமாகும் என்று கேள்வி எழுப்பி திமுகவினர் மூக வலைதளங்களில் விவாதித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications