நவம்பர் 1 தமிழ்நாடு நாள்.. ஆண்டுதோறும் கொண்டாட அரசு அறிவிப்பு.. சென்னையில் நாளை என்ன ஸ்பெஷல்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் தொடர்பாக தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்று கவனம் பெற்றுள்ளது. வருடந்தோறும் நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாடப்படும் என்ற அறிவிப்புடன், சென்னையில் நாளை நடைபெற உள்ள விழாவில் 5 தமிழறிஞர்கள், 179 மாணவர்கள், 76 அறிஞர்களுக்கு என்னென்ன சிறப்புகள் காத்திருக்கின்றன தெரியுமா?

இந்தியாவில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை சுதந்திரத்துக்குப் பிறகு வலுப்பெற்றது. குறிப்பாக, ஆந்திராவை சேர்ந்த பொட்டி ஸ்ரீராமுலு, தெலுங்கு பேசும் மக்களுக்காக தனி மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்று உண்ணாவிரதமிருந்தார்.. அந்த உண்ணாவிரதத்திலேயே இறந்தும் போனார்.. இதையடுத்து 1953-ம் ஆண்டு ஆந்திரா தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது.

Tamil Nadu Day November 1 Tamil Nadu Government 1

உருவானது மெட்ராஸ்

தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் எழுந்த கோரிக்கைகளின் அடிப்படையில் 1956-ம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டன. அதன்படி, 1956 நவம்பர் 1-ம் தேதி சென்னை மாகாணத்துடனிருந்த தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் மக்கள் வாழ்ந்த பகுதிகள் முறையே ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுடன் இணைக்கப்பட்டன. இதன் மூலம் இன்றைய தமிழ்நாட்டின் நிலப்பரப்பைக் கொண்ட மெட்ராஸ் மாநிலம் உருவானது.

இதனால் நவம்பர் 1-ம் தேதி என்பது தமிழ்நாட்டின் மாநில உருவாக்கத்துடன் தொடர்புடைய முக்கியமான நாளாகப் பார்க்கப்படுகிறது. அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகியவையும் இந்த நாளில் தங்களது மாநில தினத்தைக் கொண்டாடி வருகின்றன.

தமிழ்நாடு பெயர் வந்தது எப்படி?

1956-ல் மெட்ராஸ் மாநிலம் உருவானாலும், அதன் பெயர் உடனடியாக தமிழ்நாடு என்று மாறவில்லை. மெட்ராஸ் மாநிலம் என்ற பெயரிலேயே தொடர்ந்து அழைக்கப்பட்டு வந்தது.

பிறகு பேரறிஞர் அண்ணா முதலமைச்சரான பிறகு, மெட்ராஸ் மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதற்கான தீர்மானம் 1967-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து 1969-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி முதல் தமிழ்நாடு என்ற பெயர் நடைமுறைக்கு வந்தது.

இதனிடையே, 2019-ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவித்தது. ஆனால், 2021-ல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு ஜூலை 18-ம் தேதியை தமிழ்நாடு நாளாகக் கொண்டாட முடிவு செய்தது. மாநிலத்தின் பெயர் மாற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அன்புமணி வலியுறுத்தல்

இந்த விவகாரத்தில், பாமக தொடர்ந்து நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு நாளாகக் கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. தவெக ஆட்சிக்கு வந்த பிறகும் ஜூலை 18-ம் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் அறிவிக்கப்பட்டபோது அன்புமணி ராமதாஸ் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

ஜூலை 18-ம் தேதி வாழ்த்துச் செய்தி வெளியிட்ட முதலமைச்சர் விஜய், "மெட்ராஸ் மாநிலம் உருவான நவம்பர் 1-ம் நாளையும் 'தமிழ்நாடு' பெயர் சூட்டும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ஆம் நாளையும் அரசு கொண்டாடும்" என்று அறிவித்திருந்தார். இருந்தாலும், நவம்பர் 1 கொண்டாட்டத்துக்கு, அதற்கான ஏற்பாடுகள் குறித்த அறிவிப்பு வெளியாகாதது குறித்தும், நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும் என்றும் கோரி, நேற்றைய தினமும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

நாளை சென்னையில் தமிழ்நாடு நாள்

இப்படிப்பட்ட சூழலில், 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளை பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 1-ம் தேதி 'தமிழ்நாடு நாள்' என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, "முதலமைச்சரின் அறிவிப்பிற்கிணங்க தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நாளை (நவம்பர் 1, ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை அருங்காட்சியக அரங்கத்தில் தமிழ்நாடு நாள் விழா நடைபெற உள்ளது.

இந்த விழாவில் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்க உள்ளார். 5 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை செய்தமைக் கான நூலுரிமைத்தொகை வழங்கிடவும், திருக்குறள் முற்றோதல் செய்த 179 மாணவர்களுக்குப் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிடவும், தமிழ் செம்மல் விருதுகள் 76 அறிஞர்களுக்கு வழங்கியும் சிறப்பிக்க உள்ளார்.

தமிழ்நாடு நாள்

மேலும், நவம்பர் 1ம் நாள் மாலை தமிழ்நாடு நாள் விழாவையொட்டி கலை பண்பாட்டுத் துறை வாயிலாக நாட்டுப்புறக் கலைஞர்களைக் கொண்டு கலை நிகழ்ச்சிகள் பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காக்களில் சிறப்பான முறையில் நடத்தப்படும். தமிழ்நாடு நாள் விழாவினையொட்டி, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு மாநில மற்றும் மாவட்ட அளவில் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்குப் பரிசுத்தொகை வழங்கப்படும்" இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+