ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ்.. விசாரிக்க விஜய் எனக்கு அதிகாரம் கொடுக்கவில்லை.. வன்னி அரசு சொன்ன வார்த்தை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் பெண் ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரம் தொடர்பாக விசாரிக்க தனக்கு எந்த அதிகாரமும் அளிக்கப்படவில்லை என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார். முதல்வர் விஜய் அறிக்கை கேட்டால், விசாரிக்க தயாராக உள்ளேன் என்று கூறிய வன்னி அரசு, ஆட்சியர் பத்மஜா சட்டத்தின் படி செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பிய தொல்லை கொடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் அருள் விக்னேஷ் மற்றும் தவெக கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.

ஆனால் ஆட்சியர் பத்மஜா இதுவரை எந்த விளக்கமோ, மறுப்போ கூறவில்லை. அவரின் மவுனம் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் முதல்வர் விஜய் எம்எல்ஏ அருள் விக்னேஷ்-ஐ அழைத்து கண்டித்ததாக சொல்லப்படுகிறது. எதுவுமே நடக்காமல் முதல்வர் விஜய் ஏன் அருள் விக்னேஷ்-ஐ கண்டிக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதேபோல் அருள் விக்னேஷ் தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்திக்க மறுத்து வருகிறார். மாவட்ட ஆட்சியர் பத்மஜா பங்கேற்கும் நிகழ்ச்சியிலும் அருள் விக்னேஷ்-ஐ பார்க்க முடிவதில்லை. இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தைகள் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கப்பட்டது. இதில் அமைச்சர் வன்னி அரசு மற்றும் ஆட்சியர் பத்மஜா கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பின் அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கள்ளக்குறிச்சி மாவட்ட வளர்ச்சிக்கு நான் என்ன மாதிரியான செயல்பாடுகளில் ஈடுபடுகிறேன் என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வந்தால், பணிகளை முடித்துவிட்டு என்னுடைய திண்டிவனம் தொகுதிக்கு சென்றுவிடுவேன்.
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் விவகாரம் தொடர்பாக முதலில் தெரிந்து கொள்கிறேன். ஏனென்றால் நான் விசாரிக்க வேண்டுமா என்ற அதிகாரத்தை யாரும் கொடுக்கவில்லை. இதுவரை நான் யாரிடம் இதுகுறித்து பேசவில்லை. இதுகுறித்து அறிக்கை கொடுக்க முதல்வர் விஜய் கூறினால், நான் விசாரிக்கலாம்.
அதேபோல் பெண்கள் தொடர்பாக இது மாதிரியான செய்தியை பரப்புவது பல்வேறு காலக்கட்டங்களிலும் செய்வது வருகிறார்கள். தமிழ்நாட்டிலேயே சிறந்த ஆட்சியராக பத்மஜா செயல்பட்டு வருகிறார். அவரின் செயல்பாடுகள் ஆளுங்கட்சிக்கோ, எதிர்க்கட்சிக்கோ சாதகமாக இல்லாமல், சட்டத்தின்படி செயல்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.




Click it and Unblock the Notifications
