90 நிமிட சாலை பயணத்திற்கே ஹெலிகாப்டரா? ஆண் ஜெயலலிதா என நினைப்பு! விஜய்யை விமர்சித்த நாதக நிர்வாகி
சென்னை: கோவை விமான நிலையத்தில் இருந்து தாராபுரத்திற்கு செல்ல வெறும் 90 நிமிடங்களே பயணம் என்ற நிலையில் முதல்வர் விஜய் ஹெலிகாப்டரில் பயணிப்பதன் மூலம் தன்னை ஆண் ஜெயலலிதா என நினைத்துக் கொள்வதாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கூட்டணிக் கட்சித் தலைவர்களோடு மேடையேறாதது, 90 நிமிட சாலைப் பார்க்கப் பயணத்திற்கே ஹெலிகாப்டரைப் பயன்படுத்துவது எனத் தன்னை ஒரு ஆண் ஜெயலலிதாவாகவே நினைத்துக் கொள்ளகிறார் முதல்வர் விஜய்.

அம்மையார் ஜெயலலிதாவிடம் ஆணவம், அகம்பாவம், எதேச்சதிகாரப்நோக்கு எல்லாம் இருக்கும். அதையெல்லாம் தாண்டி, அந்த அம்மையாரிடம் அதீத துணிவு எப்போதும் உண்டு. அதுதான் அவருடைய தனித்துவம்.
அந்தத் துணிவு எல்லாம் இந்தத் தொடை நடுங்கிக்கு சுட்டுப் போட்டாலும் வராது. இவ்வாறு இடும்பாவனம் கார்த்திக் குறிப்பிட்டுள்ளார்.
மதுராந்தகம், தாராபுரத்தில் வரும் 6ஆம் தேதி சட்டசபை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் அந்த தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர்களும், முன்னாள் அமைச்சர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமாவை ஆதரித்து முதல்வர் விஜய் பிரச்சாரம் செய்துள்ளார். மேலும் நேற்று முன் தினம் மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 40 கிராமங்களில் ரோடுஷோ சென்றார்.
அப்போது அவருக்கு வழிநெடுகிலும் மக்கள் வரவேற்றனர். வழியில் கட்சியினர் தரும் பரிசு பொருட்களை விஜய் வாங்கிக் கொண்டார். மக்கள் கூடும் இடங்களில் அவர்களிடம் போய் நலம் விசாரித்தார்.
பின்னர் டீக்கடையில் டீக்குடித்துக் கொண்டே ஊர் பெரியவர்களிடம் பேசினார். மேலும் ராமாபுரத்தில் விவசாய டிராக்டரை ஓட்டி பார்த்தார். ஈர நிலத்தில் லாவகமாக அவர் டிராக்டரை ஓட்டி சாலை பகுதிக்கும் கொண்டு வந்தார். இவ்வாறு சுமார் 4 முதல் 5 மணி நேரம் ரோடு ஷோ செய்த அவர் தனது பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார்.
அது போல் இன்றைய தினம் தாராபுரத்தில் வேட்பாளர் சத்தியபாமாவுடன் விஜய் ரோடு ஷோ செய்தார். இன்றுடன் பிரச்சாரம் ஓய்வு பெறும் நிலையில் விஜய் தாராபுரத்தில் மாருதி நகர் முதல் மூலனூர் வரை சுமார் 30 கி.மீ. தூரம் சாலை வலம் செல்கிறார்.
அப்போது அலங்கியம் என்ற பகுதியில் முதல்வர் விஜய் பேசுகையில், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. என் சொந்தங்களை எப்போது வேணாலும் பார்ப்பேன். நான் ஓட்டு கேட்க மட்டும் இங்கு வரவில்லை, உங்களை எல்லாம் பார்த்துவிட்டு செல்ல வந்துள்ளேன்.
நான் பயம் காரணமாக உங்களை பார்க்க வந்துள்ளதாக ஸ்டாலின் சொல்கிறார். திமுக தலைவர் ஸ்டாலின், தவெக வேட்பாளர் சத்தியபாமாவை காது கொடுத்து கேட்க முடியாத வார்த்தைகளால் பேசியுள்ளார். திமுக, மற்றும் பலருக்கு வாக்களித்தால் ஆபாசமாக பேசுவதை ஆதரிப்பது போல் ஆகிவிடும். தோற்ற பிறகு சொல்லும் கோடானு கோடி நன்றியை ஸ்டாலினும் உதயநிதியும் இப்போதே சொல்லிவிட்டனர். இவ்வாறு விஜய் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
