திமுக, அதிமுக மட்டுமல்ல.. கம்யூனிஸ்ட், காங்கிரசும் விஜய்யை விடலையே! RTI விஷயத்தில் சீறிய தலைவர்கள்!
சென்னை: சட்டம் ஒழுங்கு துறை சார்ந்து இனி தகவல் அறியும் உரிமை சட்டத்தில் (RTI) கேள்வி கேட்க முடியாது என்று முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு புதிய அறிவிப்பை கொண்டு வந்திருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது கூட்டணி கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்ததால், தற்போது இந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டிருக்கிறது.
திமுக செய்தி தொடர்பாளர் சரவணன் இது குறித்து கூறுகையில், "குற்றங்களின் புள்ளிவிவரங்களை பொதுவெளியில் வெளிவராமல் மறைப்பதற்காகவே தற்போதைய அரசு இந்த அரசாணையை கொண்டு வந்திருக்கிறது. இதன் மூலம், சட்டம்-ஒழுங்கு துறைக்கு விலக்கு அளிப்பது, மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய வீரமணி வழக்கு போன்ற முக்கிய வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை பாதுகாப்பதற்கான முயற்சி" என்று விமர்சித்திருந்தார்.

சிபிஎம் எதிர்ப்பு
அதேபோல சிபிஎம் விடுத்திருந்த அறிக்கையில், "அண்மைக் காலங்களில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டங்களில் காவல்துறை அத்துமீறல்கள் மிகக் கடுமையாக வெளிப்பட்டன. கல்லூரி மற்றும் பள்ளி வளாகங்களுக்குள் காவல்துறை நுழைந்து அராஜகத்தில் ஈடுபட்டது. "கண்காணிப்பு அரசாக" பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முடுக்கி விடப்படுகிற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. மக்களின் போராட்ட உரிமைகள் ஒடுக்கப்படுவதன் நீட்சியாகவே இந்த அரசாணையும் அமைந்திருக்கிறது.
மனித உரிமை மறுப்பு
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையே அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதே ஆகும். சாமானிய மக்களின் கைகளில் ஆயுதமாக திகழக் கூடிய தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் முனையை மழுங்கச் செய்யும் இத்தகைய அரசாணை உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும். இது எதேச்சதிகார, பிற்போக்கு, ஜனநாயக விரோத, மனித உரிமை மறுப்பு போக்குகளுக்கே வழி வருக்கும் என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு அழுத்தமாக சுட்டிக்காட்டுகிறது" என்று தெரிவித்திருந்தது.
அதேபோல பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், "தகவல்களை பெறும் அடிப்படை உரிமையை மக்களிடமிருந்து தமிழக அரசு பறித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
அன்புமணி ராமதாஸ்
தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையின்படி, சட்டம் - ஒழுங்கின் கூறுகளாகக் கருதப்படும் சாதி, மத மோதல்கள், தடுப்புக்காவல் சட்டத்தின்படியான கைது நடவடிக்கைகள், சட்டம் - ஒழுங்கு குறித்த விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகள், கைதிகளின் மரணம், காவல்துறை விசாரணை அறிக்கைகள் ஆகியவை இனி தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி வழங்கப்படாது. மக்களவை மற்றும் மாநிலங்களவைகளில் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான கேள்விகளுக்கு அளிக்கப்படும் பதில்கள், மாணவர், விவசாயி மற்றும் அரசியல் கட்சியினர் உள்ளிட்டோரின் போராட்டம் குறித்த தரவுகளைப் பெறவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் அபத்தமானது ஆகும்.
உடனே திரும்பப்பெற வேண்டும்
சட்டம் - ஒழுங்கு தொடர்பான அரசின் தோல்விகளை மூடி மறைப்பது தான் இந்த அரசாணையின் நோக்கம் ஆகும். இது தவறு. இந்த தகவல்கள் தான் ஒரு மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்பதை அளவிடுவதற்கான கருவி ஆகும். தரவுகளை வெளியிட தடை விதிப்பதற்கு பதிலாக சட்டம் - ஒழுங்கை மேம்படுத்துவதற்காக இந்த தரவுகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
திருமாவளவன் கண்டனம்
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், "சட்டம் ஒழுங்கு தொடர்பாக 'தகவல்கள் ஏதும் கேட்க முடியாதென' , தமிழ்நாடு அரசின் பொதுத்துறை சார்பில் அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இது மனித உரிமைகளை நசுக்குவதற்கு வழிவகுக்கும். எனவே, அரசு இதனை உடனே திரும்ப பெறவேண்டுமென வலியுறுத்துகிறோம்" என்று கூறியிருந்தார்.
காங்கிரஸ் கடும் அதிருப்தி
காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறுகையில், "தகவல் அறியும் உரிமை சட்டத்தை இன்னும் விரிவுபடுத்த வேண்டுமே தவிர, இப்படி சுருக்குவது ஒரு மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும்" என்று விமர்சித்திருந்தார். அதேபோல அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமமுக தலைவர் டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
