காலி மனை உரிமையாளர்களுக்கு அறிவிப்பு.. வடகிழக்கு பருவமழை வருகிறது! சென்னை தாம்பரத்தில் புதிய மாற்றம்
சென்னை: வடகிழக்கு பருவமழை விரைவில் வரப்போகிறது.. இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அக்டோபர் 3வது வாரத்திற்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்கிறார்கள்.. இந்த பருவமழை காலத்தில் தான் தமிழ்நாட்டில் ஆண்டு மழைப்பொழிவில் அதிக மழை அளவு கிடைக்கிறது.. எனவே மழை பாதிப்பும் அதிகமாகவே இருக்கும் என்பதால் அரசு தரப்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் செய்யப்பட்டு வருகின்றன.
வடகிழக்கு பருவமழை வருவதற்கு முன்பேயே பொதுமக்களின் பாதுகாப்பு விஷயங்களில் அரசு கவனத்தை செலுத்தி வருகிறது.. அந்தவகையில் வடகிழக்கு பருவமழையை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சென்னை வடகிழக்கு பருவமழை
சென்னையை பொறுத்தவரை கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.. வடகிழக்கு பருவமழை காலத்தில் தடையை மீறி பேனர்கள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. பொது இடங்கள், சாலையோரங்களில் தடையை மீறி பேனர்கள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
காரணம், எப்போது மழை பெய்தாலும் தாம்பரம் உள்ளிட்ட பகுதிகள் கடுமையான வெள்ள பாதிப்பை உண்டுபண்ணிவிடும்..
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெருங்களத்தூர், சிடிஓ காலனி, கன்னடபாளையம், டிடிகே நகர், சமத்துவ பெரியார் நகர், லட்சுமி நகர், முடிச்சூர் சாலை, செம்பாக்கம், சிட்லபாக்கம், பம்மல், அனகபுத்தூர், ராதா நகர், கீழ்கட்டளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை காலத்தின்போது குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் வெள்ளம் சூழ்வதால், உடமைகளை இழந்து மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
தாம்பரம் சாலைகள் சீரமைப்பு
அதனால்தான், இங்கு மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக சாலைகள் மற்றும் கால்வாய்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில், மழைநீர் வடிகால்களில் படிந்துள்ள கசடுகளை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 5 மண்டலங்களிலும் கனமழையினால் பாதிப்பு ஏற்படும் தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு, அதில் சேதமடையும் சாலைகளை போக்குவரத்திற்கேற்ற வகையில் உடனுக்குடன் சீரமைத்திடும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த வருடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மழைநீர் இணைப்பு கால்வாய்களை இணைத்தல், பழுதடைந்துள்ள மழைநீர் வடிகால்வாய்களை சீரமைத்தல் மற்றும் இணைப்பு கால்வாய் பகுதிகளில் சிறுபாலங்களை சீரமைத்தல், தேவையான இடங்களில் புதிய சிறுபாலங்கள் அமைத்தல் போன்ற பணிகளும் நடந்து வருகின்றன..
மணல் மூட்டைகள் இருப்பு
அதேபோல, தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்திடும் பகுதிகளில் வெள்ள நீரை விரைந்து வெளியேற்ற தேவையான மின் மோட்டார்கள், பொக்லைன் இயந்திரங்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள் போன்ற இதர தளவாட பொருட்கள் மாநகராட்சி சார்பில் கொள்முதல் செய்வது, ஏரிகள் மற்றும் கால்வாய்களில் வெள்ள நீர் வழிந்தோடும் நிலை ஏற்பட்டால், அதற்கு தேவையான மணல் மூட்டைகள் இருப்பு வைத்தல் போன்ற பணிகளும் தயார் நிலையில் உள்ளது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு காலி மனை உரிமையாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் தற்போது விதிப்பு விதிக்கப்பட்டுள்ளன.. இதுகுறித்த அறிவிப்பும் ஒன்றும் வெளியாகியிருக்கிறது.
காலி மனைகள் உரிமையாளர்கள்
அதில், "விரைவில் மழைக்காலம் தொடங்க உள்ளதால், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள காலி மனைகளில் வளர்ந்துள்ள முட்புதர்கள், குப்பை கழிவுகள் மற்றும் கழிவுநீரால் அருகில் வசிக்கும் பொதுமக்களுக்கு மழைக்கால தொற்று நோய்கள் ஏற்படுகிறது.
இதை தடுக்கும் விதமாக அனைத்து காலி மனைகளின் உரிமையாளர்கள் தங்களது மனைகளை சுத்தம் செய்து, நீர் தேங்காமல், மண் உயர்த்தி, வேலி அமைத்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
காலி மனைகளை உரிமையாளர்கள் சுத்தம் செய்ய தவறும் பட்சத்தில் 2016ம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மைத்திட்ட விதிகளின்படியும், 1939ம் ஆண்டு தமிழ்நாடு பொதுசுகாதார சட்ட விதிகளின்படியும், காலி மனை உரிமையாளர்கள் மீது தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்வதுடன் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications