2026 தேர்தலில் நிச்சயம் மாற்றம் இருக்கும்.. அது இதுதான்.. நிர்மலா சீதாராமனுக்கு சேகர்பாபு பதிலடி!
சென்னை: 2026ல் தமிழக சட்டப்பேரவைக்குள் பாஜக சார்பில் ஒருவர் கூட நுழையாமல் இருப்பது தான் மாற்றமாக இருக்கும் என்று அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2026ல் தமிழ்நாட்டில் பெரிய மாற்றம் தேவைப்படுகிறது எனப் பேசியதற்கு சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
தமாகா நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் நினைவு தினத்தையொட்டி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் நேற்று அஞ்சலி செலுத்தினர். அப்போது பேசிய நிர்மலா சீதாராமன், "நாட்டின் பிரதமராக வருவதற்கு மூப்பனாருக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால், அவரை பிரதமராக விடாமல் தடுத்த சக்திகள் யார் என்று எல்லோருக்கும் தெரியும்." என்றார்.

நிர்மலா சீதாராமன் பேச்சு
மேலும், “தற்போது தமிழ்நாடு, தமிழ், தமிழ் கலாச்சாரம், தமிழ் புகழ் என்று பேசிக்கொண்டிருப்பவர்கள், அப்போது தமிழரான மூப்பனாரை பிரதமராக விடாமல் தடுத்தது, தமிழர்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகம். இதை யாரும் மறக்க முடியாது.
2026 தேர்தலில் பெரிய மாற்றம் தேவைப்படுகிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து, இந்த கூட்டணி மூலமாக இம்முயற்சியை மேற்கொள்ள வேண்டும். தமிழக மக்கள் நல்ல ஆட்சியைத் தர வேண்டும். ஒரு குடும்பம் பிழைத்துக் கொண்டிருக்கிறது. எனவே, என்டிஏ கூட்டணி மூலமாக மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும். சிறு பூசல்களை பற்றி கவலைப்படத் தேவையில்லை. எல்லோரும் சேர்ந்து மக்களுக்கு தொண்டாற்றுவோம் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொள்வோம்." எனப் பேசினார் நிர்மலா சீதாராமன்.
சேகர்பாபு பதிலடி
இந்நிலையில், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று கொளத்தூரில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, 2026ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் என்பது கட்டாயம் என்று நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்
அதற்கு பதில் அளித்துப் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 400 தொகுதிகளைத் தாண்டி வெல்வோம் என்றதை இந்தியா கூட்டணி முறியடித்தது. கிட்டத்தட்ட இழுபறியில் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டது தான் பெரிய மாற்றமாக உள்ளது.
மாற்றம் நடக்கும்.. ஆனால்
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் நிச்சயம் மாற்றம் ஏற்படும். தற்போது பாஜகவிற்கு தமிழக சட்டப்பேரவையில் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக உறுப்பினர்களில் ஒருவர் கூட தமிழக சட்டப்பேரவைக்குள் நுழையாமல் இருப்பது தான் அந்த மாற்றமாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications