ஒரே கார்.. 1 லட்சம்.. சென்னையில் மாஸ் காட்டிய நிசான் ‘மேக்னைட்’.. இரண்டரை ஆண்டுகளிலேயே செம சாதனை!
சென்னை : நிசான் கார் தயாரிப்பு நிறுவனத்தின் சென்னை ஆலையில், நிசான் மேக்னைட் எஸ்யூவி கார் உற்பத்தி வெற்றிகரமாக ஒரு லட்சத்தை கடந்து சாதனை படைத்துள்ளது.
சென்னையை அடுத்த ஒரகடத்தில் 600 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான ஆலையை அமைத்துள்ளது நிசான் நிறுவனம். இங்கிருந்து நிசான் நிறுவனத்தின் கார்கள் உலக நாடுகள் பலவற்றிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான நிசான், இந்திய கார் சந்தையில் ஒரு உறுதியான இடத்தை தக்கவைக்கப் போராடிய நிலையில், நிசான் நிறுவனத்திற்கு மேக்னைட் எஸ்யூவி கார் பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளது.
நிசான் தனது மலிவு விலை எஸ்யூவி தயாரிப்பான நிசான் மேக்னைட் காரை கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பரில் அறிமுகம் செய்தது. விற்பனைக்கு வந்த இரண்டரை ஆண்டுகளுக்கு உள்ளாகவே 1 லட்சம் கார் உற்பத்தி என்ற அசாதாரண மைல்கல்லை எட்டியுள்ளது நிசான் மேக்னைட் எஸ்யூவி மாடல்.
இந்திய சந்தையில் நிசான் நிறுவனம் மேக்னைட் எஸ்யூவி காரை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. மேக்னைட் எஸ்யூவி கார் இந்தியா மட்டுமல்லாமல், வங்கதேசம், உகாண்டா, சீஷெல்ஸ் மற்றும் புருனே உட்பட 15க்கு மேற்பட்ட உலகளாவிய நாடுகளின் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
ஜபானில் வடிவமைக்கப்பட்டு இந்தியாவில் தயாரிக்கப்படும் மேக்னைட் எஸ்யூவி காரில் 100 hp பவரை 5,000rpm மற்றும் 160 Nm டார்க் 2,800-3,600 rpm-ல் (152Nm - CVT) வழங்கும் 1.0 லிட்டர் HRA0 டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், சென்னை ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட நிசான் மேக்னைட் எஸ்யூவி மாடலின் 1 லட்சமாவது காரை வெளியிட்டுள்ளது நிசான் நிறுவனம். சிவப்பு நிறத்திலான 1 லட்சமாவது நிசான் மேக்னைட் காரை அந்நிறுவனத்தினர் கொடியசைத்து வெளியிட்டனர்.
"100,000வது மேக்னைட் காரின் உற்பத்தியானது, அதன் வாடிக்கையாளர்களுக்கு மதிப்பு, பாதுகாப்பு மற்றும் வலுவான வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றில் உயர்ந்த தயாரிப்புகளை வழங்கும் நிசானின் பிராண்ட் வாக்குறுதிக்கு சான்றாகும்" என்று நிசான் மோட்டார் இந்தியா நிர்வாக இயக்குனர் ராகேஷ் ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications