உதயநிதியை சிறையில் அடைக்க மாட்டோம்.. மாலையே ஜாமீனில் விடுவிப்போம்.. தமிழக அரசு பின்வாங்கியது
சென்னை: தஞ்சாவூர் பேச்சைத் தொடர்ந்து இன்று காலை 11 மணியளவில் கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் கைது விவகாரத்தில், தற்போது மிகப்பெரிய சட்டத் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலினைச் சிறையில் அடைக்கக் காவல்துறையினர் முற்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் நடைபெற்ற அவசர விசாரணையின் போது தமிழக அரசு தெரிவித்த வாதத்தைத் தொடர்ந்து, மாலையிலேயே அவரை காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தில் அவசர விசாரணை
உதயநிதி ஸ்டாலின் காலை கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது தரப்பு மூத்த வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். அந்த மனுவில், அரசியல் பழிவாங்கும் நோக்கோடும், சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையிலும் எதிர்க்கட்சித் தலைவரைக் சட்டத்திற்குப் புறம்பாக ரிமாண்ட் செய்யக் காவல்துறை திட்டமிட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி முன், உதயநிதி ஸ்டாலின் தரப்பு மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்களிடையே காரசாரமான வாதங்கள் நடைபெற்றன.
சிறையில் அடைக்கும் எண்ணம் இல்லை! - அரசு தரப்பு வாதம்
விசாரணையின் போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், உதயநிதி ஸ்டாலினைக் சிறையில் அடைக்கும் எண்ணம் அரசுக்கோ அல்லது காவல்துறைக்கோ இல்லை எனத் தெளிவுபடுத்தினார்.
எதிர்க்கட்சித் தலைவர் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சட்டப்பூர்வமாக முதற்கட்ட விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமாகிறது.
அவரைச் சிறையில் அடைத்து ரிமாண்ட் செய்யும் நோக்கம் காவல்துறைக்கு இல்லை. காவல் நிலையத்தில் வைக்கப்படும் முறையான விசாரணைக்குப் பிறகு, காவல் துறை ஜாமீனிலேயே அவர் விடுவிக்கப்படுவார்.
அரசு தரப்பின் இந்த வாக்குமூலத்தைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, காவல்துறையின் ரிமாண்ட் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், உதயநிதி ஸ்டாலினின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும், விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையோடும் முக்கிய உத்தரவைப் பிறப்பித்தது:
காவல் நிலையத்தில் விசாரணை முடிந்த கையோடு, செவ்வாய்க்கிழமை மாலையிலேயே உதயநிதி ஸ்டாலினைச் சொந்த ஜாமீனில் விடுவிக்க வேண்டும். அவரை நீதிமன்றக் காவலில் அடைக்கக் கூடாது எனத் தெளிவுபடுத்தப்பட்டது.
காவல்துறையின் விசாரணைக்கு உதயநிதி ஸ்டாலின் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து நீலாங்கரை மற்றும் காவல் நிலையப் பகுதிகளில் முகாமிட்டிருந்த திமுக தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். உதயநிதி ஸ்டாலினைக் சிறையில் அடைத்து அரசியல் ரீதியாக முடக்க நினைத்த ஆளுங்கட்சியின் முயற்சிக்கு நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பெரும் சம்மட்டி அடியாக அமைந்திருப்பதாக திமுக வழக்கறிஞர்கள் அணி தெரிவித்துள்ளது.
காவல் நிலையத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்குப் பிறகு, நீதிமன்ற உத்தரவின்படி உதயநிதி ஸ்டாலின் மாலையில் விடுவிக்கப்பட்டுத் தனது இல்லத்திற்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உதயநிதி பேச்சு விமர்சனம் - பின்னணி
காவரி நதிநீர் பிரச்சனை மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைக் கண்டித்து தஞ்சாவூரில் திமுக சார்பில் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் விஜய்யின் நிர்வாகத் திறமையைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
அவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோதே, கூட்டத்தில் இருந்த சிலர் எழுப்பிய கோஷங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்ட சில கருத்துக்களைத் தெரிவித்தார். அந்த பேச்சு, பெண்களை அவமதிக்கும் வகையிலும் நாகரிகமற்ற இரட்டை அர்த்த தொனியிலும் அமைந்திருந்ததாகக் கூறி, உடனடியாக சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதப் பொருளாக மாறியது. உதயநிதி ஸ்டாலின் பேசிய சில கருத்துகள் எல்லை தாண்டியதாகவும், கண்ணியமற்ற முறையில் அமைந்ததாகவும் புகார்கள் வைக்கப்படுகின்றன.
உதயநிதி பெண்களை அவமதித்து விட்டதாக கூறி, தமிழக வெற்றி கழகம் மாநிலம் தழுவிய அளவில் தீவிரப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. உதயநிதியின் பேச்சில் சில விஷயங்கள் நாகரிகமற்றது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், தவெக தற்போது கையிலெடுத்துள்ள இந்தப் போராட்ட முறை பல்வேறு கேள்விகளையும் விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications
