ஒரு நடிகர்கூட பேசவில்லை? வேதனைதான் மிச்சம்! ஹேமா கமிட்டி பற்றி ரேவதி வருத்தம்
சென்னை: ஹேமா கமிட்டிக்கு ஆதரவாகப் பல நடிகர்களிடம் நேரடியாக ஆதரவு கேட்டும் ஒருவர் கூட வெளிப்படையாக வாய் திறந்து ஆதரவு அளிக்கவில்லை என்று நடிகை ரேவதி மிக வேதனையான தகவல் ஒன்றைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்த ஆண்டு சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை கடந்த 25 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள மக்கள் கொண்டாடினார்கள். நடிகர் விஜய் கூட பெண்கள் மீதான வன்முறை பற்றி புகாரளிக்க தனிக் கவனம் செலுத்த நீதிமன்ற அளித்த வழிகாட்டுதலின்படி தனி இணைய தளத்தை உருவாக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார்.

பெண்கள் மீதான பாலியல் பிரச்சினை குறித்து மிகப்பெரிய சர்ச்சை கேரள சினிமா துறையில்தான் நடந்தது. பலர் தங்கள் மீதான பாலியல் சீண்டல்களைப் பற்றிப் புகாரளித்ததைத் தொடர்ந்து கேரள அரசு ஹேமா கமிட்டியை அமைத்தது. அதன் அறிக்கைகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இருந்தாலும் அதில் இடம்பெற்றுள்ள விசயங்கள் கசிந்த போது பெரிய சர்ச்சை வெடித்தது.
அதில் மிகத் தீவிரமாக இயங்கியவர்களில் நடிகை ரேவதி முக்கியமானவர். அவர் இப்போது பெண் என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறார். அதில் அறிவுரை அளிக்கும் குழுவில் இடம்பெற்றுள்ளார். பெண் உரிமையைப் பற்றிப் பேசும் அதே அளவுக்கு அவர் தனது அப்பாவுக்கு உணவு பரிமாறிய புகைப்படம் வைரலாக மாறியது.
இந்நிலையில் பெண் பாதுகாப்பு பற்றி ஒரு தொலைக்காட்சிக்கு ரேவதி அளித்துள்ள பேட்டியில் பல விசயங்களைப் பேசி இருக்கிறார். ரேவதி பேசுகையில், “பெண்கள் பாதுகாப்பு என்பது கல்வியால் மட்டும் கிடைத்துவிடாது. நம் கலாச்சாரம் என்ற ஒன்று இருக்கிறது. வீட்டில் ஒரு குழந்தையை எப்படி வளர்க்கிறோம்? பள்ளியில் பாடத்தைத் தாண்டி என்ன விசயங்களை கற்றுத் தருகிறோம்? இவைதான் மிக முக்கியமானவை. இன்றைக்கு மொபைல் போன் அனைவரின் கையிலும் உள்ளது. அதில் பார்க்க முடியாதது என்று ஒன்று இல்லை. அதை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பது பெரிய பிரச்சினையாக உள்ளது. இந்த விசயங்கள்கூட மனநிலையைச் சிறுவயதிலேயே பாதிக்கிறது.
இன்றைக்குப் பெண்கள் தொழில் மற்றும் கல்விரீதியாக முன்னேறி இருக்கிறார்கள். ஆனால், பல ஆண்கள் முன்னேறவில்லை. பெண்களுக்குச் சம உரிமை கொடுப்பதற்குப் பயப்படுகிறார்கள். பெண்கள் சமமானவர்கள் இல்லை என்ற நம்பிக்கை அவர்களின் மனதிற்குள் இருக்கிறது. அந்த மனப்பான்மை மாற வேண்டும்.
என் அப்பாவின் மனப்பான்மை அப்படி இருந்தது. அதனால்தான் எங்களுக்குப் பிடித்த வாழ்க்கையை நானும் என் தம்பியும் தேர்ந்தெடுத்துக் கொண்டோம். அந்த வாழ்க்கை இடிந்து போய் விழுந்த பிறகும் எங்களை எதிர்த்தார்கள். அது ஏன்? அதற்குக் காரணம் ஆண்களின் மனப்பான்மை. ஆனால், என் அப்பா 'தைரியமாகத் திரும்பி வா நான் இருக்கிறேன். நம்பிக்கையோடு இரு. நான் உன்னுடன் கடைசி வரை உறுதுணையாக இருப்பேன்’ என்று நம்பிக்கை அளித்தார். அதனால்தான் இன்றுவரை நான் உறுதியாக இருக்கிறேன்.
