தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜனுக்கு.. ஆதரவாக இந்தியில் நோட்டீஸ்.. வாக்காளர்கள் குழப்பம்
சென்னை: தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜனுக்கு ஆதரவாக ஆவடி தொகுதியில் விநியோகிக்கப்பட்ட நோட்டீஸ்கள் இந்தியில் இருந்ததால் மொழி புரியாமல் வாக்காளர்கள் குழப்பமடைந்தனர்.
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு என அனைத்தும் முடிந்துவிட்டதால், தீவிர பிரசாரத்தில் அனைத்து வேட்பாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.
ஒவ்வொரு வேட்பாளரும் தொகுதியில் உள்ள அனைத்து வாக்காளர்களையும் சென்றடைய பல்வேறு யுக்திகளைப் பயன்படுத்தி வருகிறார்கள். சாலையோர கடைகளில் டீ குடிப்பது, கம்பு சுற்றுவது, கபடி ஆடுவது என வாக்காளர்களைக் கவர முயன்று வருகின்றனர்.

கே பாண்டியராஜன்
இந்த முறை ஆவடி தொகுதியில் அதிமுக சார்பில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே பாண்டியராஜன் போட்டியிடுகிறார். இவர் ஆவடி தொகுதியில் போட்டியிடுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் நாசரை சுமார் 1,500 வாக்குகள் வித்தியாசத்தில் பாண்டியராஜன் தோற்கடித்தார்.

இந்தியில் நோட்டீஸ்
இந்த முறையும் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை அடைய வேண்டும் என்பதற்காக பாண்டியராஜன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அமைச்சர் பாண்டியராஜனுக்கு ஆதரவாக ஆவடி பகுதியில் நோட்டீஸ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அதில் தமிழுக்குப் பதில் இந்தியில் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. நோட்டீஸ்கள் இந்தியில் இருந்ததால் மொழி புரியாமல் அங்கிருந்த வாக்காளர்கள் குழப்பமடைந்தனர்.

இரட்டை இலை
அதில் எம்ஜிஆர், ஜெயலலிதா, நரேந்திர மோடி ஆகியோரது புகைப்படங்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஒ பன்னீர் செல்வத்தின் புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன. மேலும், கூட்டணிக் கட்சித் தலைவர்களின் புகைப்படங்களும் அதில் இடம் பெற்றிருந்தன. அதில் ஆவடி தொகுதியில் போட்டியிடும் பாண்டியராஜனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என்பது போன்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

என்ன காரணம்
ஆவடி தொகுதியில் அதிகளவு தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இதில் வடநாட்டைச் சேர்ந்த கணிசமான தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் கணிசமானவர்களுக்கு ஆவடி தொகுதியில் வாக்களிக்கும் உரிமை உள்ளதால், அவர்களைக் கவரும் வகையில் இந்தியில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது












Click it and Unblock the Notifications