"உயிருக்கு மிரட்டல்.." செல்வப்பெருந்தகை வீட்டுக்கு.. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கும் செல்வப்பெருந்தகை தனக்கு மிரட்டல் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷ்னர் அருணை நேரில் சந்தித்து புகார் அளித்திருந்தார். இதையடுத்து செல்வப்பெருந்தகை வீட்டில் இப்போது 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது..
கடந்த ஜூலை 5ம் தேதி இரவு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்டிராங் பெரம்பூரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் அவரது வீட்டின் முன் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை பலரைக் கைது செய்து அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இது கொலை வழக்கில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
ஆம்ஸ்டிராங் படுகொலை: இந்த படுகொலை சம்பவம் அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. மேலும், அதிகாரிகள் பலரும் கூட இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கிடையே ஆம்ஸ்டிராங் படுகொலை சம்பவத்தைச் சுட்டிக்காட்டி தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்திருந்த காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, பாஜகவில் நிறைய ரவுடிகள் உள்ளனர் என்று கூறியிருந்தார்.
அண்ணாமலை: அதற்கு மீண்டும் பதிலடி கொடுத்த அண்ணாமலை, செல்வப்பெருந்தகை முன்பு ரவுடி பட்டியலில் இருந்தவர் என்றும் தமிழ்நாட்டில் உள்ள ரவுடிகளை எல்லாம் செல்வப்பெருந்தகை தான் கண்காணித்து வருகிறாரா? என்று கேள்வி எழுப்பினார். மேலும், அவர் ஒரு முன்னாள் ரவுடி என்ற வகையில் அவருக்கு ஒரு தொடர்பு இருக்கிறதா? என்பதை போலீசார் விசாரிக்க வேண்டும் என்றார்.
செல்வப்பெருந்தகை: இதற்கு மறுப்பு தரும் வகையில் செல்வப்பெருந்தகை, "நான் ரவுடி பட்டியலிலிருந்தவன் என்பதை அண்ணாமலை நிரூபிக்க வேண்டும். எந்த போலீஸ் நிலையத்திலாவது ரவுடி பட்டியலில் எனது பெயர் இருக்கிறதா? என் மீது அவதூறு பரப்புகிறார்.. அண்ணாமலை இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால், அவர் மீது சட்டப்படி வழக்கு தொடர்வேன்.. 20 ஆண்டுகள் முன்பாக ஆர்எஸ்எஸ் ஆட்களின் சிபாரிசு பேரில் என் மீது 4 வழக்குகளைப் போட்டார்கள்" என்று அவர் கூறியிருந்தார். இப்படி இரு தரப்பும் மாறி மாறி விமர்சித்து வந்தனர்.
நேரில் சந்தித்து புகார்: இதற்கிடையே பாஜக தலைவர் அண்ணாமலையை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷ்னர் அருணை நேரில் சந்தித்து புகார் கொடுத்தார் செல்வப்பெருந்தகை. ஆனால், "வன்கொடுமை சட்டத்தில் கைது செய்கிற அளவுக்குப் புகாரில் வலிமை இல்லை" என்று கூறிவிட்டார் அருண்.
இதனைத் தொடர்ந்து, "எனக்கு மிரட்டல் இருக்கிறது ; போலீஸ் பாதுகாப்பு வேண்டும் " என்று செல்வப்பெருந்தகை கோரிக்கை வைக்க, "உங்கள் கோரிக்கையை அரசுக்குத்தான் தெரிவிக்க வேண்டும் " என்று கூறியிருக்கிறார் கமிஷ்னர் அருண்.
போலீஸ் பாதுகாப்பு: இந்த நிலையில், அரசிடம் தனது கோரிக்கையைக் கடிதமாக அனுப்பியிருக்கிறார் செல்வப்பெருந்தகை. இதனைப் பரிசீலித்த தமிழக அரசு, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுக்க அனுமதித்துள்ளது. இதனைத்தொடர்ந்து செல்வப்பெருந்தகைக்கு காவலர் ஒருவர் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications