விஜய் மட்டுமே டார்கெட்.. இடைத்தேர்தலில் சீமான் போடும் கணக்கு.. திமுக, அதிமுக உடன் டீல் ஓவர்!
சென்னை: அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் விஜய்யை மட்டுமே கடுமையாக விமர்சிக்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முடிவு எடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. திமுக, அதிமுக வேட்பாளர்களை அறிவித்தாலும், தவெகவை மட்டுமே விமர்சிக்க நாதக தலைமை ஆலோசித்துள்ளது. இதன் பின்னணி தொடர்பாக முழுமையாக பார்க்கலாம்.
அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் களமிறங்க உள்ளார். இதனால் அம்பாசமுத்திரம் தொகுதியில் நாதகவின் கட்டமைப்பை வலுப்படுத்தி வருகின்றனர். மறுபக்கம் தவெக சார்பாக போட்டியிட உள்ள இசக்கி சுப்பையா கிராமங்களில் வாக்கு சேகரிக்க தொடங்கிவிட்டார். கிறிஸ்தவர்களின் வாக்குகளை கைப்பற்ற பல்வேறு தேவாலயங்களுக்கு சென்று வருகிறார்.

கிறிஸ்தவ தலைவர்கள், பாதிரியார்களை கொண்டு அவர்களின் வாக்குகளை கைப்பற்றுவதில் தீவிரமாக இயங்குகிறார். இந்த தொகுதியில் சீமான் வெற்றி பெற நாடார் மற்றும் முக்குலத்தோர் சமூக வாக்குகளை கணிசமாக கைப்பற்றினால் மட்டுமே முடியும். இதனால் ராக்கெட் ராஜா ஆதரவை சீமான் நாடி இருக்கிறார். அதேபோல் முக்குலத்தோர் வாக்குகளை கைப்பற்ற மனைவி கயல்விழியை பிரச்சாரத்தில் இறக்க உள்ளார்.
அதுமட்டுமல்லாமல் சாட்டை துரைமுருகனுக்கு தொகுதி பொறுப்பாளர் பதவி அளிக்கப்பட உள்ளது. இருப்பினும் தொகுதி சீமானுக்கு ஆதரவாக மாறவில்லை. திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளின் ஆதரவு இல்லாமல் வெல்வது கடினம் என்பதை சீமான் உணர்ந்துள்ளார். இதனால் திமுக, அதிமுக ஆதரவை பெற தீவிரமாக உள்ளார்.
ஆனால் இரு கட்சிகளும் சீமானை பொது வேட்பாளராக ஏற்க வாய்ப்பில்லை. இரு தரப்புமே தங்கள் கூட்டணியில் இணையுமாறு சீமானுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். அதேபோல் நாதக நிர்வாகிகளும் இந்த இடைத்தேர்தலோடு தனித்துப் போட்டி என்ற முடிவை கைவிட வேண்டும் என்று தீவிரமாக வலியுறுத்தி வருகின்றனர்.
அவர்களின் ஆலோசனையை கேட்கும் எண்ணத்திற்கு சீமான் இறங்கி வந்திருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த சட்டசபைத் தேர்தல் அல்லது லோக்சபா தேர்தலில் திமுக அல்லது அதிமுக ஆகிய இரு கட்சிகளில், எந்தக் கட்சி தேசிய கட்சிகளுடன் கூட்டணியில் இல்லாமல் இருக்கிறதோ, அவர்களுடன் கூட்டணி அமைக்கும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் இடைத்தேர்தல் தொடங்கி அடுத்தடுத்து தவெக மற்றும் விஜய்யை மட்டுமே விமர்சிக்க சீமான் முடிவு எடுத்துள்ளார். திமுக, அதிமுக கட்சிகள் மீது பெரிதாக விமர்சனத்தை முன் வைக்காமல், கடந்து செல்லவும் நாதக தலைமை முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. இதன் மூலமாக மட்டுமே கட்சியை காப்பாற்ற முடியும் என்று சீமான் கருதுவதாகவும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications
