பாஜகவுடன் நட்பா.. அரசியலில் நிரந்தர எதிரி யாரும் கிடையாது.. திமுக எம்பி கனிமொழி சோமு பதில்!
சென்னை: பாஜகவுடன் நட்பு பாராட்டுகிறதா என்ற கேள்விக்கு அரசியலில் யாரும் நிரந்தர எதிரி கிடையாது என்று திமுக எம்பி கனிமொழி என்.வி.என்.சோமு பதில் அளித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு எது நல்லதோ, அது எங்கிருந்து வந்தாலும் கண்டிப்பாக ஆமோதிப்போம் என்று கூறிய கனிமொழி, தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டிற்கு அதிக இடங்களை பெற வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை குறித்து ஆலோசனை நடத்த முதல்வர் விஜய் தலைமையில் அனைத்து கட்சிகளின் எம்பிக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, மநீம உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. தவெக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல் மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் 19 எம்பிக்கள் பங்கேற்றன.

இந்த கூட்டத்தில் தொகுதி மறுவரையறை தேவையில்லை என்றும், 543 தொகுதிகள் என்ற எண்ணிக்கையே தொடர வேண்டும் என்றும் ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட்டது. இதனிடையே பாஜக கொண்டு வரும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு கொடுக்க போவதாக தவெக குற்றம்சாட்டி இருக்கிறது. அதேபோல் திமுக தரப்பில் தொடக்கம் முதலே நியாயமான தொகுதி மறுசீரமைப்பு என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
அந்த நிலைப்பாட்டில் திமுக இப்போதும் தொடர்வதாக திமுக தரப்பில் கனிமொழி அறிவித்தார். இந்த நிலையில் சென்னையில் திமுக சார்பாக ரத்த தான முகாம் நடைபெற்றது. இதனை திமுகவின் எம்பி கனிமொழி என்.வி.என்.சோமு தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கனிமொழி என்.வி.என்.சோமு பேசுகையில், தமிழ்நாட்டிற்கு எது முக்கியம் என்பதில் ஸ்டாலினின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.
தமிழ்நாட்டிற்கு அதிக தொகுதிகள் வர வேண்டும் என்பதிலேயே திமுகவின் கொள்கை என்றைக்கும் இருந்தது. நியாயமான தொகுதி மறுசீரமைப்புக்காக பல்வேறு கட்சிகளின் தலைவர்களை சென்னையில் அழைத்து ஸ்டாலின் கூட்டம் நடத்தி இருக்கிறார். அப்படியொரு செயல்பாடுகள் நடந்திருக்கும் போது, தமிழ்நாட்டில் இப்படியொரு ஆட்சி அமைந்திருப்பது துரதிஷ்டவசமானது.
அந்த ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்தாவது என்ன ஆலோசிக்க வேண்டும் என்பதை பேசி இருக்கலாம். லோக்சபா மற்றும் ராஜ்ய சபாவில் அதிக எம்பிக்களை கொண்டுள்ள திமுகவிடம் முதல்வர் விஜய் ஆலோசனை கேட்டிருக்கலாம். அதில் எந்த தவறும் இல்லை. தவெகவின் விமர்சனத்திற்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
திமுக தொடக்கம் முதலே தமிழ்நாட்டிற்கான எண்ணிக்கை குறையக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது. அரசியல் நிரந்தரமான நண்பன், எதிரி என்று யாரும் கிடையாது. தமிழ்நாட்டிற்கு எது நல்லதோ, எங்கிருந்து வந்தாலும் அதனை ஆமோதிப்போம். அதிக தொகுதிகளை பெறுவதில் திமுக உறுதியாக உள்ளது என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
