"என்கிட்ட பேச யாருக்கும் நேரமில்லை”: தற்கொலை செய்துகொண்ட ஐஐடி மாணவர் அடிக்கடி சொல்வாராம்! ஷாக் தகவல்
சென்னை : நேற்று தற்கொலை செய்துகொண்ட சென்னை ஐஐடி மாணவர் கேதார் சுரேஷ், "எனக்காக செலவழிக்க யாருக்கும் நேரமில்லை, அனைவரும் பிஸியாக இருக்கிறார்கள்" என்று தனது நண்பர்களிடம் அடிக்கடி சொல்வார் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஷோக்லே கேதார் சுரேஷ். 21 வயதான இவர் சென்னை ஐஐடியில் விடுதியில் தங்கி பி.டெக் கெமிக்கல் என்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கேதார் சுரேஷ் நேற்று வகுப்புக்குச் செல்லாமல் தான் தங்கியிருந்த விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நண்பகலில் தங்கள் அறைக்கு வந்த மாணவர்கள், கேதார் சுரேஷ் தூக்கிட்ட நிலையில் இறந்த கிடந்தது பற்றி கல்லூரி நிர்வாகத்திற்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். உடன் தங்கியிருந்த மாணவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஒரு கடிதம் : பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த மாணவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரியவந்துள்ளது. மாணவர் தற்கொலைக்கு காதல் விவகாரம், படிப்பு சார்ந்த அழுத்தம், மன அழுத்தம் அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், விடுதி அறையில் மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதங்கள் ஏதேனும் இருக்கிறதா என்று போலீசார் ஆய்வு செய்தனர். தேதி, கையெழுத்து குறிப்பிடாமல் இருந்த ஒரு கடிதத்தில் அந்த மாணவர் தனது நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
எல்லோரும் பிஸியா இருக்காங்க : மேலும், "எனக்காக செலவழிக்க யாருக்கும் நேரமில்லை, அனைவரும் பிஸியாக இருக்கிறார்கள்" என்று தற்கொலை செய்துகொண்ட மாணவர் கேதார் சுரேஷ், தனது நண்பர்களிடம் அடிக்கடி சொல்வார் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை ஐஐடி-யில் மாணவர்கள் மன அழுத்தத்தில் இருப்பதைத் தவிர்க்க, மன நல நிகழ்வுகளை மீண்டும் அதிகளவில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை ஐஐடியில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 4 பேர் தற்கொலை செய்துகொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மன அழுத்தம் : கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி, சென்னை ஐஐடியில் பிஎச்டி மாணவர் ஒருவர் வேளச்சேரியில் உள்ள தனது அறையில் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன், மார்ச் மாதம் சென்னை ஐஐடியில் ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அதேபோல பிப்ரவரியில், சென்னை ஐஐடியில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆய்வு மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஐஐடியில் படிக்க இடம் கிடைப்பதற்கான கடினமான நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு பல ஆண்டுகளாக மிகுந்த மன அழுத்தத்துடன் மாணவர்கள் தயாராவதே, ஐஐடி மாணவர்கள் அதிகளவில் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணம் என பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications