Red Alert: சென்னையில் நாளை காலைக்குள் சம்பவம் இருக்கு.. ஆழ்ந்த தாழ்வு மண்டலம் வலுவிழக்க வாய்ப்பில்லை! ஹேமசந்தர்
சென்னை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க வாய்ப்பு இல்லை என்றும் சென்னைக்கு அருகிலேயே அடுத்த 24 மணி நேரத்திற்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே தொடரும் என்றும், இதனால் சென்னை, திருவள்ளூரில் நாளை காலைக்குள் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சென்னையில் இன்று அதிகாலையில் இருந்து கொட்டித் தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. மேலும் மழை தொடரும் என வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளதால் மக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதலில் தென் மாவட்டங்கள்
வங்கக் கடலில் கடந்த 27 ஆம் தேதி உருவான டிட்வா புயல் தற்போது தமிழகத்தை ஆட்டம் காண வைத்துள்ளது. 27 ஆம் தேதி புயல் உருவான நிலையில் அன்றைய தினம் தென் மாவட்டங்கள் மற்றும் தெற்கு கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. 27, 28 ஆம் தேதிகள் என இரண்டு நாட்களாக இரவு பகல் பாராமல் தொடர்ந்து மழை கொட்டி தீர்த்தது.
மேலும் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நெல்லையில் குளிரும் வாட்டி வதைத்தது. இதன்பின்னர் 28, 29 ஆம் தேதிகளில் ராமநாதபுரம், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, புதுவை, காரைக்கால், டெல்டா மாவட்டங்களில் இரண்டு நாட்களாக மழை விடாமல் கொட்டி வந்தது. இதன்பிறகு தற்போது அங்கு சற்று மழை குறைந்தது.
சென்னையில் கொட்டும் கனமழை
இந்த நிலையில் நேற்று மற்றும் இன்று சென்னையில் மழை கொட்ட தொடங்கியுள்ளது. அதாவது டிட்வா புயல் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வந்து நேற்று இரவு சென்னை அருகே 80 கிமீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இதனால் பெரிய அளவில் இனி மழை இருக்காது என கணிக்கப்பட்டது. வானிலை மையமும் இன்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையே விடுத்தது.
நாளை காலைக்குள் அதி கனமழை
ஆனால் மேகக்கூட்டங்கள் அதிகரித்ததாலும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை நெருங்கி இருப்பதனாலும் மழை இன்று அதிகாலையில் இருந்தே விட்டு விளாசி வருகிறது. பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்க வாய்ப்பு இல்லை என்றும் சென்னை, திருவள்ளூரில் நாளை காலைக்குள் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
"வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க வாய்ப்பு இல்லை. அடுத்த 24 மணி நேரத்திற்கு அதாவது நாளை மாலை வரை சென்னைக்கு அருகிலேயே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தொடரும். இதன் காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூரில் நாளை காலைக்குள் அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
கடந்த 9 மணி நேரத்தில்..
சென்னை எண்ணூரில் மட்டும் கடந்த 9 மணி நேரத்தில் 19 செமீ மழை பதிவானது. இதேபோல் மணலியில் 16 செமீ மழையும், பாரீசில் 15 செமீட்டரும், ஐஸ் அவுஸில் 14 செமீ, வடபழனி 13 செமீ, கத்திவாக்கம், மேடவாக்கத்தில் தலா 12 செமீ, காசிமேடில் 11 செமீட்டர் மழை பெய்துள்ளது.


Click it and Unblock the Notifications
