தாய்லாந்திலிருந்து சென்னை வந்த வடமாநில இளைஞர்! சூட்கேஸில் 4 கிலோ கஞ்சா! சுங்கத் துறையினர் அதிர்ச்சி
சென்னை: தாய்லாந்து நாட்டிலிருந்து, சென்னைக்கு, விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட, ரூ.4 கோடி மதிப்புடைய, 4 கிலோ உயர்ரக போதைப் பொருளான, ஹைட்ரோபோனிக் கஞ்சா, சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து, தனியார் பயணிகள் விமானம், நேற்று நள்ளிரவு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்கத் துறை, விமான புலனாய்வுத் துறை அதிகாரிகள் கண்காணித்து கொண்டு இருந்தனர்.

அப்போது வடமாநிலத்தைச் சேர்ந்த சுமார் 30 வயது ஆண் பயணி ஒருவர், தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலாப் பயணியாக சென்று விட்டு, இந்த விமானத்தில் சென்னைக்கு திரும்பி வந்திருந்தார்.
அவரது குடியுரிமையை சோதனை முடித்துவிட்டு, கன்வேயர் பெல்ட் பகுதிக்கு வந்து, சூட்கேஸை எடுத்துக் கொண்டு, தாமாகவே வந்து சுங்க வரி செலுத்தும் வகையிலான எந்த பொருட்களையும் தான் கொண்டு வரவில்லை என்று கூறிவிட்டு, கிரீன் சேனல் வழியாக வெளியே செல்ல முயன்றார்.

எனினும் அவசர அவசரமாக அந்த நபர் செயல்பட்டதை கண்காணித்துக் கொண்டிருந்த சுங்கத்துறை விமான புலனாய்வு அதிகாரிகளுக்கு, அந்தப் பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. இதை அடுத்து விமான புலனாய்வு அதிகாரிகள், அவரை நிறுத்தி, விசாரித்தனர்.
அப்போது அவர், முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதையடுத்து ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள், அந்தப் பயணியை வெளியில் விடாமல் நிறுத்தி வைத்ததோடு, அவரை சென்னை விமான நிலையத்தில் உள்ள சுங்க அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தீவிரமாக விசாரித்தனர். அவருடைய சூட்கேசையும் திறந்து பரிசோதித்தனர்.
அந்த சூட்கேசில் நான்கு பெரிய பார்சல்கள் இருந்தன. அந்தப் பார்சல்களை பிரித்து பார்த்த அதிகாரிகள்,அதிர்ச்சி அடைந்தனர். அதனுள் உயர்ரக போதைப் பொருளான ஹைட்ரோபோனிக் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. நான்கு பார்சல்களிலும் சுமார் 4 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா போதை பொருள் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.4 கோடி என சொல்லப்படுகிறது.
இதை அடுத்து சுங்க அதிகாரிகள் 4 கிலோ ஹைட்ரோபோனிக் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். அத்துடன் வடமாநில கடத்தல் பயணியை, போதைப் பொருள் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
மேலும் விசாரணை செய்தபோது, இந்த நபர் சர்வதேச போதை பொருள் கடத்தும் கும்பலிடம், கடத்தல் குருவியாக செயல்படுவது தெரிய வந்தது. எனவே இவரை, இந்த போதை கடத்தலுக்கு அனுப்பி வைத்த நபர் யார்? இந்தப் போதை பொருளை, சென்னையில் யாரிடம் கொடுப்பதற்காக எடுத்து வந்தார்? என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




Click it and Unblock the Notifications