இதே மாதிரியான மனப்பான்மை ஒரு தம்பிக்கும் கட்டிய ஒரு கணவருக்கும் இருந்தால் , பெண்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. நான் சிறுவயதில் 16 கிமீட்டர் சைக்கிளில் டான்ஸ் கிளாஸ் போய் வருவேன். செயிண்ட் தாமஸ் மவுண்ட்டில் இருந்து திருவல்லிக்கேணி வரை சைக்கிளில் போய் தினம் போய் வருவேன். அன்று ஒரு பயமும் எனக்கு இருக்கவில்லை. 1980களில் இருந்த பாதுகாப்பு இப்போது இல்லை. இன்றைக்கு என் குழந்தையை இவ்வளவு தூரம் தனியாக அனுப்பமுடியுமா? இதை நினைத்தால் கவலையாக இருக்கிறது.
கடந்த 30ஆண்டுகள் முன்னால் நான் நடித்த 'மகளிர் மட்டும்’படத்தில் வேலை செய்யும் இடத்தில் பெண்களுக்கு நடக்கும் துன்புறுத்தல்கள் பற்றித்தான் பேசி இருந்தோம். அதைக் கதை இன்றைக்கும் பொருந்திப் போகிறது. வேலை செய்யும் இடங்களின் பெண்களுக்கான பாதுகாப்பு பிரச்சினை நாங்கள் படத்தில் பேசியதைவிட அதிகமாகி இருக்கிறது. விசாகா கமிஷனுக்கு பிறகு பெண்கள் பாதுகாப்புக்கான சட்டங்கள் புதியதாக நடைமுறைக்கு வந்துள்ளன. அலுவலகத்தில் பிரச்சினை என்றால் குழு உள்ளது.
பெண்களின் பாதுகாப்பு என்பது வீட்டில் எப்படி உள்ளது? யாரை வைத்து அதைக் கண்காணிப்பது? சினிமா துறையில் கூட அந்த மாதிரியான புகாரளிக்கும் குழு இல்லை. அங்கேயும் நாங்கள் போராடிக் கொண்டுள்ளோம். பெண் உரிமை பற்றிப் புகாரளிக்கக் குழு தேவை. அதை உருவாக்க வேண்டும். சட்டம் இருக்கிறது. சட்டம் மட்டுமே அதைச் சரி செய்துவிட முடியாது.
மலையாள சினிமா உலகை மாற்ற நாங்கள் முயற்சி செய்தோம். எனக்கு இனிமேல் ஒரு பட வாய்ப்புகூட கிடைக்கவில்லை என்றாலும் என்னால் வாழ்ந்துவிட முடியும். அது ஒரு பிரச்சினையே இல்லை. ஆனால், இளம் நடிகைகளுக்கு அப்படி அல்ல. மாதத்தில் 4 நாட்கள் வேலை இல்லை என்றால் அவர்கள் குடும்பமே பாதிக்கப்படும். என்னை விட ஜூனியர் ஆர்டிஸ்ட் எனக்கு ஆதரவாக உடன் நின்றார்கள். அது என் தைரியத்தைவிட பெரியது. கேரளாவில் வாழ்ந்து கொண்டு, சினிமா துறைக்குள்ளாகவே இருந்த பெண்கள் உடன் நின்றதுதான் பெரிய விசயம்.
அந்த நேரத்தில் பெரிய நடிகர்களிடம் ஆதரவு கேட்டேன். யாரும் பேசவே இல்லை. அது மனதைப் பாதித்தது. இவர்கள் கூட எல்லாம் நாம் சேர்ந்து நடித்தோமே? என்று தோன்றியது. யாரும் கரம் கொடுக்கவில்லை. அவர்களின் பிள்ளைகள் நாளை சினிமா துறைக்குள் வந்து பாதுகாப்பாக வேலை பார்க்க வேண்டாமா? அது மாற வேண்டாமா? எனக் கேட்டேன். ஆனாலும் யாரும் வாய் திறக்கவில்லை. அது மன வருத்தம் அளித்தது” என்று பேசி இருக்கிறார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
“அந்த பாவம் நிம்மதியா வாழ விடாது…” பெத்தவங்களை தவிக்க விடாதீங்க.. உருக்கமாக பேசிய சிவகுமார்! பின்னணி சம்பவம் -
கென் கருணாஸ்க்கு வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் செய்த சிம்பு.. யூத் பட நடிகை நெகிழ்ச்சி போஸ்ட் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
Youth Box Office: டாப் ஹீரோக்களை மிரள வைத்த கென் கருணாஸ்.. யூத் படத்தின் ஐந்து நாள் வசூல் இத்தனை கோடியாம்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம்












Click it and Unblock the Notifications