பேங்க் அக்கவுண்ட் இல்லாமலே ரூ.50000 அனுப்பலாம்! கையில் பணம் இருந்தால் போதும்.. RBI புதிய ரூல்ஸ் என்ன
சென்னை: சென்னையில் வேலை பார்க்கும் ஒருவர், சொந்த ஊரிலுள்ள தன்னுடைய குடும்பத்துக்கு பணம் அனுப்ப வேண்டும்... ஆனால் அவரிடம் வங்கிக் கணக்கு இல்லை என்றால் என்ன செய்வது? இதற்கும் இப்போது வழி பிறந்து விட்டது.. பேங்க் அக்கவுண்ட் இல்லாதவர்களும் பணம் அனுப்பவும், பணம் பெறவும் என்னென்ன வழிகள் உள்ளன என்பதை ரிசர்வ் வங்கி தற்போது தெளிவுபடுத்தியுள்ளது. அதை பற்றி இங்கே பார்ப்போம்..!!
இந்தியாவில் எத்தனையோ பேர், வேலைக்காக ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு செல்கிறார்கள். இவர்களில் சிலருக்கு வங்கிக் கணக்கு இருக்காது. சிலரிடம் தேவையான ஆவணங்கள் இல்லாமல் இருக்கலாம். இதனால் வீட்டுக்குப் பணம் அனுப்புவதில் சிரமம் ஏற்படலாம்.
இப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் ஏற்கனவே நடைமுறையிலிருந்த உள்நாட்டுப் பணப் பரிமாற்ற விதிகளை ரிசர்வ் வங்கி இப்போது ஒரே தொகுப்பாக வெளியிட்டுள்ளது. இந்த புதிய வழிகாட்டுதல்கள் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளன.

வங்கிக் கணக்கு இல்லாமல் ரூ.50,000
வங்கிக் கணக்கு இல்லாமல் ரூ.50,000 அனுப்ப முடியும்.. ஒருவருக்கு வங்கி கணக்கு இல்லாவிட்டாலும், அவர் வங்கி கிளைக்கு சென்று பணத்தை செலுத்தி இன்னொருவரின் வங்கிக் கணக்குக்கு அனுப்பலாம். இதற்கு NEFT முறையை பயன்படுத்தலாம். இந்த வழியில் ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சம் ரூ.50,000 வரை அனுப்ப முடியும். அதாவது, பணம் அனுப்புபவருக்கு வங்கிக் கணக்கு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பணம் பெறுபவருக்கு வங்கிக் கணக்கு இருக்க வேண்டும்.
ஏடிஎம் மூலம் எவ்வளவு பணம்
வங்கி கிளைக்கு செல்லாமல் ஏடிஎம் அல்லது பேங்க் ஏஜெண்ட் பணம் அனுப்பவும் வழி இருக்கிறது... ஏஜெண்ட் என்பவர் வங்கியின் சார்பில் அடிப்படை சேவைகளை வழங்குபவர். கிராமப்புறங்கள் உள்ளிட்ட இடங்களில் வங்கிக் கிளைக்குச் செல்ல முடியாதவர்களுக்கு இவர்கள் உதவுகிறார்கள். ஆனால் இந்த வழியில் பணம் அனுப்புவதற்கு வரம்பு உள்ளது. ஒரு முறை அதிகபட்சம் ரூ.5,000 மட்டுமே அனுப்ப முடியும். ஒரு மாதத்தில் மொத்தமாக ரூ.25,000 வரைதான் அனுப்ப முடியும்.
அதேபோல வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு பணம் கிடைக்கும்.. ஒருவரிடம் வங்கி கணக்கு இருந்து, அவருடைய உறவினர் அல்லது குடும்ப உறுப்பினரிடம் வங்கிக் கணக்கு இல்லையென்றாலும் அவருக்கு பணம் அனுப்பலாம்.
அனுப்பப்படும் பணத்தை பெறுபவர் ஏடிஎம், வங்கி முகவர் அல்லது அனுமதி பெற்ற வேறு வழிகள் மூலம் ரொக்கமாகப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் இங்கும் பண வரம்பு உள்ளது... ஒரு முறை அதிகபட்சம் ரூ.10,000 பெறலாம். ஒரு மாதத்தில் ஒருவருக்கு மொத்தமாக ரூ.25,000 வரை மட்டுமே இந்த வழியில் பணம் கிடைக்கும்.
ஆவணங்கள் என்னென்ன
வங்கிக் கணக்கு இல்லாத ஒருவர் பணம் அனுப்பும்போது, அவருடைய செல்போன் எண்ணை வங்கி சரிபார்த்து பதிவு செய்ய வேண்டும். அத்துடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள ஆவணத்தின் நகலை அவரே சான்றளித்துக் கொடுக்க வேண்டும். பணம் அனுப்பும் ஒவ்வொரு முறையும் கூடுதல் பாதுகாப்பு சரிபார்ப்பும் செய்யப்பட வேண்டும்.
ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்
இந்த பணப் பரிமாற்றங்களை வங்கிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்ல, ஒரு வங்கி கணக்குக்கு வழக்கத்தைவிட அதிகமாக பணம் வருவது தெரிந்தால், அதற்கான காரணத்தை வங்கி உடனடியாக விசாரிக்க வேண்டும். சந்தேகத்துக்குரிய பணப் பரிமாற்றங்கள் பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இந்த சேவைக்கு வங்கிகள் நியாயமான கட்டணம் வசூலிக்கலாம். பணப் பரிமாற்றம் தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு ஏதாவது புகார் இருந்தால், ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த குறைதீர்ப்பு திட்டத்தின் கீழ் முறையிடலாம்.
முக்கியமாக, இந்த விதிகள் வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் எல்லா வழிகளிலும் ரூ.50,000 அனுப்பலாம் என்று சொல்லவில்லை.. வங்கிக் கிளையில் NEFT மூலம் அனுப்பினால் ரூ.50,000 வரை அனுப்பலாம். ஏடிஎம் அல்லது வங்கி முகவர் வழியாக அனுப்பினால் ஒரு முறைக்கு ரூ.5,000 என்ற வரம்பு உள்ளது. பணம் பெறுவதற்கும் தனி வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது...!!!



Click it and Unblock the Notifications
