பியூஷ் கோயல் பேசவே இல்லை.. எல்லா செய்தியும் பொய்.. குட்டையை குழப்பும் பிரேமலதா
சென்னை: சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. நாளை மறுநாள் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகை புரியவுள்ளார். அதற்குள் அதிமுக - பாஜக கூட்டணியை இறுதி செய்யும் பணியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஈடுபட்டுள்ளது. மத்திய அமைச்சரும், பாஜக தமிழ்நாடு பொறுப்பாளருமான பியூஷ் கோயல் தமிழ்நாடு வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்தக் கூட்டணியில் இருந்து விலகிய அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பியூஷ் கோயல் முன்னிலையில் இன்று மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளார். ஏற்கனவே அன்புமணி தலைமையிலான பாமக அந்தக் கூட்டணியில் இணைந்திருந்தார்.
இதையடுத்து விரைவில் தேமுதிகவும் அதிமுக - பாஜக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பிரேதமலதாவிடம், பியூஷ் கோயல் தொலைபேசியில் பேசியதாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்த தகவலை மறுத்துள்ள பிரேமலதா, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தங்களை யாரும் அணுகவில்லை என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னை கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "மக்களுக்கானது தான் அரசியல். மதுரையில் எல்ஐசி அதிகாரியாக இருந்த கல்யாணி என்பவரை உடன் பணியாற்றிய ராமகிருஷ்ணன் என்பவர் படுகொலை செய்துள்ளார். தவறை சுட்டி காட்டியதற்காக அவரை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். இதை ஏற்க முடியாது. இதற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
மக்களின் பாதுகாப்பு
பெண்கள் எல்லா துறைகளிலும் கோலோச்சி வருகிறார்கள். இது பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. ராமகிருஷ்ணனுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும். அவருக்கு கொடுக்கும் தண்டனை வேறு யாருக்கும் நடைபெறாதது போல கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். கஞ்சா போதை மருந்து பழக்கத்தை தடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி திருவிழாவில் சிலிண்டர் வெடித்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனையளிக்கிறது.
தவறான தகவல்
அவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்கியுள்ளது சற்றே ஆறுதல். அந்த மக்களுக்கு தேமுதிக சார்பிலும் அஞ்சலி செலுத்தியுள்ளோம். கூட்டணி குறித்து நான் பலமுறை பதில் சொல்லிவிட்டேன். கூட்டணி விஷயத்தை அறிந்து கொள்ள எங்கள் கட்சி தொண்டர்களை விட பத்திரிகையாளர்கள் தான் ஆர்வமாக இருக்கிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்பாக எங்களுக்கு எந்த அழைப்பும் வரவில்லை. எங்களை யாரும் அணுகவோ, தொலைபேசியில் தொடர்பு கொள்ளவோ இல்லை.
பேச்சுவார்த்தை நடத்தவில்லை
பியூஷ் கோயல் என்னிடம் பேசவில்லை. அவர் எதற்காக இங்கு வந்துள்ளார் என்று கூட தெரியாது. பிரதமர் மோடி 23 ஆம் தேதி வருகிறார் என்பதை செய்தியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். அது எந்த நிகழ்வு என்றும் எனக்கு தெரியாது. கூட்டணி தொடர்பாக நாங்களே அதிகாரபூர்வமாக அறிவிப்போம். யார் இதுபோல் தான் தவறான தகவல்களை பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. நான் தற்போது கட்சி அலுவலகத்தில் தான் உள்ளேன். இந்த நிமிடம் வரை அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக பேச்சுவார்தை நடத்தவில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications