பாஜகவில் நடக்கும் செயல்கள் திருப்தியாக இல்லை.. டிடிவி தினகரன், ஓபிஎஸ் விவகாரத்தில் அண்ணாமலை ஓபன்
சென்னை: பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம், அமமுக தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் விலகியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகளே காரணமே டிடிவி தினகரன் பரபரப்பு குற்றம்சாட்டியிருந்தார். டிடிவி தினகரனின் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில், பாஜக கூட்டணியில் கடந்த சில நாட்களாக நடக்கும் நிகழ்வுகள் திருப்தி அளிக்கவில்லை என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அமமுக தலைவர் டிடிவி தினகரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். ஏற்கனவே ஓ.பன்னீர் செல்வம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய நிலையில், தற்போது டிடிவி தினகரனும் பிரிந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

கூட்டணியில் இருந்து விலகல்
டிடிவி தினகரன், கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு பாஜக காரணம் இல்லை. தொண்டர்களின் முடிவுகளின் காரணமாகவே வெளியேறினோம். தேசிய ஜனநயாக கூட்டணியை அண்ணாமலை நல்ல முறையில் கையாண்டார். ஆனால் நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியை கையாளத் தெரியவில்லை. பிரதமர் மோடியை ஓ.பன்னீர்செல்வம் சந்திக்காத விவகாரத்தில் நயினார் நாகேந்திரனின் கொடுத்த பதில் மிகவும் ஆணவமிக்கது. பாஜக கூட்டணியில் இருந்து ஓ.பி.எஸ். வெளியேறியதற்கு நயினாரின் செயல்பாடுகளே காரணம் என்று தெரிவித்திருந்தார்.
நயினார் மறுப்பு
இதைத்தொடர்ந்து, கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் வெளியேற நான் காரணம் இல்லை என்று டிடிவி தினகரனின் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் பொறுமை காக்க வேண்டும் என்றும், பாஜக கூட்டணியில் கடந்த சில நாட்களாக நடக்கும் நிகழ்வுகள் திருப்தி அளிக்கவில்லை என்றும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பொறுமை அவசியம்
சென்னையில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: திமுக ஆட்சி தமிழகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பது மட்டுமே நோக்கம். பாரதிய ஜனதா கட்சி 2024 ஆம் ஆண்டில் அமைத்த கூட்டணி இது. எல்லோரும் ஒருமித்த கருத்துடன் பாஜகவுக்கு வந்திருந்தனர். அதனால், டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் கொஞ்சம் பொறுமையுடன் இருக்க வேண்டும் என்பதே பாஜகவின் தொண்டனாக எனது வேண்டுகோள்.
மாறிய அரசியல் களம்
விஜயின் சுற்றுப் பயணம் செப்டம்பர் 13 ஆம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தில் சீமானும் பல்வேறு கருத்துகளை வலிமையாகப் பேச ஆரம்பித்துவிட்டார். எப்போதும் இல்லாத களச் சூழல் இன்றைக்கு இருக்கிறது. எப்போதுமே இரண்டு முனைப் போட்டி மட்டுமே தமிழகத்தில் வலிமையாக இருக்கும். தமிழகத்தில் மூன்றாவது அணி சாத்தியமா. மூன்றாவது, நான்காவது அணி இங்கு வலிமையாக இருக்குமா என்று அடுத்த இரண்டு மூன்று மாதத்தில் நமக்குத் தெரியவரும்.
திருப்தியாக இல்லை
டிடிவி தினகரன் எப்போதுமே பிரதமர் மோடி மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கக்கூடிய மனிதர். அதற்கான காரணம் குறித்து ஏற்கனவே தஞ்சாவூரில் பேசிய போதும் கூறினேன். அதனால், பொறுமை காப்பது நல்லது. நல்ல ஒரு இலக்கில், சரியான ஒரு முறையில் பயணம் செய்ய வேண்டும். கடந்த இரண்டு, மூன்று நாட்களாக நடக்கும் செயல்கள் எனக்கும் திருப்தியாக இல்லை.
சலிப்பை ஏற்படுத்துகிறது. சரியான பாதையில் தேசிய ஜனநாயக கூட்டணி செல்லும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. புதிதாக ஒரு கட்சியை கூட்டணிக்கு அழைப்பதை விட, இருப்பதை வைத்து, கூட்டணியை எப்படி வலுப்படுத்த வேண்டும் என்பதை தான் பார்க்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications