சென்னையில் இலவச பஸ் பயணம் இனி இல்லை.. போக்குவரத்து கழகம் அறிவிப்பு.. ஐபிஎல் ரசிகர்களே ப்ளீஸ் நோட்!
சென்னை: இனி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை காண செல்வோருக்கு சென்னை மாநகர பேருந்தில் கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படாது என மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா, கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய நிலையில் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. ப்ளே ஆஃப் சுற்றின் குவாலிஃபயர் 2 ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் நாளை பலப் பரீட்சை நடத்த உள்ளன. இதில் வெற்றி பெறும் அணி, இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதும்.

இந்த ஐபிஎல் தொடரில் பல ஆட்டங்கள், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் ஆட்டங்கள், பெரும்பாலும் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தன. இந்த போட்டியை காண வரும் சிஎஸ்கே ரசிகர்களை கவர்வதற்காக, கிரிக்கெட் போட்டி டிக்கெட்டை காண்பித்து மாநகர அரசு பேருந்துகளில் இலவசமாக பயணித்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்தது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடைபெறும் 3 மணி நேரத்திற்கு முன்பும், போட்டி முடிந்து 3 மணி நேரத்திற்கும் பின்னர் வரையும் சேப்பாக்கத்தில் இருந்து பிற இடங்களுக்கு பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம். ஏ.சி பேருந்துகளில் மட்டும் இந்த சலுகை இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இந்த சலுகையை கிரிக்கெட் ரசிகர்கள் பயன்படுத்தி வந்தனர்.
சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் போட்டிகளைக் காண வருபவர்களுக்கு மாநகர போக்குவரத்துக் கழகம் அரசு செலவில் இலவசப் பேருந்து சேவை வழங்கவில்லை. போக்குவரத்து கழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள சிஎஸ்கே அணி நிர்வாகம் பயணச் செலவை போக்குவரத்துத் துறைக்கு செலுத்தியது.
மேலும், சென்னையில் ஐபிஎல் போட்டிகளைக் காணச் செல்லும் ரசிகர்கள், இலவசமாக மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி, சென்னையில் நடைபெறும் சிஎஸ்கே போட்டியைக் காணச் செல்லும் ரசிகர்கள் தங்கள் டிக்கெட்டை காட்டி மெட்ரோ ரயில்களில் இலவசமாக பயணித்து வந்தனர்.
இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட்டின் குவாலிஃபயர் 2 போட்டி மற்றும் இறுதிப்போட்டி வரும் மே 24ஆம் தேதி (நாளை) மற்றும் 26 ஆகிய தேதிகளில் சென்னை சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளை காணச் செல்லும் ரசிகர்களுக்கு, அரசு பேருந்தில் இலவசமாக பயணிக்கலாமா என்று கேள்வி எழுந்தது. ஆனால், சிஎஸ்கே அணி இந்த ஆட்டங்களில் விளையாடததால் பயண கட்டண சலுகை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், "நடப்பு ஐபிஎல் சீசனின் இரண்டாவது குவாலிபையர் மற்றும் இறுதிப் போட்டி வரும் 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சென்னை - சேப்பாக்கம், எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. முந்தைய கிரிக்கெட் போட்டிகளில் சம்பந்தப்பட்ட போட்டிக்கான நுழைவுச்சீட்டு (டிக்கெட்) வைத்திருந்தால் அதை காண்பித்து மாநகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், வரும் 24, 26 தேதிகளில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளுக்கு மாநகர பேருந்துகளில் சலுகை பயணம் அனுமதியில்லை. எனவே, போட்டிக்குச் செல்வோரும் பயணச்சீட்டு பெற்று பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications